Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு; ஊடகங்களுக்கு வேண்டுகோள்

Print PDF

தினமலர் 20.02.2010

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு; ஊடகங்களுக்கு வேண்டுகோள்

சென்னை: "சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்,'' என சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசினார். இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர் சங்கம் மற்றும் சென்னை பல்கலையின் இதழியல் துறை சார்பில், "பருவ நிலை மாற்றம் - ஊடகங்களின் பங்கு' எனும் தலைப்பில் தேசிய மாநாடு, சென்னை சாந்தோமில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது: பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களின் அதிகமான பயன்பாடு, வாகனங்கள் வெளியேற்றும் புகை, தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழல் வேகமாக மாசுபட்டு வருகிறது. இதன் விளைவாக உலக வெப்பமயமாதலும், பருவ நிலை மாற்றமும் நிகழ்ந்து வருகிறது. பருவ காலத்தில் உணரப்படும் அளவுக்கு அதிமான வெப்பமும், குளிரும் இம்மாற்றத்திற்கான சான்றுகள்.

இம்மாற்றத்தை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கடுமையாக அமலாக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் தொழில் துவங்கும் போது, அவற்றால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தகவல் தொழில் நுட்ப புரட்சியின் விளைவாக இன்று, குக்கிராமங்களையும் ஊடகங்கள் சென்றடைகின்றன. "டிவி', பத்திரிகைகள், அரசியல், சமூக நிகழ்வுகளுக்கு தரும் முக்கியத்துவத்தை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தர வேண்டும். இவ்வாறு திருவாசகம் பேசினார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் பர்பல் பித்வால் பேசும் போது, "பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறப்பு குழுவில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கிராமப்புறங்களில் எல்.பி.ஜி., மற்றும் சூரிய மின்சக்தி பயன்பாட்டை பரவலாக்க வேண்டும்' என்றார். மாநாட்டு துவக்க விழாவில், இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர் சங்க தலைவர் அடோப் வாஷிங்டன், செயலர் நாதன், சென்னை பல்கலை இதழியல் துறை தலைவர் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 20 February 2010 06:24