Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுபானக் கூடங்களில் சோதனை: பிளாஸ்டிக் கப், தரமற்ற உணவு பறிமுதல்

Print PDF

தினமணி 03.03.2010

மதுபானக் கூடங்களில் சோதனை: பிளாஸ்டிக் கப், தரமற்ற உணவு பறிமுதல்

திருநெல்வேலி,மார்ச் 2: திருநெல்வேலி மாநகர் பகுதியில் உள்ள மதுபானக் கூடங்களில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இச் சோதனையில் பிளாஸ்டிக் கப், சுகாதாரக்கேடான உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் உத்தரவிட்டிருந்தார்.

ஆட்சியரின் உத்தரவை, மாநகர் பகுதியில் உடனடியாக செயல்படுத்துவதில் இடர்பாடு ஏற்பட்டிருந்தது. இந் நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்ற, திருநெல்வேலி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள், கடைகளில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அறிவித்தது. இந் நிலையில் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் கலு. சிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் அ.ரா. சங்கரலிங்கம், பி.காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது, முருகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாநகர் பகுதியில் உள்ள மதுபானக் கூடங்களில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை செய்தனர்.

இச் சோதனையில் அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 பிளாஸ்டிக் கப்புகள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த உணவு பொருள்கள் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர். சந்திப்பு,நகரம்,குறுக்குத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள 6 மதுபானக் கூடங்களில் இச் சோதனை நடைபெற்றது.

மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் இந்த திடீர் சோதனையால், அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Wednesday, 03 March 2010 09:12