Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 08.04.2010

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

போடி
, ஏப். 7: போடி நகராட்சியில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

போடி நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேர்ந்து நகரில் சுகாதாரக் கேடு அதிகரித்தது. இதனை தினமணியும் சுட்டிக் காட்டியது.

இதையடுத்து, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பாலிதின் பைகள் உள்ளிட்ட பொருள்களுக்கு நகராட்சி தடைவிதித்தது. மேலும் இவற்றை விற்பனை செய்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை உலக சுகாதார தினத்தை முன்னிட்டு போடி பகுதி கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சென்றாயன், மெர்லி வர்கீஸ், சுகாதார மேற்பார்வையாளர்கள் கருப்பணன், ராஜு மற்றும் களப்பணி உதவியாளர் பாஸ்கரன் ஆகியோர் கொண்ட குழுவினர், போடி நகரில் உள்ள மளிகைக் கடைகள், பிளாஸ்டிக் பொருள் விற்பனைக் கடைகள், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் சோதனையிட்டனர்.

இதில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து போடி நகராட்சி ஆணையாளர் க. சரவணக்குமார் தெரிவித்ததாவது: போடி நகராட்சியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்துள்ளோம். ஆனாலும் சிலர் பயன்படுத்துவதாக தகவல் வந்ததையடுத்து திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இனி தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும். போடி நகராட்சியை 100 சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத நகராக மாற்ற பொதுமக்களும், வர்த்தகர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Last Updated on Thursday, 08 April 2010 09:17