Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

தி.மலை கிரிவலப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

Print PDF

தினகரன் 06.08.2010

தி.மலை கிரிவலப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

திருவண்ணாமலை, ஆக. 6: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து குப்பைதொட்டியில் சேர்க்கும் பணியை கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு பெண் செய்துவருகிறார்.

கார்த்திகை தீபம், கிரிவலத்தால் உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரம் திருவண்ணாமலை. எனவே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆன்மீக சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அமைதி, இயற்கை சூழல், அண்ணாமலையார் கோயிலின் பழமை மற்றும் பிரமாண்டம், ஆசிரமங்கள் போன்றவற்றால் ஈர்க்கப்படும் வெளிநாட்டினர் ஆண்டுதோறும் இங்கு வந்து மாதக்கணக்கில் தங்கி செல்கின்றனர்.

அதனால், நாளுக்கு நாள் வெளிநாட்டினரின் வருகை அதிகரித்து வருகிறது. மேலும், இங்கு வரும் வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகளில் பலர் இங்கு பல்வேறு சேவைப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கிரிவலப்பாதையில் குழந்தைகள் பூங்கா, தனியார் மருத்துவமனை, காதுகேளாதோர் சிறப்பு பள்ளி போன்றவை வெளிநாட்டினரின் நேரடி முயற்சியாக உருவானது.இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை வந்தார்.

கிரிவல மலையை வலம் வந்தவருக்கும் இங்குள்ள சூழ்நிலை மிகவும் கவர்ந்தது. அதனால், திருவண்ணாமலைக்கு அடிக்கடி வருவதையும், மாதக்கணக்கில் இங்குள்ள ஆசிரமத்தில் தங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

கிரிவலம் செல்லும் போது, மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னுடன் கொண்டு செல்லும் பைகளில் சேகரித்து வருகிறார். கிரிவலம் முடிந்ததும், நகராட்சி குப்பைத் தொட்டியில் அதனை சேர்க்கிறார். இந்த சேவையை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த மாதம் திருவண்ணாமலை வந்த இவர் வாரத்துக்கு நான்கு நாட்கள் கிரிவலம் சென்று வருகிறார்.

அவரை வியப்பாக பார்க்கும் பலரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் இங்கு குப்பையை சேகரிக்கிறாரே என்கிற எண்ணம்தான் தோண்றும். ஆனால், அவரது செயலுக்கு பின்னாள் மிகப்பெரிய சேவை மறைந்திருப்பது பலராலும் உணர முடியாததுதான். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, கிரிவலமலையை மிகவும் நேசிப்பதாகவும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தன்னால் முடிந்தவரை குறைக்கவே இப்பணியை தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், கிரிவலப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த நிரந்தர தடையை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். நியாயமான நீண்டநாள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.

 

நகரின் மையத்தில் குப்பைக் கிடங்கு: புகை நகராகும் மன்னார்குடி

Print PDF

தினமணி 04.08.2010

நகரின் மையத்தில் குப்பைக் கிடங்கு: புகை நகராகும் மன்னார்குடி

மன்னார்குடி, ஆக. 3: மன்னார்குடியில் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சியின் குப்பைக் கிடங்கு, அந்த நகரைப் பெரும் சுற்றுச்சூழல் அபாயத்துக்குள்ளாக்கி வருகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நிறைந்த குடியிருப்புப் பகுதிக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்தக் குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன் மன்னார்குடியில் - அன்றைய சூழலுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான - டெப்போ சாலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. அப்போதே சில நூறு அடிகள் அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும், அன்றைய காலகட்டத்தில் இவ்வளவு குப்பைகளோ, பாலிதீன், மின்னணு, மருத்துவக் கழிவுகள் என்று பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் குப்பை வகைளோ இல்லை என்பதால், மக்கள் இதை ஒரு பெரும் பிரச்னையாகக் கருதவில்லை.

ஆனால், இடைப்பட்ட காலகட்டத்தில் மன்னார்குடி நகரின் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கும் நவீன வாழ்க்கை முறைப் பயன்பாட்டுக்கும் ஏற்ப தொடக்கக் காலத்தில் கொட்டப்பட்ட குப்பைகளைப்போல பல மடங்கு குப்பைகள் கொட்டப்படும் இடமாக இந்தக் கிடங்கு மாறியது.

மேலும், இந்தக் கிடங்கைச் சுற்றிலும் அந்தக் காலத்தில் வயல்வெளியாக இருந்த பகுதிகள் முழுவதும் குடியிருப்புப் பகுதிகளாக மாறின. நகரம் குப்பைக் கிடங்கிலிருந்து சில கிலோ மீட்டர்கள் கடந்து நீண்டு வளர்ந்தது.

விளைவு,ஏற்கெனவே இந்தக் குப்பைக் கிடங்கின் அருகிலிருந்த சஞ்சீவித் தெரு, ..சி சாலை, ராவணன்குட்டை ஆகிய குடியிருப்புப் பகுதிகளோடு ஆர்.பி. சிவம் நகர், மீனாட்சி நகர், அருணா நகர், கொத்தவல்லி அம்மன் நகர், மருதுபாண்டி நகர் எனப் புதிய நகர்கள் தோன்றி இந்தக் குப்பைக் கிடங்கைச் சுற்றி குடியிருப்புப் பகுதிகளாகக் காட்சி அளிக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.

மேலும், அரசினர் ஆய்வு மாளிகை, அரசுக் கல்லூரி, பள்ளிகள், நகரின் இரு பெரும் விளையாட்டுத் திடல்கள், வேளாண் துறை அலுவலகங்கள், மின் வாரிய அலுவலகம், காந்திஜி நினைவு மண்டபம், திருமண மண்டபங்கள் எனப் பல முக்கிய இடங்களும் இந்தக் குப்பைக் கிடங்கிலிருந்து கூப்பிடுத் தொலைவுக்குள் இருக்கின்றன.

இவ்வளவுக்கும் மத்தியில்தான் கழிவு மேலாண்மை என்றால் என்ன என்று கேட்கும் வகையில், 10 ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே 10 அடி குப்பைக் குன்றுகளுடன் எந்நேரமும் புகையும் "குப்பை எரிமலை'யாகக் காட்சி அளிக்கிறது நகராட்சியின் குப்பைக் கிடங்கு.

இங்கிருந்து காற்றில் பரவும் சாம்பல் கலந்த புகையின் நெடியை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு உணர முடிகிறது என்கின்றனர் நகரவாசிகள். அருகில் வசிக்கும் பலர் - குறிப்பாக குழந்தைகள், முதியோர் - மூச்சுத்திணறல் கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர்.

ஆனாலும்,இந்த பிரச்னையில் மன்னார்குடி நகர்மன்றத்தை ஆளும் மக்கள் பிரதிநிதிகளின் அக்கறை தேர்தலோடு முடிந்துவிடுகிறது என்கின்றனர்.

இதுகுறித்து இந்த பிரச்னைக்காகத் தொடர்ந்து போராடிவரும் சமூக ஆர்வலர் ஆர்.வி. ஆனந்த் கூறியது:

"நூறு வீடுகள்; நூறடிக்குள் குப்பைக் கிடங்கு. எவ்வளவு அபாயகரமான சூழல் இது?

மேலும், கழிவு மேலாண்மை தொடர்பான நடைமுறைகள் இங்கு துளியும் பின்பற்றப்படுவதில்லை.

அதனால், இந்த பிரச்னைஇப்போது குப்பைக் கிடங்குக்கு அருகிலுள்ள பகுதிவாழ் மக்களின் பிரச்சினையாக மட்டும் இல்லை. ஒட்டுமொத்த நகரின் பிரச்னையாகவும் மாறிவிட்டது. குளிர்க்கால இரவுகளில் நகரின் பாதி பகுதியில் இந்தப் புகைமூட்டத்தையும் சாம்பல் நெடியையும் உணர முடிகிறது.

பலர் நோயாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்த பிரச்னைக்காகப் போராடிவருகிறோம். ஆனால், நகராட்சி நிர்வாகமோ ஆபத்தான ஒரு பிரச்னையை அலட்சியப்படுத்துகிறது.

இனியும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பதோடு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை அரசு நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைத்துவிட்டு, வேறு இடங்களுக்கு குடிபெயரும் முடிவில் இருக்கிறோம்' என்றார் ஆனந்த்.

திரும்பிய வீதிகளெல்லாம் குளங்களுக்குப் பெயர் பெற்றது மன்னார்குடி நகரம். அந்தக் காலம் போய்விட்டது. இப்போது குப்பை எரிந்தழிந்து எழும் சாம்பல் புகை சூழ்ந்த நகரமாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலை அப்படியே தொடர்ந்தால் எதிர்காலத்தில் நோயாளிகள் நகரமாக மன்னார்குடி மாறிவிடக்கூடும்.

 

மழை பெய்தால் மட்டுமே தீர்வு ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 8வது நாளாக புகைமூட்டம்

Print PDF

தினகரன் 04.08.2010

மழை பெய்தால் மட்டுமே தீர்வு ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 8வது நாளாக புகைமூட்டம்

நெல்லை, ஆக.4:ராமையன்பட்டி மாநகராட்சி குப்பை கிடங்கில் பிடித்த தீயை அணைக்க 8 தினங்களாக தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். மாநகராட்சி தற்போது மாற்று இடத்தில் குப் பையை கொட்டுவதற்கும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராமையன்பட்டி பஞ்சாயத்தின் அனுமதி இல்லாமலேயே கடந்த 10 ஆண்டு காலமாக நெல்லை மாநகராட்சி அங்கு குப்பை களை கொட்டி வந்தது. சுமார் 20 ஏக்கர் பரப்பில் கொட்டப்பட்ட மாடு, கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவற்றால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிய தோடு, அருகிலுள்ள குளங்களும் மாசுப்பட்டுவந்தன. இந்த குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறிய ஈக்கள், கொசுக்களால் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சுகா தார சீர்கேடுகள் அதிகரித்தன. இதை கண்டித்து கடந்த சில ஆண்டுகளாக ராமையன்பட்டி மக்கள் போராடி யும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி குப்பை கிடங்கில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகத்தால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பரவிய பின்னரே, குப்பை கிடங்கில் தீப்பிடித்த விபரம் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்து 12 தீயணைப்பு வாகனங்கள் களத்தில் இறங்கியும், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து 3 தினங்கள் போராடி தீய ணைப்பு துறையினர் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படாதவாறு தடுத்தனர்.நேற்றோடு 8 தினங்கள் முடிவடையும் நிலையில், புகை மண்டலம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. கிடங் கின் வெளிப்பகுதிகளில் மட்டுமே தீய ணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ள தீயணைப்பு துறையினர், மழை பெய் தால் மட்டுமே பணிகள் முழுமை பெறும் என்கின்றனர். பாளை, பேட்டை, நான்கு நேரி ஆகிய 3 தீய ணைப்பு நிலைய வாகனங் கள் மட்டுமே தற்போது தீயை அணைக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளன.

நெல்லை மாநகராட்சி கடந்த ஒரு வார காலமாக குப்பைகளை சீவலப்பேரி சாலையில் உள்ள பழைய குப்பை கிடங்கில் கொட்டி வருகிறது. அங்குள்ள குப்பைகளும் சாலை ஒரத்தில் கொட்டப்படுவதால், கேடிசி நகர் வரை துர் நாற்றம் வீசுகிறது.

மேலும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பேப்பர் கள் ஆங்காங்கே பறப்ப தால் பொது மக்கள் அங்கு குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீண்டும் குப் பைகளை ராமையன்பட்டி கொண்டு சென்றால் அப்ப குதி மக்கள் போராட தயா ராக உள்ள நிலையில், குப் பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை இனிமேலாவது செயல்படுத்த முன்வரவேண்டும்.

தண்ணீர் தட்டுப்பாடு

குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு துறை வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர் தேவையாக உள்ளது. ஆனால் மாநகராட்சி சார்பில் தற்போது 10 டேங்க் தண்ணீர் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு டேங்கில் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே பிடிக்க முடியும். தாமிரபரணி ஆறு மற்றும் குளங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் தண்ணீர் எடுத்தால், ஒரு முறைக்கு 14 லிட்டர் டீசலை செலவிட வேண்டும். இதற்கு ஆகும் செலவுகள் தீயணைப்பு துறையினரை தலைசுற்ற வைக்கிறது.

மாற்று இடத்தில் குப்பை கொட்டவும் எதிர்ப்பு

நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கில் கடந்த 27ம் தேதி பிடித்த தீயால் 8 நாட்களுக்கு பிறகும் அங்கு புகை மூட்டம் ஓயவில்லை. மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும் என தீயணைப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


Page 80 of 135