Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு விழாக்களில் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க ஆட்சியர் உத்தரவு

Print PDF

தினமணி 17.02.2010

அரசு விழாக்களில் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க ஆட்சியர் உத்தரவு

நாகர்கோவில், பிப்.16: குமரி மாவட்டத்தில் அரசு விழாக்கள், கூட்டங்கள், அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு குறித்தான நிகழ்வுகள் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. மேலும், இம் மாவட்டம், பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டமாக 1.4.2010 முதல் அறிவிக்கப்படவுள்ளது.

இதற்காக ஏப்ரல் வரையிலான அனைத்து அரசுத்துறை தொடர்பான விழாக்கள் மற்றும் கூட்டங்களில் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்ற அனைத்துத் துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, அனைத்து அரசு விழாக்களிலும் அல்லது கூட்டங்களிலும் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்தான மாவட்ட ஆட்சியரின் செய்திக்கு உரிய நேரத்தை தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் அல்லது துறை தொடர்பான கூட்டத்தின் தொடக்கத்தில் ஒதுக்கப்பட வேண்டும். அது உரிய கூட்டப் பொருளில் சேர்க்கப்பட வேண்டும்.

அரசுத் துறை விழாக்கள் மற்றும் கூட்டங்களில் பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களாலான துணிப் பைகள், சணல் பைகள், காகித பைகள், பேப்பர் கப்புகள் போன்றவற்றை மட்டுமே நினைவுப் பரிசுகளாக வழங்க வேண்டும். அரசுத் துறை விழாக்கள் மற்றும் கூட்ட அரங்கம், இடங்களில் பிளாஸ்டிக் தூக்குப் பைகள் மற்றும் கப்புகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.

அரசுத் துறை விழாக்கள் மற்றும் கூட்ட அரங்குகளில் "பிளாஸ்டிக் தவிர்ப்போம்' வாசகம் பொதிந்த இலச்சினை போதுமான அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் தவிர்ப்பு வாசகம் பொறித்த இலச்சினை வைக்கப்பட வேண்டும். அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இதை அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய இடங்களிலும், கணினித் திரைகளிலும் இதை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

Last Updated on Wednesday, 17 February 2010 09:36