Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்க தீவிர விழிப்புணர்வு பிரச்சார இயக்கம்

Print PDF

தினமலர் 29.04.2010

பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்க தீவிர விழிப்புணர்வு பிரச்சார இயக்கம்

சேலம்: 'சேலம் மாவட்டம் ஏற்காட்டை, பிளாஸ்டிக் இல்லா சுற்றுலா தளமாக மாற்ற தீவிர விழிபுணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய, சேலம் உதவிபொறியாளர் பாண்டியன் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான ஏற்காடு பகுதியில், சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்காட்டுக்கு கோடைகாலத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பிளாஸ்டிக் கவர் உபயோகிப்பதை தவிர்க்க, சில நாட்களுக்கு முன், கலெக்டர் தலைமையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. ஏற்காட்டில் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. தடையை மீறி சுற்றுபுறச்சூழல் பாதிக்கப்படும் வகையில், யாரேனும் செயல்பட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.சேலம் மாவட்டத்திலும் பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்க, கடந்த ஞாயிறு அன்று தாதகாப்பட்டி உழவர்சந்தையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பிளாஸ்டிக் கவர்களை பெற்றுக்கொண்டு, துணி பைகளை வழங்கினோம். மேலும், பொதுமக்களிடையே சுற்றுப்புறச்சூழலை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பல்வேறு வகையில் விழிபுணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பாண்டியன் கூறினார்.

Last Updated on Thursday, 29 April 2010 06:36
 

பிளாஸ்டிக் குப்பையில்லாத கரூர் நகராட்சி கமிஷனரின் முயற்சிக்கு கவுன்சிலர்கள் ஆதரவு

Print PDF

தினமலர் 29.04.2010

பிளாஸ்டிக் குப்பையில்லாத கரூர் நகராட்சி கமிஷனரின் முயற்சிக்கு கவுன்சிலர்கள் ஆதரவு

கரூர்: கரூர் நகராட்சியில் பிளாஸ்டிக் குப்பையில்லாத பகுதியாக மாற்ற முதற்கட்ட நடவடிக்கை துவங்கப்பட தீர்மானிக்கப்பட்டது. கரூர் நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் சிவகாமசுந்தரி தலைமையில் நடந்தது. கமிஷனர் ரகுபதி, துணை தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவை: திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்த குப்பையில் பிளாஸ்டிக் கழிவு, பாதாள சாக்கடையில் பிளாஸ்டிக் 'கப்' அடைத்துக்கொள்வதால், சீர்செய்ய முதற்கட்டமாக பிளாஸ்டிக் 'கப்' பயன்பாடு தடை செய்யப்படுகிறது. தற்போது நகராட்சி பகுதி கடைகளில் உள்ள பிளாஸ்டிக் 'கப்' அனைத்தும் மே 31ம் தேதிக்குள் விற்பனை செய்ய அவகாசம் அளிக்கப்படுகிறது. ஜூன் முதல் தேதியில் இருந்து விற்பனைக்கு வைத்திருக்கும் பிளாஸ்டிக் 'கப்' அனைத்தும் முன்னறிவிப்பு இன்றி பறிமுதல் செய்யப்படும். விழாக்காலங்களிலும் பிளாஸ்டிக் 'கப்' கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது.கரூர் பஸ் ஸ்டாண்டை சுத்தமாக, தூய்மையாக வைத்திருக்க சுய உதவிக்குழுவை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. பொன்விழா நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் உருவாக்கப்பட்ட குழுவினர், கலெக்டர் நிர்ணயித்துள்ள கூலி தொகை அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர். காலை ஆறு முதல் பகல் 12 மணி வரையிலும், பகல் 12 முத ல் மாலை ஆறு மணிவரையிலும் 10 பேர் கொண்ட இரண்டு குழுக்களாக, பஸ் ஸ்டாண்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தனி சீருடை அளிக்கப்படும். திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், வடக்கு பக்கம் உள்ள பாழடைந்த கட்டிடத்தை இடித்து, மைதானத்தை சுற்றிலும் நடைப்பயிற்சி களம் மக்கள் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

நகராட்சிக்கு சொந்தமான கலவை உரக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்க 'வின்ட்ரோ ஸ்' அமைக்கப்பட்டுள்ளது. இத ற்கு கலவை உரம் தயாரிக்க தண்ணீர் தேவைப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பாதாள சாக்கடை கழிவுநீரை குழாய் மூலம் உரக்கிடங்கில் கட்டப்படும் ஆறாயிரம் லிட்டர் கொள்ளவு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சேகரித்து பயன்படுத்தப்படும்.

குழாய் மற்றும் தொட்டிக்கு 16 லட்சம் ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ளது. 5.75 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் தேவைக்கு இரண்டு ஆழ்குழாய் கிணறு அமைத்து நான்காயிரம் லிட்டர் கொள்ளவு தொட்டியில் சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக கட்டிட வளாகத்தில் மேற்கு பகுதியில் காலியிடத்தில் ஏழு கடைகள் கட்டுவதற்கு 17.5 லட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கடைகளை வைப்புத்தொகை ஏலம் மூலம் அளிக்கப்படும். மாதவாடகையாக 750 ரூபாய் நிர்ணயிக்கப்படும். மினி பஸ் ஸ்டாண்டின் வடக்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க, இங்கு 23 லட்சம் மதிப்பில் 14 கடைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு அனுமதி கட்டணம் குறித்து கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டது. நான்கு சதுர அடிக்கடைகளுக்கு 30 நாட்களுக்கு 600 ரூபாய் எனவும், 10 சதுர அடி கடைகளுக்கு 40 நாட்களுக்கு ஆயிரத்து 600 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டத

தலைவர் மீது பெண் கவுன்சிலர் ஆவேசம்: 35ம் வார்டு கவுன்சிலர் பரமேஸ்வரி(தி.மு.க.,) தன்னுடைய பகுதி பிரச்னை குறித்து பேசுகையில், ''எங்கள் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயர் மாற்றம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் கேட்டபோது, அலுவலர்கள் சிலர் அவமரியாதையாக பேசினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாயில் கழிவு நீர் கலப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டு 10 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை. அதே போல் சிமென்ட் சாலை போடப்பட்டதும், ழுமையாக முடிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது,'' என்றார். 'மிரட்டுவது போல் பேசக்கூடாது. தனிப்பட்ட முறையில் வந்தால், செய்து தருகிறேன்' என்று தலைவர் சிவகாமசுந்தரி (தி.மு.க.,) கூறினார். 'நான் நின்றுகொண்டே இருக்கிறேன், என் கோரிக்கை எதற்கும் நடவடிக்கையும் இல்லை, பதிலும் தரவில்லை,' என்று மீண்டும் பரமேஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மற்ற கவுன்சிலர்கள் தலையிட்டு அமைதி ஏற்படுத்தினர்.

Last Updated on Thursday, 29 April 2010 06:11
 

பராமரிப்பு இல்லாமல் பாழ்படும் ஓய்வு இல்லம்ஒகேனக்கல்லில் பெயரளவுக்கு பிளாஸ்டிக் தடை

Print PDF

தினமலர் 29.04.2010

பராமரிப்பு இல்லாமல் பாழ்படும் ஓய்வு இல்லம்ஒகேனக்கல்லில் பெயரளவுக்கு பிளாஸ்டிக் தடை

தர்மபுரி: ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் தடை அறிவிக்கப்பட்டு, முறையான கண்காணிப்பு இல்லாததால், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்கிறது. பராமரிப்பு இல்லாமல் பயணிகள் ஓய்வு இல்லம் பாழ்படும் நிலையுள்ளது.சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஒகேனக்கல்லில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் சீசன் களை கட்டும். கோடை விடுமுறையில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிகளில் மிதமாக விழும் நீரில் குளித்து மகிழ்வதோடு, பரிசலில் காவிரியின் அழகை ரசித்து செல்வர். இந்தாண்டு சீசன் தற்போது களை கட்ட துவங்கிய நிலையில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். சுற்றுலா முக்கியத்துவம் நிறைந்த ஒகேனக்கல்லுக்கு வரும் பயணிகள் பெரும் அளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதோடு, மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் கழிவுகளை காவிரி ஆற்றுப்படுகை மற்றும் வனப்பகுதியில் வீசி செல்வதால், நிலம், நீர் மாசு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வன விலங்குகளுக்கு கோடை காலங்களில் ஏற்படும் தீனி தட்டுப்பாட்டின் போது, பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு இறக்கும் பரிதாபமும் நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசுவை தடுக்கும் வகையில் ஒகேனக்கல்லில் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பயணிகள் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கண்காணித்து தடுத்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் வனத்துறையினர், போலீஸார் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கண்காணித்து வந்தனர்.

ஒகேனக்கல்லுக்கு செல்லும் வழியில் உள்ள மடம் மற்றும் ஊட்டமலை வனத்துறை செக்போஸ்ட்களில் வனத்துறையினர் பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்தி மறு சுழற்சிக்கு உதவாக பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி வந்தனர்.


இதே போல் ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷன் முன் போலீஸார் பயணிகள் வாகனங்களை கண்காணித்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வந்தனர். இந்த கண்காணிப்பு பணிகள் சில நாட்கள் மட்டுமே நடந்தன. மீண்டும் வழக்கம் போல் பிளாஸ்டிக் தடை என்பது பெயருக்கு மட்டுமே உள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ஆற்றுப்படுகை மற்றும் வனப்பகுதியில் வீசி செல்கின்றனர்.

இதே போல் ஒகேனக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களில் அதிக அளவில் பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டு கழிவுகள் மொத்தமாக ஆற்றுப்படுகை பகுதியில் கொட்டப்பட்டு வருவதால், நீர், நில மாசு தொடர்ந்து வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் பயணிகள் ஓய்வு இல்லம், உணவு அருந்தும் இடங்கள் பல லட்ச ரூபாயில் கட்டப்பட்டது. கட்டிய சில மாதங்கள் மட்டுமே பயணிகள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. ஓய்வு மற்றும் உணவு இல்லங்களில், இளைஞர்கள் கூட்டம் மது குடிக்க திறந்த வெளி பாராக பயன்படுத்தியதோடு, சமூக விரோத கும்பல்கள் அங்கிருந்த குடில் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியதால், திறக்கப்பட்ட சில மாதங்கள் மூடப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாமல் பயணிகள் ஓய்வு இல்லம், உணவு சாப்பிடும் கூடங்கள் மூடப்பட்டு கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் ஓய்வுக்கு எங்கும் நிற்க முடியாத நிலையுள்ளது.

முறையான பராமரிப்பு இல்லாததால், பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஓய்வு இல்லம், உணவு சாப்பிடும் இடங்கள் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. சுற்றுலா வளர்ச்சி துறை, வனத்துறையினர், மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் தடையை கண்காணித்து, பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்பு இல்லாத ஓய்வு இல்லங்களை சீர் செய்து பயணிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Thursday, 29 April 2010 06:05
 


Page 97 of 135