Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

நெல்லையில் மூன்றாவது நாளாக புகை மண்டலம்

Print PDF

தினமணி 30.07.2010

நெல்லையில் மூன்றாவது நாளாக புகை மண்டலம்

திருநெல்வேலி, ஜூலை 29: திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் பற்றிய தீ 3-வது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்து எரிந்தது. இதனால் அப் பகுதியில் ஏற்பட்டிருந்த புகை மண்டலம் காரணமாக, பொதுமக்கள் மூன்றாவது நாளும் அவதியடைந்தனர்.

ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப் பிடித்தது. இதையடுத்து அங்கு 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நள்ளிரவுவரை தீயணைப்புப் பணி நடைபெற்றது. பலத்தக் காற்று வீசியதால் புகை அதிகளவில் வெளியேறியது. இதனால் தீயணைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. புகையின் தாக்கம் திருநெல்வேலி மாநகர் முழுவதும் இருந்தது.

இந்த தீ புதன்கிழமையும் வேகமாக எரிந்ததால், அப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. ராமையன்பட்டி பகுதியில் 5 கி.மீ. சுற்றளவுக்கு புகைமண்டலம் கருமையாக சூழ்ந்திருந்தது. புகைமண்டலத்தின் காரணமாக, வேளாங்கண்ணி நகர், சிவாஜிநகர், அரசு புதிய காலனி, ஷகிநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர் வீடுகளுக்குச் சென்றனர். மூச்சுத் திணறால் மூதாட்டி முத்தாச்சி அம்மாள் இறந்தார்.

இந்நிலையில், 3-வது நாளாக வியாழக்கிழமையும் தீ தொடர்ந்து எரிந்தது. அப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. தீயணைப்புப் படை வீரர்களும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டதின் விளைவாக, ஓரளவுக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. இருப்பினும் குப்பைக் கிடங்கின் உள்பகுதியில் வெப்பத்தின் அளவு குறையாமலும், தீ வேகமாக எரிந்து கொண்டிருந்தது. இதனால் குப்பை கிடங்கின் உள்பகுதிக்குச் சென்று தீயை அணைப்பதில், தீயணைப்பு படைவீரர்கள் திணறினர்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அதிகாரி டி.பத்மகுமார் கூறியதாவது:

அணைக்கப்பட்ட பகுதியிலேயே தீ மீண்டும் எரிவதால், தற்போது செயின் பொக்லைன் கொண்டு குப்பை கிளறிவிடப்பட்டு தீ அணைக்கப்படுகிறது. 6 தீயணைப்பு வாகனங்கள், 10 க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் ஆகியவற்றுடன் 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலைக்குள் தீயை முழுமையாக அணைத்துவிடுவோம் என எதிர்பார்க்கிறோம் என்றார் பத்மகுமார்.

தீ ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதால், புகை மண்டலம் குறைந்துள்ளது. இருப்பினும் முழுமையாக தீ அணைக்கப்படாததால், அங்கு மூன்றாவது நாளாக புகை மண்டலம் முற்றுகையிட்டதுபோன்று நின்றது. இதன் விளைவாக மூச்சுத் திணறலும், கண் எரிச்சலும் ஏற்படுவதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். மேயர் பார்வை: இந்நிலையில் ராமையன்பட்டி உரக் கிடங்கை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ.சுப்பிரமணியன், மண்டலத் தலைவர்கள் சுப.சீதாராமன்,எஸ். விஸ்வநாதன், மாநகர பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டு,ஆய்வு செய்தனர்.

 

மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ நெல்லையில் 3வது நாளாக புகைமண்டலம், மரங்கள் கருகின

Print PDF

தினகரன் 30.07.2010

மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ நெல்லையில் 3வது நாளாக புகைமண்டலம், மரங்கள் கருகின

நெல்லை, ஜூலை 30: நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் நேற்று 3வது நாளாக நகரப்பகுதிகளை புகை மண்டலம் சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த குப்பை கிடங் கில் கடந்த 27ம் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் நகரப்பகுதி முழு வதும் புகை மண்டலம் சூழ்ந்தது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் மூலம் வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களில் தீ பிடித்துள்ளதால் நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று 3வது நாளாக புகை மண்ட லம் சூழ்ந்தது. மேலும் குப்பை கிடங்கை சுற்றி நடப்பட்டிருந்த ஏராளமான வேம்பு, வாகை, யூக்கலிப்டஸ் மரங்கள் அனைத்தும் தீயில் கருகின.

ராமையன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்களுக்கு புகை மண்டலத்தால் மூச்சுதிணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். மூச்சுத்திணறி முத் தாட்சி என்ற மூதாட்டியும் இறந்தார். குப்பை கிடங்கு அருகில் உள்ள பலர் வீடு களை காலி செய்து வெளியேறினர். தொடர்ந்து எழும் புகையை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து மேயர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநகராட்சிக்கு சொந்தமான ராமையன்பட்டி உரக்கிடங்கில் கடந்த 27ம்தேதி திடீரென தீப்பிடித்தது. வெளியூரில் இருந்த நான் உடனடியாக கலெக்டருடன் தொடர்பு கொண்டு தீயணைப்பு வண்டிகளை அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டேன். கலெக்டரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகள் தீயை அணைக்கும் முயற்சியில் முழு வீச்சுடன் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினரின் அயராத முயற்சியால் தீ பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

காற்று பலமாக சுழன்று அடிப்பதால் தீயை அணைக்க தடங்கல் ஏற்படுகிறது. சம்பவ இடத்தை நான் மண்டல தலைவர்கள், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டேன். இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக தீ அணைக்கப்படும்.

 

வேலூர் பகுதியில் தடை ஓட்டல், டீ கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்

Print PDF

தினகரன் 29.07.2010

வேலூர் பகுதியில் தடை ஓட்டல், டீ கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்

வேலூர், ஜூலை 29: வேலூரில் ஓட்டல் மற்றும் டீ கடைகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் 20 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஓட்டல்கள், டீ கடைகள், திருமண மண்டபங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு இதுவரை கிடப்பில் இருந்தது.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் கோவிந்தன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் கவுரிசுந்தர் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் இறங்கினர்.

இந்த குழுவினர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் உள்ள டீ கடை, ஓட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் டம்ளர்கள், காலாவதியான மற்றும் உற்பத்தி தேதி அச்சிடாமல் இருந்த 20 மூட்டை குடிநீர் பாக்கெட்டுகள், பழங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

‘வேலூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், டீ கடைகள், டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்கள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்கள், கவர்கள் பயன்படுத்தக் கூடாது. தடையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ரெய்டு தொடர்ந்து நடத்தப்படும்’ என்று மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் கோவிந்தன் கூறினார்.

Last Updated on Thursday, 29 July 2010 08:06
 


Page 82 of 135