Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பராமரிப்பு இல்லாமல் பாழ்படும் ஓய்வு இல்லம்ஒகேனக்கல்லில் பெயரளவுக்கு பிளாஸ்டிக் தடை

Print PDF

தினமலர் 29.04.2010

பராமரிப்பு இல்லாமல் பாழ்படும் ஓய்வு இல்லம்ஒகேனக்கல்லில் பெயரளவுக்கு பிளாஸ்டிக் தடை

தர்மபுரி: ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் தடை அறிவிக்கப்பட்டு, முறையான கண்காணிப்பு இல்லாததால், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்கிறது. பராமரிப்பு இல்லாமல் பயணிகள் ஓய்வு இல்லம் பாழ்படும் நிலையுள்ளது.சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஒகேனக்கல்லில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் சீசன் களை கட்டும். கோடை விடுமுறையில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிகளில் மிதமாக விழும் நீரில் குளித்து மகிழ்வதோடு, பரிசலில் காவிரியின் அழகை ரசித்து செல்வர். இந்தாண்டு சீசன் தற்போது களை கட்ட துவங்கிய நிலையில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். சுற்றுலா முக்கியத்துவம் நிறைந்த ஒகேனக்கல்லுக்கு வரும் பயணிகள் பெரும் அளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதோடு, மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் கழிவுகளை காவிரி ஆற்றுப்படுகை மற்றும் வனப்பகுதியில் வீசி செல்வதால், நிலம், நீர் மாசு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வன விலங்குகளுக்கு கோடை காலங்களில் ஏற்படும் தீனி தட்டுப்பாட்டின் போது, பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு இறக்கும் பரிதாபமும் நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசுவை தடுக்கும் வகையில் ஒகேனக்கல்லில் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பயணிகள் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கண்காணித்து தடுத்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் வனத்துறையினர், போலீஸார் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கண்காணித்து வந்தனர்.

ஒகேனக்கல்லுக்கு செல்லும் வழியில் உள்ள மடம் மற்றும் ஊட்டமலை வனத்துறை செக்போஸ்ட்களில் வனத்துறையினர் பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்தி மறு சுழற்சிக்கு உதவாக பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி வந்தனர்.


இதே போல் ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷன் முன் போலீஸார் பயணிகள் வாகனங்களை கண்காணித்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வந்தனர். இந்த கண்காணிப்பு பணிகள் சில நாட்கள் மட்டுமே நடந்தன. மீண்டும் வழக்கம் போல் பிளாஸ்டிக் தடை என்பது பெயருக்கு மட்டுமே உள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ஆற்றுப்படுகை மற்றும் வனப்பகுதியில் வீசி செல்கின்றனர்.

இதே போல் ஒகேனக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களில் அதிக அளவில் பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டு கழிவுகள் மொத்தமாக ஆற்றுப்படுகை பகுதியில் கொட்டப்பட்டு வருவதால், நீர், நில மாசு தொடர்ந்து வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் பயணிகள் ஓய்வு இல்லம், உணவு அருந்தும் இடங்கள் பல லட்ச ரூபாயில் கட்டப்பட்டது. கட்டிய சில மாதங்கள் மட்டுமே பயணிகள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. ஓய்வு மற்றும் உணவு இல்லங்களில், இளைஞர்கள் கூட்டம் மது குடிக்க திறந்த வெளி பாராக பயன்படுத்தியதோடு, சமூக விரோத கும்பல்கள் அங்கிருந்த குடில் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியதால், திறக்கப்பட்ட சில மாதங்கள் மூடப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாமல் பயணிகள் ஓய்வு இல்லம், உணவு சாப்பிடும் கூடங்கள் மூடப்பட்டு கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் ஓய்வுக்கு எங்கும் நிற்க முடியாத நிலையுள்ளது.

முறையான பராமரிப்பு இல்லாததால், பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஓய்வு இல்லம், உணவு சாப்பிடும் இடங்கள் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. சுற்றுலா வளர்ச்சி துறை, வனத்துறையினர், மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் தடையை கண்காணித்து, பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்பு இல்லாத ஓய்வு இல்லங்களை சீர் செய்து பயணிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Thursday, 29 April 2010 06:05