Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு: மாற்று ஏற்பாடுகள் தேவை!

Print PDF

தினமணி 12.04.2010

பிளாஸ்டிக் ஒழிப்பு: மாற்று ஏற்பாடுகள் தேவை!

கருங்கல், ஏப்.11: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதற்குரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம்; புவியைக் காப்போம் என்ற முயற்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆனால், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகித கோப்பைகள், காகித பைகள், துணிப்பைகளின் உற்பத்தியை அதிகரித்து விலையைக் குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள விருப்பம் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மறுசுழற்சி முறையில் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து வைத்து நகாராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றிற்கு சொந்தமான குப்பை வண்டிகளில் போடுவதில் போதிய ஆர்வம் இருப்பதில்லை.

இதுகுறித்து கருங்கல் வியாபாரிகள் நலச் சங்கச் செயலர் துரைராஜ் கூறும்போது, பிளாஸ்டிக்கை தவிர்க்க முதலில் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். மேலும், சிறுவியாபாரிகள், தின்பண்ட கடைக்காரர்கள், குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், சிற்றுண்டி கடைகள், காய்கனிக் கடைகள், பழக்கடைகள் நடத்துவோர் பாலிதீன் பைகள் இல்லாமல் சிறு பொட்டலங்கள் கட்ட மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி பிளாஸ்டிக்கிற்கு பதிலாக உடனடியாக மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என்றார்.

குழித்துறை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜொபிரகாஷ் கூறும்போது, நம் முன்னோர்கள் கடைகளுக்குப் பொருள்கள் வாங்கச் செல்லும்போது கமுகம் மர பாளை, பனைமர ஒலையினால் செய்யப்பட்ட பெட்டி, கடவம், கூடைகள், வாழை இலை, துணிப்பை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தினர்.

தற்போது நட்சத்திர ஹோட்டல்களில் குவளை, மண்பானைகள், பாளைகளால் செய்யப்பட்ட தட்டு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். வசதிபடைத்த மக்கள் பின்னால் வரும் விளைவுகளை முன்கூட்டியே தெரிந்துகொண்டு பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க தொடங்கிவிட்டனர் என்றார் அவர்.

குமரி மாவட்டத்தில் முன்பைவிட பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது என்பது உண்மை. இது தொடர்பாக பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்க்கப்படும்.

Last Updated on Monday, 12 April 2010 09:45