Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

திருத்தணியில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

Print PDF

தினகரன் 28.07.2010

திருத்தணியில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

திருத்தணி, ஜூலை 28: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா வரும் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருத்தணிக்கு வருவார்கள்.

இதனால் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் சோமசுந்தரம், ஏடிஎஸ்பி செந்தில்குமார், ஆர்டிஓ ஜெயக்குமார், தாசில்தார் விஜயராகவலு, அறங்காவலர் பொன் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி வரவேற்றார்.

கூட்டத்தில், கலெக்டர் ராஜேஷ் கூறியதாவது:

திருத்தணி முழுவதும் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை வரும் 1ம் தேதி முதல் நிரந்தரமாக தடை செய்ய நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரோஸ் மில்க், ரஸ்னா, மோர் போன்றவற்றை பாக்கெட்களில் விற்பதை தடுக்க வேண்டும்.

பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் தெருக்கள், சாலைகளில் மின்விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும்.

பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள், பக்தர்களிடம் நடத்துனர்களோ, ஓட்டுநர்களோ கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவுறுத்த வேண்டும்.

காவல் உதவி மையங்கள், அவசர உதவி மையங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல்படவும், பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதுடன், குறைந்தபட்சம் 30 இடங்களிலாவது குடிநீர் தொட்டி வைக்க வேண்டும்.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும், குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலந்த குடிநீர் நிரப்ப வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும். நல்லான் குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.

விழாவை முன்னிட்டு, தற்காலிகமாக அமைக்கப்படும் 5 பஸ் நிலையங்களில் போதிய அடிப்படை வசதிகளும், ஓட்டல், கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

வரும் 1ம் தேதி முதல் அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். விழிப்புட னும் சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டத்தில், நகராட்சி ஆணையர் செண்பகராஜன், திருத்தணி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சலபதிராவ், மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அண்ணாமலை, துணை இயக்குநர் சம்பத், மாவட்ட போக்குவரத்து அலுவலர் கந்தசாமி, டிஎஸ்பி மாணிக்கம், மக்கள் தொடர்பு அலுவலர் சாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

தண்ணீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசு சர்வதேச மாநாடு

Print PDF

தினமணி 28.07.2010

தண்ணீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசு சர்வதேச மாநாடு

பெங்களூர், ஜூலை 27: தண்ணீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசு, சுகாதாரம் குறித்த சர்வதேச மாநாடு பெங்களூர் சென்ட்ரல் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை துவங்குகிறது.

இதை ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பெங்களூர் பல்கலைக்கழக துணை வேந்தர் என். பிரபுதேவ் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்போது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி விலங்கியல் துறை சார்பில் பெங்களூர் ஞானஜோதி கலையரங்கில் வரும் 29 முதல் 31-ம் தேதி வரை சர்வதேச மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாட்டை ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் தொடங்கி வைத்து மாநாட்டு மலரை வெளியிடுகிறார். உயர்கல்வித் துறை அமைச்சர் அரவிந்த லிம்பாவளி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

வேளாண் அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.வி.தேவராஜ் கெüரவ விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இனத்தின் நலனுக்காக தண்ணீரையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது, காலநிலை, உணவுப் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. திட்டங்கள் தீட்டப்படுகிறது.

புதிய திட்டங்கள், யோசனைகள் மற்றும் ஆய்வறிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிவைத்து அவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோருவோம். 17 வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் 22 மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரும் பேர் பங்கேற்கின்றனர். பல்வேறு தலைப்புகளில் 400 பேர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர் என்றார் அவர்.

 

மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி 26.07.2010

மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

உதகை, ஜூலை 25: நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியது:

நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் 20 மைக்ரான்களுக்கு குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை அடைத்து விற்பனை செய்யவும், கேரி பேக்குகள், யூஸ் அண்டு த்ரோ டம்ளர் மற்றும் தட்டு ஆகிய பொருட்களை பயன்படுத்தவும் தடை விதித்து 2000-ம் ஆண்டிலேயே அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி பிளாóடிக் கேரி பேக், டம்ளர் மற்றும் தட்டு போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதித்து தண்டிக்கப்படுவர் எனவும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது நீலகிரி மாவட்டத்தில் மேற்படி பொருட்களின் பயன்பாடு அதிகளவில் காணப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், தட்டு மற்றும் டம்ளர் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம். அத்துடன் இத்தகைய பொருட்களை பயன்படுத்துவோரைக் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பினை மீறி விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களிடமுள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்.

தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.1,500ம், மொத்த விற்பனையாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.500ம், சில்லறை வியாபாரிகளுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.200ம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நகரில் இவற்றை பயன்படுத்தினால் பிடிபடும் ஒவ்வொரு முறையும் ரூ.50 அபராதமாக விதிக்கப்படும்.

எனவே அடுத்த 15 நாட்களுக்குள் வியாபாரிகள் தற்போது தங்களிடமுள்ள தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி விட வேண்டும். இப்பொருட்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்டறிய மாவட்ட அளவில் பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 15 நாட்களுக்கு பின்னர் தங்களது ஆய்வினை தொடங்க உள்ளனர்.

எனவே, இந்த ஆய்வுக்கு முன்னதாகவே வியாபாரிகள் தங்களிடமுள்ள தடை செயப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது. அதன்பின்னர் நடத்தப்படும் திடீர் ஆய்வுகளில் மேற்படி பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

 


Page 83 of 135