Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருள் விற்பனை செய்தால் அபராதம்

Print PDF

தினமணி 26.02.2010

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருள் விற்பனை செய்தால் அபராதம்

தக்கலை, பிப். 25: பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதிகளில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருள்களை சேமிக்கவோ, கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ கூடாது.

அவ்வாறு பயன்படுத்தினால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் அ. ரேவன்கில் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆணையாளர் (பொறுப்பு) சனல்குமார், சுகாதார அலுவலர் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் பெருமாள் மற்றும் துணைத் தலைவர் முகமுது சலீம், உறுப்பினர்கள் வி.வி. கோபால், கொச்சு கிருஷ்ண பிள்ளை, முகமது ராபி, ரவிச்சந்திரன், ஹரிகுமார், நாகராஜன், ஜெயந்தி, சுபைஜா, பீனா உள்ளிட்ட 18 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஒரு தூக்குப் பை 8 இஞ்ச் அகலம், 12 இஞ்ச் உயரம் மற்றும் தடிமனில் 20 மைக்ரான் அளவிற்கு குறைவில்லாமலும் இருக்க வேண்டும். எந்தவொரு விற்பனையாளரும் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அல்லது பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருள்களை சேமிக்கவோ, கொண்டுசெல்லவோ, விற்பனை செய்யவோ கூடாது.

மேலும் தேனீர் மற்றும் சூடான அல்லது குளிரான பானங்களை ஒரு முறை பயன்படுத்தப்பட்டு பின்பு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள் அல்லது கப்புகள் அல்லது கொள் கலன்களை மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பனை செய்யவோ, உபயோகிக்கவோ கூடாது.

உணவுப் பொருள்கள் மற்றும் சிற்றுண்டிகளை கட்டுவதற்கோ பரிமாறுவதற்கோ புதிய அல்லது மறு பிளாஸ்டிக் தட்டுகளையோ, விரிப்புகளையோ மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பனை செய்யக் கூடாது.

ஒவ்வொரு தனிநபர் அல்லது வீடு அல்லது நிறுவனம் தாங்கள் உருவாக்கும் திடக்கழிவிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து நகராட்சியால் அறிவிக்கப்பட்ட நேரத்தில் சுகாதாரப் பணியாளர்களிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளை மீறி பத்மநாபபுரம் நகராட்சி எல்லைக்குள் செயல்படும் மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ 1000-ம், சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ. 500-ம் அபராதம் வசூலிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகர்மன்ற வணிக வளாகத்தின் அருகே மகாத்மா காந்தி சிலை அமைக்க வேண்டும் எனவும், ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிய நகர்மன்ற அலுவலகம் கட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக நகராட்சி அரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.