Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிற மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி: சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் தகவல்

Print PDF

தினமலர் 15.02.2010

பிற மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி: சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் தகவல்

திருநெல்வேலி:பிற மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி செயல்படுத்தப்படும் என நெல்லை மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் கல்விச் சுற்றுலா நிகழ்ச்சி துவக்க விழாவில் சுற்றுச் சூழல் அமைச்சர் மைதீன்கான் பேசினார்.பள்ளி மாணவ, மாணவிகளிடையே மரம் வளர்ப்பு, காடு வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட பள்ளிகளில் பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றத்தில் அங்கம் வகிக்கும் மாணவ, மாணவிகள் இந்த சுற்றுலா முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். நெல்லை, சேரன்மகாதேவி, தென்காசி கல்வி மாவட்டங்களை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் குற்றாலம், கண்ணுப்புளிமேடு, தென்மலை, ஆழ்வார்குறிச்சி சுற்றுச்சூழல் அறிவியல் மையம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஒரு கல்வி மாவட்டத்திற்கு 2 பஸ்கள் வீதம் 6 பஸ்களில் மாணவ, மாணவிகள் நேற்று சுற்றுலா புறப்பட்டனர். 22 ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டியாக சென்றனர்.

நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் சுற்றுலா முகாம் துவக்க விழா நடந்தது. அமைச்சர் மைதீன்கான் தலைமை வகித்து பேசுகையில், "மாணவர்கள் தான் வருங்காலத்தை நடத்தக் கூடிய சக்தி. நோய் வராமல் இருக்க பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது போல் எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இன்று மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக இதுபோன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துவங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் உபயோகத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு பணி மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். மறுசுழற்சிக்கு தகுதியில்லாத பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார்'.நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் சசிகலா வரவேற்றார். நெல்லை எம்.பி., ராமசுப்பு, எம்.எல்.., மாலைராஜா, துணைமேயர் முத்துராமலிங்கம், சேர்மன் சுப்பிரமணியன், ஆசிரியர்கள் விஜயலெட்சுமி, செல்வின் சாமுவேல், ஜோசப், கணபதிசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு நன்றி கூறினார

Last Updated on Monday, 15 February 2010 06:35