Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீர் நிலையை கலங்கடிக்கும் நேரடி கழிவு அதிர்ச்சி தரும் புள்ளி விபர அறிக்கை

Print PDF

தினமலர் 24.03.2010

நீர் நிலையை கலங்கடிக்கும் நேரடி கழிவு அதிர்ச்சி தரும் புள்ளி விபர அறிக்கை

திருப்பூர்: 'நீர் நிலைகளில் சுமார் 90 சதவீதம் கழிவு நீரும், 70 சதவீதம் தொழிற்சாலை கழிவுகளும் எவ்வித சுத்திகரிப்பும் செய்யப்படாமல் நேரடியாக கொட்டப்படுகிறது' என, குடிநீர் வடிகால் வாரியத்தின் புள்ளி விபர அறிக்கை தெரிவிக்கிறது. உலக தண்ணீர் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. திருப்பூரில் நடந்த விழிப்புணர்வு பேரணியின் போது, சுற்றுப்புறச் சூழல் குழுமக்கோட்டம், நீர்வள ஆதாரத்துறை, பொதுப்பணித்துறை, 'யுனிசெப்' மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், அறிக்கையும், துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன. அதில், தண்ணீர் மாசுபடுவதற்கான காரணங்களும், மாசுபாட்டின் வகைகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நதிக்கரை ஓரங்களில் மனித நாகரிகம் வளர்ந்துள்ளது; நாகரிக வளர்ச்சிக்கு காரணமாக இருந்த நதிகள், நகரங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நவீன விவசாயங்கள் மூலம் மாசுபட்டு கிடக்கின்றன. பாலாறு, பவானி, நொய்யல், வைகை போன்ற நதிகளை அந்த பட்டியலில் சேர்க்கலாம். உள்ளாட்சி நிர்வாகங்களின் குப்பை, சாக்கடை கழிவு மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் நீர்நிலைகள் இயற்கை தன்மை இழந்து, சீரழிந்து விட்டன. கடந்த 50 ஆண்டுகளாகவே, நீர்நிலைகள் மாசுபடுத்தப்பட்டு வருவதால், நீரின் தரம் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நீரினால் ஏற்படும் நோய்களால் 15 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். உலக அளவில் தினமும் 20 லட்சம் டன் கழிவு நீர், நல்ல தண்ணீரில் கலந்து வருகிறது. நீர் நிலைகளில் 90 சதவீதம் கழிவு நீரும், 70 சதவீதம் தொழிற்சாலை கழிவு களும் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி கலக்கிறது. இவற்றில் சில கழிவு பொருட்கள் நீண்ட காலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியவை. மக்கள் தொகை அதிகரிப்பாலும், பயன்பாட்டு பொருட்களின் தயாரிப்பு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத் தாலும், சுரங்கத்தொழில் மற்றும் நகரமயமாக்கல் போன்ற செயல்பாடுகளாலும் நீரின் தன்மை பாழடிக்கப் பட்டுள்ளது. கிராம குடிநீர் திட்டத்தில், குடிநீரின் தரத்தை அனைவரும் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளும் வகையில், களநீர் பரிசோதனை பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த களநீர் பெட்டியை பயன்படுத்தி நீரின் தரத்தை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நீர்வள ஆதாரங்களை பாதுகாக்க, கால்வாய், குளம், குட்டைகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; தொழில்சாலைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, தொடர்ந்து இயக்க வேண்டும்; உற்பத்தி முறையில் கழிவை குறைக்கும் தொழில்நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும்; இயற்கை விவசாய முறையை செயல்படுத்த வேண்டும்; காடுகளை அழிப்பதை தவிர்த்து, மரக்கன்றுகள் நடுவதை சமூக விழாவாக கொண்டாட வேண்டும் என்பன போன்ற செயல் திட்டங்களை ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்த வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 24 March 2010 09:55