Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுற்றுலா, வழிபாட்டுத் தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை

Print PDF

தினமணி 08.03.2010

சுற்றுலா, வழிபாட்டுத் தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை

திருவாரூர், மார்ச் 7: திருவாரூர் மாவட்டத்தில் பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:

பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமது அன்றாடச் செயல்பாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சேர்கின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் கப்புகள், பைகள், மேஜை விரிப்புகள் உள்ளிட்ட மறு சுழற்சி முறையில் பயன்படுத்த இயலாத பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது.

பிளாஸ்டிக் பொருள்களால் கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், இப் பொருள்களை எரிப்பதால் உண்டாகும் புகையால் சுவாசக் கோளாறு மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. இதுகுறித்து அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மார்ச் 11-ம் தேதி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டமும், மார்ச் 18-ம் தேதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்படும். மார்ச் 25-ம் தேதி அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தீர்மானம் முன்மொழிவும் நிறைவேற்றப்படும்.

மேலும் 40 மைக்ரான் தடிமனுக்குக் குறைவாக உள்ள

பிளாஸ்டிக் பொருள்களை ஏப்.1-ம் தேதி முதல் விற்பனை செய்யக் கூடாது. இதுகுறித்து நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர்கள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு, தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வணிகர்கள், அனைத்துக் கடைக்காரர்கள், வியாபாரிகள், பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம். பொது மக்களும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 08 March 2010 11:12