Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூரை பசுமையாக்க 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: புதிய மேயர்

Print PDF

தினமணி 24.04.2010

பெங்களூரை பசுமையாக்க 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: புதிய மேயர்

பெங்களூர், ஏப்.23: பெங்களூரை மீண்டும் பசுமை மற்றும் குளுமை நகராக மாற்ற நகரில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று மேயர் எஸ்.கே. நடராஜ் தெரிவித்தார்.

÷பெங்களூர் மாநகராட்சியின் புதிய மேயராக பதவியேற்ற பிறகு நடராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

÷மிகவும் குளுமையான பூங்காக்கள் நகரம் என்று பெயர் பெற்றது பெங்களூர். ஆனால் சில ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் நகரின் இயற்கையான குளுமை தட்பவெப்ப நிலை மாற்றமடைந்து வெப்ப நிலையும், மாசுக்களும் அதிகரித்து வருகின்றன.

÷எனவே, நகரை மீண்டும் பசுமையான, குளுமையான அழகான நகராக மாற்ற நகரம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொலைநோக்குத் திட்டம் தீட்டப்படும். வாகனங்கள் நிறுத்துவதற்கு பல அடுக்கு பார்க்கிங் காம்பிளக்ஸ் வளாகங்கள் கட்டப்படும்.

÷குடிசைப் பகுதிகள் இல்லாத நகராக பெங்களூரை மாற்றுவோம். இதற்காக வீட்டு வசதித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போதுள்ள குடிசைப் பகுதிகளுக்கு பட்டா வழங்கி அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

÷நகர சாலைகள் சிக்னல்கள் இல்லாத சாலைகளாக மாற்றி அமைக்கப்படும். பெங்களூரை குப்பைகள் இல்லாத நகராக மாற்ற சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும்.

குப்பைகளை முறையாக அகற்றிவிட்டால் அவை கழிவுநீர்க் கால்வாய்களில் சிக்கி அடைப்பு ஏற்படுத்துவதை தடுக்க முடியும். இதன் மூலம் மழை காலங்களில் வெள்ள நீர் தேங்காமல் இருக்கும்.

÷மழை காலங்களில் இரவு நேரம் செயல்படும் அதிகாரிகள், ஊழியர்கள் குழு அமைக்கப்படும். இவர்கள் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வேரோடு சாய்ந்த மரங்களை உடனே அகற்றி, வெள்ள நீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுப்பார்கள்.

மின்தடை பிரச்னையை சரி செய்வார்கள். குடிநீர், வடிகால் வாரியம் மற்றும் மின் வாரியத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

÷நகரில் அதிக வளர்ச்சிப் பணிகளை செய்து மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம். கட்சி வேறுபாடுகள் இல்லாமல் நகரின் 198 வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகளை செய்வோம்.

மாநகராட்சி நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறுகிறார்கள். இதை லாபத்தில் செயல்பட வைப்பதற்காக சீரிய முறையில் வரிகள் வசூலிக்கப்படும் என்றார் அவர்.