Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு மதுபான கடைகளில் மாநகராட்சிசுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை: பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவு பண்டங்கள் பறிமுதல்

Print PDF

தினமலர் 03.03.2010

அரசு மதுபான கடைகளில் மாநகராட்சிசுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை: பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவு பண்டங்கள் பறிமுதல்


திருநெல்வேலி:நெல்லை அரசு மதுபானக் கடைகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தயாரிப்பு தேதி இல்லாத உணவுப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் அதிக அளவில் இருப்பதாகவும், குறிப்பாக அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவுப்படி சுகாதார அதிகாரி கலு.சிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் ஏ.ஆர்.சங்கரலிங்கம், காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது, முருகேசன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.நெல்லை டவுன் மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரேயுள்ள டாஸ்மாக் கடை, ரதவீதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாரில் வைக்கப்பட்டிருந்த தயாரிப்பு தேதி இல்லாத பட்டாணி, மிக்சர், பேரிச்சம்பழம், சிப்ஸ், குளிர்பானம் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.மொத்தம் 6 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 1500 பிளாஸ்டிக் டம்ளர்களும், தயாரிப்பு தேதி இல்லாத 3 கிலோ உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக்டம்ளர்களுக்கு தடை கிடையாதா:நெல்லை மாவட்டத்தில் மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அதன் பயன்பாடு இன்னும் குறையவில்லை. குறிப்பாக ஒரு சில கடைகளை தவிர ஓட்டல்களில் பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர்களும், டீக் கடைகளில் டீ, காப்பியும் பிளாஸ்டிக் கப்களிலேயே வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பாங்குகள், தனியார் அலுவலகங்கள், ஆஸ்பத்திரி கேன்டீன்கள், அரசியல் கட்சி கூட்டங்கள், கருத்தரங்குகளுக்கு கடைகளில் டீ ஆர்டர் கொடுத்தால் பிளாஸ்டிக் கப்களிலேயே டீ வழங்கப்படுகின்றன.

நெல்லை டவுன், பாளை., மார்க்கெட் உள்ளிட்ட பகுதி கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்களை அதிக அளவில் தொங்கவிட்டு வியாபாரம் செய்கின்றனர். சைக்கிள், பைக்குகளில் டீ, காப்பி, சுக்குகாப்பி விற்பனை செய்பவர்களும் பிளாஸ்டிக் கப்களையே பயன்படுத்துகின்றனர். இதே போல் கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடும் குறையவில்லை.

Last Updated on Wednesday, 03 March 2010 06:52