Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

சபரிமலையில் பிளாஸ்டிக் தடைஐகோர்ட் உத்தரவு படி நடவடிக்கை

Print PDF

தினமலர்                   20.11.2010

சபரிமலையில் பிளாஸ்டிக் தடைஐகோர்ட் உத்தரவு படி நடவடிக்கை

சபரிமலை: கேரள ஐகோர்ட் உத்தரவு படி சபரிமலையில் பிளாஸ்டிக் தடை உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி 30 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் எல்லா ஆண்டும் சீசன் காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதால் அதை அமல்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்து வருகிறது. குறிப்பாக பக்தர்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் மினரல் வாட்டர் பாட்டில்கள், வழிபாடுக்காக கொண்டு வரும் பிளாஸ்டிக் குப்பிகள் மலை போல் குவிவதால் அதை அழிப்பதில் பல சிரமங்கள் இருந்து வருகிறது. மகரவிளக்கு சீசனில் குவியும் குப்பைகளை அகற்ற முடியாலல் அது வனத்தில் தேங்குகிறது. இதனால் சபரிமலை வனம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்த கேரள ஐகோர்ட் தேவசம்போர்டுக்கு உத்தரவிட்டுள்ளதால் 30 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எருமேலி, பம்பை போன்ற இடங்களில் குளியல் நடத்தும் பக்தர்கள் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்களின் பிளாஸ்டிக் கவர்களை தூக்கி வீசாமல் அதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என்று கேட்டுக்கொளப்பட்டுள்ளார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் முழுமையாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து காடுகளை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

 

தலையங்கம்: விழித்துக் கொள்வோம்!

Print PDF

தினமணி             16.11.2010

தலையங்கம்: விழித்துக் கொள்வோம்!

கடற்கரைப் பொதுக்கூட்டத்தின் முடிவில் மட்டும்தான் சுண்டல், முறுக்கு சாப்பிட்ட காகிதக் குப்பைகளும், அறுந்த செருப்புகளும், பிளாஸ்டிக் பைகளும் இறைந்து கிடக்கும் என்பதில்லை. அதைவிட மிக மோசமான குப்பைகள் கோயில் திருவிழாக்களின்போது ஏற்படுகிறது.

÷திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்பட சில கோயில்கள் 20 மைக்ரான் அளவுக்கும் தடிமன் குறைவான பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கின்றனவே தவிர, மறுசுழற்சிக்குத் தகுதியான பிளாஸ்டிக் குப்பைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இக்கோயில் நிர்வாகங்கள் ஈடுபடவில்லை. திருமலையில் இப்போதும்கூட தேவஸ்தான லட்டு கவுன்டரில் பிளாஸ்டிக் பைகள்தான் விற்பனையில் உள்ளன.

÷திருவண்ணாமலையில் ஒவ்வொரு நிறைநிலா நாளிலும் அண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கொண்டுவரும் குப்பை 100 முதல் 110 டன். இவற்றில் பெரும்பகுதி பிளாஸ்டிக் குப்பைகள். சென்ற ஆண்டு கார்த்திகை தீபத்தின்போது 220 டன் குப்பைகள் சேர்ந்தது. இந்த ஆண்டு இன்னும் அதிகரிக்கும் என்கிற கவலையில் இருக்கிறது, திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம்.

÷சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் ஒரு முன்மாதிரியாகச் செயல்பட்டு, பக்தர்களைத் தேடிச்சென்று, அவர்களிடம் பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு கேரள மாநிலத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கோயில் நிர்வாகிகள் நேரடியாகச் சென்று, ஐயப்ப சேவா சங்கங்களையும், குருசாமிகளையும் அழைத்துப் பேசுகின்றனர். பிளாஸ்டிக்கினால் சபரிமலையும் பம்பை நதியும் எவ்வாறு பாழ்படுகின்றன என்பதை விளக்குகின்றனர். இவர்களின் அடிப்படை நோக்கம் பக்தர்கள் சபரிமலைக்கு வரும்போது இருமுடியிலோ அல்லது அவர்களது பைகளிலோ பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வதுதான்.

÷சபரிமலைக்கு ஓராண்டில் சுமார் ஒரு கோடி பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் கொண்டுவரும் குப்பைகள் 350 டன் பிளாஸ்டிக், 550 டன் காகிதங்கள். இவை சபரிமலையின் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன. அதுமட்டுமே பிரச்னை அல்ல. இந்த பிளாஸ்டிக் பைகளில் பெரும்பாலும் பக்தர்கள் பாதி சாப்பிட்டு தூக்கி வீசிய உணவுப் பொருள்களும் இருக்கின்றன. இந்த உணவுக் குப்பைகளின் அளவு 2,000 டன் வரை. உணவுகளை அப்படியே மண்ணில் கொட்டினால் ஒரேநாளில் மக்கிப் போகும். ஆனால் பிளாஸ்டிக் பைகளில் இருக்கும் உணவுக்காக வனவிலங்குகள் அவற்றைச் சாப்பிட முற்படும்போது, பிளாஸ்டிக் பொருளையும் சேர்த்து விழுங்கி, இறந்துபோகும் சம்பவங்கள்தான் அதிகமாக நடக்கின்றன. ஆகவேதான், பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வராதீர்கள் என்று சொல்வதோடு அதனால் அங்கே ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, வனவிலங்குகள் இறப்பு குறித்தும் பக்தர்களுக்கு இவர்கள் விளக்குகிறார்கள்.

÷பிளாஸ்டிக் பைகளைவிடவும் மோசமான பிரச்னையாக தண்ணீர் போத்தல்கள் உருவெடுத்துள்ளன. தண்ணீர் போத்தல்கள் ஆங்காங்கே வீசப்படுகின்றன. இவை மக்காத பிளாஸ்டிக் பொருள்கள். இவற்றின்கேடு மிக அதிகம்.

÷ஒவ்வொரு பக்தரும் பிளாஸ்டிக் பை கொண்டுசெல்வதில்லை என்றும், பிளாஸ்டிக் போத்தல்களைப் பயன்படுத்துவதில்லை அல்லது ஒரு பிளாஸ்டிக் போத்தலை மட்டுமே தன் பயணம் முழுவதற்கும் பயன்படுத்துவது என்கிற குறிக்கோளுடன் செயல்பட்டாலே போதும், இந்தக் குப்பைகளில் பெரும்பகுதி குறைந்துவிடும்.

÷இதற்கு முதல்கட்டமாக கோயில் வளாகங்களில் உள்ள கடைக்காரர்களையும், அவர்களுக்குப் பொருள்கள் விநியோகம் செய்யும் உற்பத்தியாளர்களையும்கூட அழைத்துப்பேசி, பிளாஸ்டிக்கைத் தவிர்த்துவிட்டு பூஜைப் பொருள்களை எப்படியெல்லாம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் கோயில்களுக்குக் கொண்டுவர முடியும் என்பதை யோசித்தால் நன்மை கிடைக்கும்.

÷பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்கிற விழிப்புணர்வு ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அத்தகைய பொருள்கள் கிடைக்கும் வாய்ப்பே இல்லாமல் செய்வதும் புத்திசாலித்தனமாக அமையும்.

÷கோயிலைத் தூய்மை செய்யும் பணி தமிழருக்குப் புதிதல்ல. உழவாரப் பணியை தன் வாழ்வின் நோக்கமாகவே வைத்திருந்தவர் சமயக் குரவர்களில் ஒருவரான அப்பர் சுவாமிகள். இன்றும்கூட, சென்னையைச் சேர்ந்த சில அன்பர்கள் எந்த விளம்பரமும் இல்லாமல் இத்தகைய உழவாரப் பணிகளைச் செய்து வருகின்றனர். கோயிலுக்கு வெள்ளை அடிப்பது, தரையைத் துடைப்பது, கோபுரங்களில் முளைக்கும் செடிகொடிகளை அகற்றுவது ஆகிய பணிகளைச் செய்கின்றனர். ஆனால், இந்த உழவாரப் பணியின் நோக்கம் இன்னும் பரந்துவிரிந்ததாக இருக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.

÷வெறும் கோயிலை மட்டுமல்ல. கோயிலுக்கு வெளியே பக்தர்களால் போடப்படும் இத்தகைய பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவது, பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்கூட இற்றை நாளில் அவசியமான உழவாரப் பணிதான்.

÷உலகம் நம்முடன் முடிந்துவிடுவதில்லை. நாளையும் நன்றாகவும் வளமாகவும் இருந்தால்தான் நமது சந்ததியர் நிம்மதியாக வாழமுடியும் என்கிற நல்லெண்ணம் வேண்டாமா?

 

புவி வெப்பத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட 9 மாநகராட்சிகளில் பசுமை திட்டம்

Print PDF

தினகரன்                 16.11.2010

புவி வெப்பத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட 9 மாநகராட்சிகளில் பசுமை திட்டம்

கோவை, நவ 16: நகரமயமாக்கல், புவி வெப்பமடைதல் போன்ற காரணங்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கோவை உட்பட தமிழகத்தின் 9 மாநகராட்சி பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் பசுமை திட்டம் செயப்படுத்தப்படவுள்ளது.

ஒரு நகரின் மொத்த புவியியல் பரப்பில் 20 முதல் 30 சதவீதம் பசுமை நிறைந்ததாக இருந்தால் மட்டுமே அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம், சுகதாரம் மேம்பட்டதாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. தற்போது காடுகள் அழிப்பு, தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பால் புவி வெப்பமடைந்து வருகிறது.

மத்திய நகர்ப்புற அமைச்சகம் நடத்திய ஆய்வில் பெரும்பாலான முன்னணி நகரங்களின் வாழ்க்கை தரம் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவுகோலுக்கு குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் நகரமயமாக்கல், புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நகரங்களை பசுமையாக்கும் திட்டம்(கிரீனிங் ஆப் சிட்டீஸ்) செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 9 மாநகராட்சி பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

முதல் கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தனியார் கன்சல்டிங் நிறுவனங்களை கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், "மாநகரங்களை பசுமையாக்கும் திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும். மரம் வளர்ப்பு மட்டுமில்லாமல், நகரை பொலிவூட்டக்கூடிய தாவரவியல் பூங்காக்கள், பூந்தோட்டம் ஏற்படுத்துதல், சிறு குளங்கள் அமைத்து தாமரை, வாத்து வளர்ப்பு, குழந்தைகளுக்கு என தனி பூங்காக்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள நீர் நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நகரங்களை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் ஆலோசனை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் ஆலோசனை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்," என்றனர்.

 


Page 61 of 135