Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பொருள்கள் தடை மசோதாவை சட்டமாக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Print PDF

தினமணி               11.11.2010

பிளாஸ்டிக் பொருள்கள் தடை மசோதாவை சட்டமாக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை, நவ. 10: பிளாஸ்டிக் பொருள்கள் தடை மசோதாவை சட்டமாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.

இதுகுறித்த வழக்கு விவரம்:

மதுரை மேலவாசலில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள் பொது இடத்தில் குவிக்கப்பட்டிருந்ததை, நாளிதழ் ஒன்று படத்துடன் செய்தியாக வெளியிட்டது. இதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, அந்தக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்திய பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் (பாலித்தீன்) கழிவுகளால் மாநிலத்தில் பல இடங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் தடைச் சட்ட மசோதா தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிபதிகள் ஆர்.பானுமதி, எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

மக்காத குப்பைகள் தடுப்புச் சட்டம் 2010-ஐ கொண்டுவருவது குறித்து அரசு துரிதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பிளாஸ்டிப் பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துக் கண்டறியவும், அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளைக் கண்டறிவது குறித்தும் ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் கடைப்பிடிக்கலாம்.

2003-ம் ஆண்டு பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் பயன்பாட்டுச் சட்டத்தை ஆட்சியர்கள் செயல்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை ஊடகங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் செயல்படும் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனங்கள் 1999-ம் ஆண்டு விதிகளைப் பின்பற்றுகின்றனவா என கண்காணித்து, விதியை மீறும் நிறுவனங்கள் மீது சட்டத்துக்குள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் துறையினருடன் இணைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை காரைக்குடி நகராட்சியில் முழுவீச்சில் அமல்

Print PDF

தினகரன்              11.11.2010

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை காரைக்குடி நகராட்சியில் முழுவீச்சில் அமல்

காரைக்குடி, நவ. 11: காரைக்குடி நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை முழுவீச்சில் அமல்படுத்தப்பட உள்ளது. மீறி பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி தலைவர் முத்துத்துரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

காரைக்குடி நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகள், கப்புகள், கேரி பேக், உணவு தட்டுகளை பயன்படுத்திவிட்டு கண்ட இடங்களில் வீசிவிடுகின்றனர். இவை மக்கும் தன்மை இல்லாதவை என்பதால், மழைநீரை நிலத்திற்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதும் கடினம். இதனை விலங்குகள் உண்பதால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

நகராட்சியின் அழகை பராமரிக்கவும், சுகாதாரத்தை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது. நகராட்சிக்கு உட் பட்ட ஓட்டல்கள், டீ கடை கள், மளிகை கடைகள் உட் பட அனைத்து நிறுவனங்களிலும் கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடந்த மாதம் முதல் தடைவிதிக்கப்பட்டது. இது 80 சதவீதம் வரை நடைமுறைக்கு வந்துள்ளது. பண்டிகை நேரம் என்பதால் சற்று காலம் தாழ்த்தப்பட்டு, தற்போது முழுவீச்சில் பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுற்றுலா தலங்களை தவிர மற்ற நகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக இங்கு தடை அமல்படுத்தப்படுகிறது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வோருக்கு ரூ.5 ஆயிரமும், மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.2 ஆயி ரத்து 500, சில்லரை விற்பனையாளர்களுக்கு ரூ.750 வீதம் அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் பொருட் களை உபயோகிப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இதற்கு பொதுமக்கள் முழு அதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும் தமிழகம் முழுவதும் ஐகோர்ட் கிளை உத்தரவு

Print PDF

தினகரன்            11.11.2010

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும் தமிழகம் முழுவதும் ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, நவ. 11: தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பை களை பயன்படுத்த தடை விதிக்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையில் பொது இடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்தது தொடர்பாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானது. இதை ஐகோர்ட் கிளை தாமாக முன் வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மனுவை நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க அரசு, தமிழ்நாடு மட்காத குப்பை சட்டம் (கட்டுப்படுத்தல்) நிறைவேற்றி, அதனை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பேக்கிங் பொருட்களால் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி பிற மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும், பிளாஸ்டிக் பைகளை தடை செய்யவும் மறுசுழற்சி பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தல் விதியின் கீழ் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து மக்கள் மத்தியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனுமதி பெறாமல் இயங்கும் பிளாஸ்டிக் மறுசுழற்சி யூனிட்டுகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியுடன் செயல்படும் யூனிட்டுகளில் மறுசுழற்சி பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் பயன்பாடு விதி தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த விதியை மீறி செயல்படுவோர் மீது மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 


Page 62 of 135