Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுமா?

Print PDF

தினமணி 10.03.2010

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுமா?

போடி, மார்ச் 9: போடியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போடி நகராட்சியின் 33 வார்டுகளில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பொதுமக்கள் கடைகளில் பொருள்கள் வாங்கும் போது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர். இதேபோல் டீக்கடைகள், ஹோட்டல்கள், மளிகைக் கடைகளில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாழை இலைகள், டம்ளர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை பயன்படுத்திய பின் பொதுமக்கள் குப்பைகளில் இவற்றை போடுகின்றனர். இதனால் குப்பைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் கலந்து குப்பைகள் மக்காமல் போகின்றன. நகர் பகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் தேங்குகின்றன. இவற்றில் தண்ணீர் தேங்கும்போது கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாகி நோய் பரவ காரணமாகிறது.

மேலும் போடி நகரில் செல்லும் பெரிய சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் தேங்கி கழிவுநீர் செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றினாலும் நோய் பரவும் ஆபத்து ஏற்படுகிறது. அத்துடன் போடி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை, உரம் தயாரிக்கும் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லும்போது, அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்கள் கலந்துள்ளதால் உரம் தயாரிக்க முடியாத நிலையில், அதிக அளவில் குப்பைகள் தேங்கி சுற்றுச்சூழல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது குப்பைக் கிடங்கு செயல்பட்டு வரும் சுடுகாடு செல்லும் ரோட்டில் பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. இவற்றை சிலர் தீ வைத்து விடுவதால் கரியமில வாயு பரவி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் கூறியது:

போடி நகராட்சிப் பகுதியில் குப்பை தேங்காமலிருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் தேங்காமலிருக்க சிவப்பு, பச்சை நிற குப்பை சேகரிப்பு தொட்டிகளைப் பயன்படுத்த உள்ளோம். இவற்றில் மக்கும் குப்பைகளான காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை பச்சை நிறத் தொட்டியிலும், பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற மக்காத குப்பைகளை சிவப்பு நிறத் தொட்டியிலும் போட வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்க நகர்மன்றத்தில் தீர்மானம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்காமலிருக்கவும், கடைக்காரர்கள் பயன்படுத்தாமலிருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

போடி வர்த்தகர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தியதில் அவர்களும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்க ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இதன் மூலம் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பொதுமக்களும் கடைகளுக்கு செல்லும் போது வீட்டிலிருந்து துணிப் பைகளை எடுத்து சென்று பொருள்களை வாங்க வேண்டும். பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகளுக்கு பதில் காகிதப் பைகள், டம்ளர்களைப் பயன்படுத்தி, போடி நகரம் சுகாதார நகரமாக மாற ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Last Updated on Wednesday, 10 March 2010 09:06