Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: மாநகராட்சி தீர்மானம்

Print PDF

தினமணி 25.02.2010

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: மாநகராட்சி தீர்மானம்

திருநெல்வேலி, பிப். 24: திருநெல்வேலி மாநகரில் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் கா. பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் சுப. சீதாராமன்: இம் மாநகராட்சியில் ரூ. 56 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் முதல் பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. 2-வது பகுதி எப்போது நிறைவேற்றப்படும்?

மேயர்: பாதாள சாக்கடைத் திட்டத்தின் முதல் பகுதிக்கு மாநகராட்சி தன் பங்காக ரூ. 26 கோடி வழங்கியது. தற்போதுள்ள நிதிநிலைமையில், நமக்கு இது மிகப்பெரிய சுமையாக உள்ளது. ஆகையால் மாநகராட்சியின் நிதி நிலைமை ஓரளவு சீரடைந்த பின்னரும், அரசின் பங்கீடு கிடைத்த உடனும் 2-வது பகுதி திட்டத்துக்கான பணி தொடங்கப்படும்.

பிரான்சிஸ் (திமுக): 17-வது வார்டில் விதிமுறைகளுக்குப் புறம்பாக இணைப்பு பெறப்பட்டதாக 76 குடிநீர் இணைப்புகள் சில மாதங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டன. அந்த வீடுகளுக்கு மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எப்போது குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

மேயர்: மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து மாநகராட்சி முடிவு செய்ய முடியாது. அத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்.

பிரான்சிஸ்: 17-வது வார்டில் மனை வரைமுறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் மாநகராட்சி ரூ. 1.80 கோடி வசூலித்துள்ளது. இந் நிதியை அந்தந்த வார்டுகளில்தான் பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த நிதியில் எவ்வளவு அந்த வார்டு வளர்ச்சிப் பணிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது?

மாநகர பொறியாளர் ஜெய்சேவியர்: 17-வது வார்டில் தற்போது மொத்தம் ரூ. 2.72 கோடிக்கு பணிகள் நடைபெற்றுள்ளன.

ப.ரா. வெங்கடேசன் (திமுக): எனது வார்டுக்கு உள்பட்ட துப்புரவுத் தொழிலாளர் காலனியில் ஓண்டிவீரன் சிலை அமைக்க, மாநகராட்சி அனுமதியளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இருப்பினும் அங்கு சிலை வைத்தால் பிரச்னை ஏற்படும் என, உளவுத் துறை போலீஸôர், அரசுக்கு பரிந்துரைத்ததால், சிலை வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு ஓண்டிவீரன் சிலை அமைக்க மாநகராட்சி மீண்டும் பரிந்துரைக்க வேண்டும்.

மேயர்: அரசின் உத்தரவுப்படி கல்சிலை வைக்க தற்போது அனுமதி கிடையாது. எனவே, அங்கு வெண்கலச் சிலை வைக்க ஏற்பாடு செய்தால், அனுமதி பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கும்.

இதேபோல மாமன்ற உறுப்பினர்கள், தங்கள் வார்டுகளில் உள்ள அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்கக் கோரி பேசினர்.

பிளாஸ்டிக்குக்கு தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் மு. ஜெயராமன் அறிவித்தார். ஆனால் ஆட்சியரின் உத்தரவு குறித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால், அதை மாநகரில் செயல்படுத்துவதில் இடர்ப்பாடு ஏற்பட்டது.

அதேவேளையில், மறுசுழற்சிக்கு பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களை சங்கர்நகர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்க மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில், மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத 20 மைக்ரான் தடிமன் பிளாஸ்டிக் பொருள்களுக்கும், அதற்குக் குறைந்த தடிமனுடைய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்விளைவாக மாநகரில் எடை குறைந்த பிளாஸ்டிக் பொருள்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Last Updated on Thursday, 25 February 2010 11:06