Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுப் போட்டிகள்

Print PDF

தினமணி 08.02.2010

பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுப் போட்டிகள்

நாகர்கோவில்
, பிப். 7: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பூ. கிருபானந்த ராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைகளில் ஊடு எரிபொருளாக பயன்பாடு குறித்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சட்ட விதிகளுக்கு உள்படாத ஒருமுறை பயன்படுத்தப்பட்டு பின்னர் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்ட மாவட்டமாக வரும் 1.4.2010 முதல் குமரி மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்படவுள்ளது.

இதன் ஒருபகுதியாக பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பவர் பாயின்ட் விளக்கப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் அனைத்து மாணவர்களும் பொதுமக்களும், சங்கங்களும் பங்கேற்கலாம்.

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு தலைப்பில் 15 முதல் 20 வரையிலான நிலை படங்களும் (சிலைடுகள்), மேலும் இடையிடையே ஒவ்வொன்றும் ஏறத்தாழ 1 நிமிஷம் வரை ஓடக்கூடிய 5 காட்சிப் படங்களும் ( விடியோ) கொண்டதாக இருக்க வேண்டும். பயன்படுத்தப்படும் நிலைபடங்கள் தெளிவாகவும், சொந்த முயற்சியில் உருவானதாகவும் இருத்தல் நல்லது.

பவர் பாயின்ட் விளக்கத்தில் சொல்லப்படும் செய்தியானது, பிளாஸ்டிக் தோற்றம், பயன்பாடு, தீமைகள், சுற்றுச்சூழல் கேடுகள், தவிர்ப்பு, மாற்றுப் பொருள்கள் வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்போர் தாங்கள் தயார் செய்த பவர் பாயின்ட் மென் நகலை குறுந்தகட்டில் பதிவு செய்தும், அதன்மீது தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் எழுதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம் 2215, பார்வதவர்த்தினி தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிக்னல் அருகில், நாகர்கோவில் என்ற முகவரிக்கு வரும் 10-ம் தேதி மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும்.

இப் போட்டியில் தெரிவு செய்யப்படும் சிறந்த முதல் 3 பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பவர் பாயின்ட் விளக்கத்துக்கு மாவட்ட ஆட்சியரால் பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும் அளிக்கப்படும் என்றார் கிருபானந்த ராஜன்

Last Updated on Monday, 08 February 2010 10:12