Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

"பிளாஸ்டிக் ஒழிப்பு தமிழகம் முழுவதும் அமலாகும்'

Print PDF

தினமணி 17.09.2010

"பிளாஸ்டிக் ஒழிப்பு தமிழகம் முழுவதும் அமலாகும்'

நாகர்கோவில், செப்.16: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டுள்ளதைப் போன்ற நிலை தமிழகம் முழுவதும் வரும். இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தெரிவித்தார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் நாகர்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சுற்றுச்சூழல் விருதுகளை 11 பேருக்கு வழங்கி அவர் மேலும் பேசியதாவது:

இயற்கையை அழிக்க கூடாது என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்குவது அரசின் கடமை.

மாநிலத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கவும், கடந்த நிதியாண்டில் ரூ31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைக்கும் விஷயத்தில் எல்லோரும் அக்கறையுடன் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோன்ற நிலை தமிழகம் முழுவதும் வரும்.

தமிழகத்தில் 20 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய சட்டம் உள்ளது. ஆனால் பிறமாநிலங்களில் இருந்து அந்தவகையிலான பிளாஸ்டிக் பொருள்கள் இங்கு கொண்டுவரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது. அவற்றை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் டன் குப்பைகள் கழிவுகளாக தேங்குவதாக தெரியவந்துள்ளது. இதில் 900 டன் பிளாஸ்டிக் குப்பைகள். மறுசுழற்சிக்கு உள்படுத்த முடியாதவை 186 டன் பிளாஸ்டிக் குப்பைகள். சிமெண்டு ஆலைகளில் ஊடுஎரிபொருளாக பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்துவது கண்டறியப்பட்டு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு எரிபொருளாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள், ஆன்மிக தலங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் சேருகின்றன. அந்த வகையில் 15 இடங்களைத் தேர்வு செய்து அவ்விடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் சேராத வகையில் தடுக்கும் பொருட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கடலூர், கரூர், மணலி ஆகிய இடங்களில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் மூலம் புகை மாசு கண்காணிப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் மைதீன்கான்.

 

பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Print PDF

தினமணி 15.09.2010

பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை,செப். 14: பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் தொடர்பாக, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்டப் பொறியாளர்களிடம் அறிக்கை பெற்று வாரியத் தலைவர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மேலவாசலில் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் அபாயம் விளைவிக்கும் வகையில் குவிக்கப்பட்டிருந்தது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். இப்பிரச்னை தொடர்பாக நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மேலவாசலில் இருந்த குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டு விட்டது. தற்போது, யாரும் ஆக்கிரமிக்காத வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டி.முருகேசன். எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இதேபோன்ற வழக்கு சென்னையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் கழிவுகள் சேகரிப்புத் தொடர்பாக தடை விதிப்பது குறித்து மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது, நீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிவித்தது.

அந்த நெறிமுறைகள் தற்போது பின்பற்றப்படுகிறதா என, மாவட்ட வாரியாக பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் குறித்து, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர்களிடம் அறிக்கைபெற்று, தற்போது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து வாரியத் தலைவர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை 18.10.2010-க்கு ஒத்திவைத்தது.

 

களியக்காவிளையில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை

Print PDF

தினமணி 09.09.2010

களியக்காவிளையில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை

களியக்காவிளை, செப். 8: களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

திருத்துவபுரம் முதல் களியக்காவிளை வரை உள்ள கடைகளில் இச் சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயமுருகன் முன்னிலையில், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) இரா. சுருளிவேல் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதில், தடையை மீறி பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து ரூ 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.

இப் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தொடரும். எனவே, வணிகர்கள் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 72 of 135