Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதற்குத் தடை

Print PDF

தினமணி 06.03.2010

பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதற்குத் தடை

திண்டுக்கல், மார்ச் 5: திண்டுக்கல் நகரில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதற்குத் தடை விதித்து நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மார்ச் 5-ம் தேதி முதல் 15 நாளில் மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், மீறி விற்பனை செய்பவர்களிடம் இருந்து பொருள்களைப் பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். ஆணையர் அர.லட்சுமி, பொறியாளர் ராமசாமி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

.கல்யாணசுந்தரம் (மார்க்சிய கம்யூ.): சொந்தக் கட்டடங்களில் நடைபெறும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வரி விதிக்க மன்றத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆர்.நடராஜன் (தலைவர்): சொந்தக் கட்டடங்களில் இயங்கும் சிறு தொழில்களுக்கு வீட்டுக்கு விதிக்கப்படுவதைப் போன்ற வரி முறை தான் பின்பற்றப்படும். வீடு, வர்த்தகம் எனத் தனியாக இல்லாமல் சொந்தக் கட்டடங்களில் செயல்படும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும், வீடுகள் போல் எண்ணி ஒரே வரி தான் விதிக்கப்படும்.

ஜெயபால் (அதிமுக): குப்பைகளை அள்ளும் வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் பணிகள், செப்பனிட விலைப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதற்காக அரசு நிர்ணயித்த தொகை எவ்வளவு?

நடராஜன் (தலைவர்): அரசு நிர்ணயித்த தொகையை அலுவலகத்தில் உள்ள அரசாணை மூலம் உறுப்பினர் பார்த்துக் கொள்ளலாம்.

.கல்யாணசுந்தரம்: நகரில் குப்பைகளை கொட்டுவதற்கான தொட்டிகள் பற்றாக்குறை காரணமாகக் கூடுதலாகத் தொட்டிகள் வாங்கத் தீர்மானம் போடப்பட்டிருந்தது. இந் நிலையில் பழுதாக உள்ள தொட்டிகளை மராமத்துப் பணி செய்ய அனுமதி கேட்கப்படுகிறது. 25 தொட்டிகளை மராமத்துக்கு அனுப்பினால் நகரில் சேரும் குப்பைகளை எடுக்க என்ன வழி?

நடராஜன்: நகரின் பல்வேறு இடங்களில் தொட்டிகள் வைப்பதற்காக மேலும் 20 தொட்டிகள் வாங்கப்பட உள்ளன. பழுதடைந்த தொட்டிகளை எடுத்துச் செல்லாமல் அவைகள் இருக்கும் இடத்திலேயே பழுது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சந்திரசேகர் (திமுக): வேடபட்டியில் உள்ள எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தடைபட்டுள்ளதால், ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் கூறியுள்ள நிலையில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புது ஒப்பந்தம் போட வேண்டும்.

துளசிராம் (அதிமுக): வேடபட்டி எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகளை செய்யாத ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்து புது ஒப்பந்தம் போட வேண்டும்.

ஜெயபால் (அதிமுக): எரிவாயு தகனமேடை அமைக்க 3 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு வழங்கப்பட்டும் பணிகள் முடிவடையாமல் உள்ளன. தற்போது புதிதாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டால், கட்டுமானச் செலவுகள் கூடியுள்ள இன்றைய நிலையில் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது.

கோபாலகிருஷ்ணன் (பா..): எரிவாயு தகனமேடை அமைக்க ஒப்பந்ததாரர் இதுவரை செய்த வேலை என்ன?, அதற்காக அவருக்கு நகராட்சி கொடுத்த தொகை எவ்வளவு?

நடராஜன் (தலைவர்): எரிவாயு தகன மேடை கட்டடப் பணிக்காக ரூ.22 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மின் மயானம் போல் எரிவாயு தகன மேடை சேவை வேண்டும் என்பதற்காகப் புது ஒப்பந்தம் கோரப்பட அனுமதி கேட்கப்படுகிறது. பழைய ஒப்பந்ததாரர் பணி செய்யாமல் விட்டுவிட்டதால் நகர்மன்றத்திற்கு அவர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்படும்.

ஜெயபால் (அதிமுக): திண்டுக்கல் நகரில் மோட்டார் பொருத்தி பல இடங்களில் தண்ணீர் எடுக்கப்படுகிறது. வர்த்தக இணைப்புகளுக்கு குடிநீரை முறைப்படுத்தும் வால்வு பொருத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த முறைப்படுத்தும் வால்வு வீடுகளுக்கும் கொண்டு வரப்படுமா?.

நடராஜன் (தலைவர்): வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் தண்ணீரை அதிகமாக எடுக்கின்ற காரணத்தினால் குடிநீரை முறைப்படுத்தும் வால்வு பொருத்தப்பட உள்ளது. மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதை நிறுத்தி விட்டால் அனைத்துக் குழாய் இணைப்புகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். விரைவில் பேரணையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Last Updated on Saturday, 06 March 2010 06:05