Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை எரிப்பு விவகாரம்: மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர்

Print PDF

தினமணி 23.02.2010

குப்பை எரிப்பு விவகாரம்: மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை, பிப்.22: சென்னையை அடுத்த கொடுங்கையூரில் குப்பைகளை எரிக்கும் விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார்.

கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் தளத்தில், குப்பைகள் எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த சென்னை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.

கவியரசு கண்ணதாசன் நகர் குடியிருப்போர் நல சங்கம் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் தளத்தில் மேற்கொண்டு குப்பைகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு குப்பைகள் எரிக்கப்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே, அங்கு குப்பைகள் எரிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், குப்பைகளை எரிப்பதை நிறுத்துமாறு சென்னை மாநகராட்சிக்கு 2007}ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவுக்குப் பிறகும் குப்பைகள் தொடர்ந்து எரிக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி என்.பால் வசந்தகுமார் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ""

குப்பைக் கொட்டும் தளத்தில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மாநகராட்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குப்பைப் பொறுக்குவோர் அங்கு நுழையாதவாறு போலீஸôர் ரோந்து செல்லுமாறு உத்தரவிட வேண்டும்'' என்று மாநகராட்சி தரப்பில் கோரப்பட்டது. இதுதொடர்பாக, உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி இதுதொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்தார். இந்த நடவடிக்கைகளை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அவருக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை பிப்ரவரி 24}ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Last Updated on Tuesday, 23 February 2010 10:13