Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமேசுவரத்தில் பாலிதீன் பைகளுக்குத் தடை: இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை

Print PDF

தினமணி 22.01.2010

ராமேசுவரத்தில் பாலிதீன் பைகளுக்குத் தடை: இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை

ராமேசுவரம், ஜன.21: ராமேசுவரம் தீவில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்து கோயில் மற்றும் சுற்றுலா இணையதளத்தில் தகவல் வெளியிடப்படும் என துணை ஆட்சியர் ஜெயராமன் தெரிவித்தார்.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாலிதீன் பை மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் ராமேசுவரம் தீவு முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இதனால் நிலத்தடி நீர், மன்னார் கடலில் வாழும் அபூர்வ கடல் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு ஒவ்வாமை எனும் நோய் உருவாகுகிறது.

இதையடுத்து புனித தலமான ராமேசுவரம் தீவில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த கூடாது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பனில் 60 சதவீதம் பாலிதீன் பைகள், கப்புகள் ஒழிக்கப்பட்டன.

இதை 100 சதவீதமாக மாற்றுவது குறித்து ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தில் துணை ஆட்சியர் ஜெயராமன் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தாசில்தார் ரவீந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், பெட்காட் மாநிலப் பொருளாளர் ஜெயகாந்தன், ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் நுகர்வோர் இயக்கத் தலைவர்கள் அசோகன், யூ.அருளானந்தம், பாண்டி, விபத்து மீட்பு சங்கச் செயலர் மகேஸ்வரன், யாத்திரை பணியாளர் சங்க துணைச் செயலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் பேசியது:

ராமேசுவரம் தீவில் இனிமேல் பாலிதீன் பை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அலுவலகம், கோயில், பள்ளிக் கூடங்களில் பாலிதீன் பை பயன்பாடு முற்றிலும் இல்லை.

இன்னும் ஒரு சில கடைகள் மற்றும் பகுதியில் பாலிதீன் பொருள்கள் விற்கப்படுவதாகத் தகவல் வருகிறது.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தத் தீவில் பாலிதீன் பொருளுக்கு தடைவிதிக்கப்பட்டது குறித்து அரசு சார்ந்த கோயில், சுற்றுலா துறை இணையதளத்தில் தகவல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விஷயத்தில் மீனவர்கள், வியாபாரிகள், பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Last Updated on Friday, 22 January 2010 10:53