Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி மாணவ, மாணவியர் பங்கேற்பு

Print PDF

தினமலர்          07.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி மாணவ, மாணவியர் பங்கேற்பு

குன்னூர் : "பிளாஸ்டிக் ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதால், ஜெகதளா பேரூராட்சி விரைவில் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாறும்,' என தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குன்னூர் ஜெகதளா பேரூராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணிக்கு தலைவர் உஷா தலைமை வகித்தார்.பேரணியில் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை பள்ளி, ஜெகதளா பள்ளி மாணவர்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

பிளாஸ்டிக்கின்   தீமைகள்  குறித்து  மக்களிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது.   "ஜெகதளா பேரூராட்சியில் பிளாஸ்டிக்   ஒழிப்புக்கு   முன்னுரிமை   வழங்கப்பட்டு   வருவதால்,  விரைவில் பிளாஸ்டிக்   இல்லா   பேரூராட்சியாக  ஜெகதளா திகழும்,'   என   பேரூராட்சி  தலைவர்  உஷா தெரிவித்தார்.

 

நம்புங்கள்; சொல்கிறார், கமிஷனர் பிளாஸ்டிக் தடை முழு செயல்பாட்டுக்கு வரும்!

Print PDF

தினமலர்          07.08.2012

நம்புங்கள்; சொல்கிறார், கமிஷனர் பிளாஸ்டிக் தடை முழு செயல்பாட்டுக்கு வரும்!

திருப்பூர் : ""திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓட்டல், பேக்கரி, டீக்கடை, "டாஸ்மாக்' பார்கள் உட்பட அனைத்து கடைகளிலும் பாலித்தீன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். அதிகாரிகள் கவனக்குறைவாக இருக்காமல், தடை செய்யப்பட்ட மக்காத பொருட்களை பயன்படுத்தினால், அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்,'' என மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில், தினமும் 550 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் உருவாவதாகவும், அவற்றில், 500 டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவற்றில், தினமும் ஐந்து டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் உள்ளன. வீடு வீடாக குப்பை சேகரிக்கும்போது, பிளாஸ்டிக் கழிவுகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன.ஆனால், பெரும்பாலான பகுதிகளில் உள்ள கன்டெய்னர்களில் அனைத்து வகையான குப்பைகளும் சேகரமாகின்றன. குப்பை கொட்டப்படும் பாறைக்குழிகளுக்கு செல்லும் குப்பை சேகரிப்போர், கைக்கு கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துச் சென்று எடைக்கு போட்டு சம்பாதிக்கின்றனர்."மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பயன் பாடுகளை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை, சிறுதுகள்களாக மாற்றி, தார் ரோடு அமைக்க பயன்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது. முதல்கட்டமாக, நடராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள மாட்டுக்கொட்டகை பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை துகள்களாக மாற்றும் "ஸ்ரெட்டர்' மெஷின் வைக்கப்பட்டது.

பாலித்தீன் கழிவுகளை "ஸ்ரெட்டர்' மூலமாக துகள்களாக மாற்றி, 29 லட்சம் ரூபாய் அளவில், 10 இடங்களில் பிளாஸ்டிக் ரோடு அமைக்கப்பட்டது. "ஸ்ரெட்டர்' மெஷின் பலமுறை பழுதாகியதால், பெயரளவுக்கு மட்டுமே பிளாஸ்டிக் ரோடு அமைக்கப்பட்டது.

மாநகராட்சியில் சேகரமாகும் ஐந்து டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளையும் துகள்களாகி, இருப்பு வைத்துக் கொண்டால், அவ்வப்போது பிளாஸ்டிக் ரோடு அமைக்க ஏதுவாக இருக்கும்; குப்பை பிரச்னையும் தீரும். எனவே, மண்டலம்தோறும் கிடங்குகள் அமைத்து, "ஸ்ரெட்டர்' மெஷின்கள் மூலமாக பிளாஸ்டிக் துகள்களாக மாற்றி, கிடங்குகளில் இருப்பு வைக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீரழிவு தடுக்கப்படும். கமிஷனர் செல்வராஜிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: குப்பை அள்ளும் பணி வேகமாக நடந்தாலும், சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் நகரம் மாசடைந்த தோற்றத்தில் தெரிகிறது. குப்பை அள்ளும் வாகனங்களில் வலை கட்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் மூலமாக, பரவியுள்ள பாலித்தீன் காகிதங்களை பொறுக்கி எடுத்து, அழிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகப்படியான குப்பை குவிவதால், இரண்டு "ஸ்ரெட்டர்' மெஷின்கள் போதுமானதாக இல்லை; அடிக்கடி பழுதாகின்றன. எனவே, கூடுதல் மெஷின்கள் வாங்கி, மண்டலம் வாரியாக இயக்கப்படும். இருப்பினும், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பயன்பாட்டுக்கு முழுமையாக தடை விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, ஓரிரு வார்டுகளில் மட்டும் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படும். ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள், "டாஸ்மாக்' பார்கள் உட்பட அனைத்து கடைகளிலும் பாலித்தீன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். இனி, அதிகாரிகள் கவனக்குறைவாக இருக்காமல், தடை செய்யப்பட்ட மக்காத பொருட்களை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து நடக்கும் சுகாதார நிலைக்குழு கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது, என்றார்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

Print PDF

தினமலர்          07.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

ஆனைமலை : ஆனைமலை பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மனித சங்கிலி மற்றும் ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து வணிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வணிகர் சங்க தலைவர்கள் மற்றும் வணிகர்களிடையே கலந்தாலோசிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆனைமலை பேரூராட்சி சார்பில் ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பொதுமக்களிடையை வலியுறுத்தப்பட்டது. ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலம் சென்றது. ஊர்வலம் முடிந்த பிறகு ஆனைமலை முக்கோணம் பகுதியில்; ஆனைமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 100 மாணவர்களும், காந்தி ஆசிரமம், மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 300க்கும் அதிக மானவர்கள் கலந்து கொண்டு மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரூராட்சி துணைத் தலைவர் நாச்சிமுத்து, செயல் அலுவலர் கனகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 42 of 135