Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கத் திட்டம்

Print PDF

தினமணி 12.02.2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கத் திட்டம்

கோவை, பிப்.11: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி கோவையை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் கூறினார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கோவை கோஇண்டியா அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:

தமிழகத்தில் சுமார் 1,000 வார்ப்படத் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 700 தொழிற்சாலைகள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ளன. இவற்றில் 70 சதவீத ஆலைகள் குப்போலோ முறையிலும், 30 சதவீத ஆலைகள் இன்டக்ஸன் முறையிலும் உலைகளைக் கொண்டுள்ளன.

கோவையில் சுமார் 150 வார்ப்படத் தொழிற்சாலைகள் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியில் இயங்கி வந்தன. இதில் 92 தொழிற்சாலைகள், சிறப்புத் தொழில் மற்றும் அபாயகரமான நில வகைப்பாட்டிற்கு மறுவகைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.

இவற்றில் 40 ஆலைகளை வேறு இடத்துக்கு மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இத் தொழிற்சாலைகளுக்கு இடம் வழங்க அரசூர், குன்னத்தூர் கிராமங்களில் தொழில் வளாகத் திட்டம் 2008}ல் துவக்கப்பட்டது.

இவற்றில் இதுவரை 46 வார்ப்படத் தொழிற்சாலைகள் அமைக்க இசைவு ஆணையை மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ளது. குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் உரிய கட்டுப்பாடு சாதனங்கள் இல்லாமல் இயங்கி வந்த 23 வார்ப்படத் தொழிற்சாலைகளுக்கு மூடுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளன.

மின்முலாம் தொழிற்சாலைகளில் அபாயகரமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், அதிலிருந்து வெளியேறும் கழிவுகளும் அபாயகரமானதாக கருதப்படுகிறது. எனவே, இத் தொழிற்சாலைகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளியேறும் கழிவுகளை குறைக்கும் செய்முறைகளைப் பின்பற்றவும், எதிர் சவ்வூடு முறை சுத்திகரிப்பு மூலம் கழிவுநீரை மறுசுழற்சி செய்யவும், சுத்திகரிப்பு முறையின் இறுதி வெளியேற்றத்துக்காக ஆவியாக்குதல் முறையை பின்பற்றவும் இத் தொழிற்சாலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசு இல்லாத நகரமாக இருந்தால் தான் மக்கள் சுகாதாரமாக வாழ முடியும். எனவே, தொழிற்சாலைகள் மாசுவை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டும். கோவையில் ஜூன் இறுதியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளது.

எனவே, கோவையை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாவட்ட நிர்வாகம் இணைந்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார். ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் செயலர் இரா.ராமச்சந்திரன், தொழில் வணிக இயக்குநர் ஜி.சுந்தரமூர்த்தி, ஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலர் அலுவலர் டி.சபீதா, மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 February 2010 10:29