Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமீறிய கட்டடங்களில் 'கை!' : மத்திய அமைச்சர் ராஜா திட்டவட்டம் : நடவடிக்கை இல்லை என்றால் நடவடிக்கை

Print PDF

தினமலர் 29.03.2010

விதிமீறிய கட்டடங்களில் 'கை!' : மத்திய அமைச்சர் ராஜா திட்டவட்டம் : நடவடிக்கை இல்லை என்றால் நடவடிக்கை

ஊட்டி : ''நீலகிரி மாவட்டத்தில் விதிமீறிய 2,217 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என, மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில், அனைத்து அரசுத் துறை அலுவலர்களின் முக்கிய கூட்டம் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர் ராஜா பங்கேற்று, வனம் மற்றும் சுற்றுச்சூழல், விதிமீறிய கட்டடங்கள், மாநில அரசின் குடிசை மாற்றுத் திட்டம் குறித்து ஆலோசித்தார்.

மத்திய அமைச்சர் ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீதான நடவடிக்கை குறித்து, மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, இம்மாவட்டத்தில் 1993 முதல் 2007ம் ஆண்டு வரை 2,217 கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளன; இவற்றை இடிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை தவிர, உயர்நீதிமன்றத்தில் கட்டடம் தொடர்பாக நடந்து வரும் வழக்கின் தீர்ப்பு வந்த பின், அந்த கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி வரும் காலங்களில், மாவட்டத்தின் எப்பகுதிகளில் புதிய கட்டடம் கட்டப்பட்டாலும், நகரத் திட்ட அலுவலர், வருவாய் அலுவலர், வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை அனுமதி பெற வேண்டும். புதிய கட்டடம் கட்டும் போது, அனுமதியில் உள்ளது போன்ற கட்டடம் கட்டப்படுகிறதா? என்பது குறித்து, வருவாய் துறையினர் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும்; விதிமீறி கட்டடம் கட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்கான நடவடிக்கை எடுக்காத வருவாய் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மலை மாவட்டமான நீலகிரியின் சுற்றுச்சூழலையும், வனங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; அப்போது தான், எதிர்கால பேரழிவுகளில் இருந்து இம்மாவட்டத்தை பாதுகாக்க முடியும். கடந்த நவம்பர் மாத பேரழிவின் போது ஏற்பட்ட பாதிப்புகளில் 95 சதவீதப் பணிகள் முடிந்து விட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வீடுகளை கட்டுவதற்கான இடம் மட்டும் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், குடிசை இல்லாத மாவட்டமாக நீலகிரியை மாற்றும் கணக்கெடுப்பு பணி, 29ம் தேதி முதல் துவக்கப்படுகிறது.

சமவெளிப் பகுதிகளைப் போல இங்கு ஓலைக் கூரைகள் இல்லாததால், இங்குள்ள 'பிளாஸ்டிக்' மற்றும் பிற கூரைகள் உள்ள வீடுகளையும், திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என முதல்வரிடம் பேசி, சிறப்பு நடவடிக்கையின் அடிப்படையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்; ஆதிவாசி மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படும்.

ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலைக்கு 30 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 272 கோடி ரூபாய் மத்திய அமைச்சரவையின் ஓப்புதலுக்கு பின், விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்தொகை வரும் பட்சத்தில், தொழிற்சாலை புனரமைக்கப்பட்டு, மீண்டும் பழைய பொலிவுடன் செயல்படும். இவ்வாறு, மத்திய அமைச்சர் ராஜா கூறினார். கதர்வாரியத் துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 29 March 2010 06:16