Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குழித்துறை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமணி 11.03.2010

குழித்துறை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

மார்த்தாண்டம்
, மார்ச் 10: குழித்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் ராஜேந்திர ரத்னு கலந்துரையாடினார்.

குழித்துறை நகர்மன்றத் தலைவர் பொன். ஆசைத்தம்பி, முன்னாள் நகர்மன்றத் தலைவி டெல்பின், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அல் அமீன், உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற ஊழியர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன் படக்காட்சிகள் மூலம் பிளாஸ்டிக்கின் தீமைகளை எடுத்துரைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: 1958-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் இன்று உலகின் எல்லா மூலை முடுக்குகளில் வியாபித்து உள்ளது. இன்று மட்கும் மாசுகளின் அளவு 85 சதவிகிதத்திலிருந்து 55 ஆக குறைந்துள்ளது. ஆனால் மட்காத பிளாஸ்டிக் மாசுகள் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதில் மிக முக்கிய பங்கு வகிப்பது கைப்பைகளுக்கு பதிலாக நாம் பயன்படுத்தும் கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கப்கள் தான். இவற்றை எரிப்பதால் டையாக்சின், பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் கலந்துவிடுகிறது. இந்த வாயுக்கள் புற்று நோய்களை உருவாக்கும் தன்மையுடையவை.

குழித்துறை நகராட்சியில் தினமும் சேரும் 950 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளில் 190 கிலோ திரும்பப் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்குகளாகும்.

இவற்றைத் தனியாக சேகரித்து சிமெண்ட் ஆலைகளில் உள்ள உயர் வெப்ப எரிகலன்களில் எரித்தால் எந்த மாசும் ஏற்படாது. எனவே அதற்கான முயற்சிகளில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியின் முடிவில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

மக்களைத் தேடிவந்த ஆட்சியர்:

பின்னர் நடந்த கலந்துரையாடலில் ஆட்சியர் பல்வேறு தரப்பினரையும் நேரடியாக சந்தித்து கருத்துக் கேட்டார். குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் இருக்கைகளுக்கு சென்று அவரே மைக் பிடித்து பெண்களை பேச வைத்தார்.

அதோடு குழித்துறை நகர்மன்றத் தலைவர் பொன்.ஆசைத்தம்பி, முன்னாள் தலைவர் ஏ.எம்.வி டெல்பின், நகர்மன்ற உறுப்பனர்கள், உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன் ஆகியோரிடம் நேரடியாக சென்று கருத்துக்களை கேட்டறிந்தார். துப்புரவுத் தொழிலாளர்களை தனியாக அழைத்து அவர்களிடம் தனியாக பேசினார்.

அப்போது பிளாஸ்டிக் சேகரிப்பின் முக்கியத்துவத்தை விளக்கியதோடு ஆட்சியர் ஒரு நாள் விடுப்பில் இருந்தால் மாவட்டத்தில் யாருமே அதிகம் கவலை கொள்ளப் போவதில்லை. ஆனால் துப்புரவுத் தொழிலாளர் விடுப்பில் இருந்தால் அந்தத் தெரு ஒரே நாளில் நாற்றமெடுத்து விடும் என அவர்களின் பணியின் முக்கியத்துவதை உணர்த்தினார்.

மேலும், தொழிலாளர்களுக்கு கையுறையும் வழங்கினார். கைப்பை எடுத்துக்கொண்டு பொருள்கள் வாங்கச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கிய ஆட்சியர் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கைப்பையையும் அறிமுகப்படுத்தினார்

Last Updated on Thursday, 11 March 2010 09:44