Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பாம்பனில் பாலிதீன் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 15.03.2010

பாம்பனில் பாலிதீன் பொருள்கள் பறிமுதல்

ராமேசுவரம், மார்ச் 14: பாம்பனில் கடைகளில் நடத்திய சோதனையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பாலிதீன் பை, கப்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ராமேசுவரம் தீவு பகுதியில் பாலிதீன் பை, கப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ம் தேதிக்கு மேல் விற்பவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், ராமேசுவரம் நகராட்சிப் பகுதியில் 90 சதவீதம் பாலிதீன் அகற்றப்பட்ட நிலையில் தங்கச்சிமடம், பாம்பனில் பெரும்பாலான வணிகக் கடைகளில் பாலிதீன் பை, கப்கள் விற்கப்படுவதாக ராமேசுவரம் தாசில்தார் முருகேசனுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து தாசில்தார் தலைமையில் ராமேசுவரம் நுகர்வோர் இயக்கத் தலைவர் அசோகன், விபத்து மீட்பு சங்க நிர்வாகி கண்.இளங்கோ உள்ளிட்ட வருவாய்த் துறையினர், பாம்பன் மார்க்கெட் தெரு, பஸ் நிறுத்தம், ரயில் நிலையம் அருகில் உள்ள வணிகக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டனர்.

இதில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பாலிதீன் பை, கப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தில் வைத்து அவை அழிக்கப்பட்டன.

Last Updated on Monday, 15 March 2010 10:06
 

குழித்துறை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமணி 11.03.2010

குழித்துறை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

மார்த்தாண்டம்
, மார்ச் 10: குழித்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் ராஜேந்திர ரத்னு கலந்துரையாடினார்.

குழித்துறை நகர்மன்றத் தலைவர் பொன். ஆசைத்தம்பி, முன்னாள் நகர்மன்றத் தலைவி டெல்பின், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அல் அமீன், உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற ஊழியர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன் படக்காட்சிகள் மூலம் பிளாஸ்டிக்கின் தீமைகளை எடுத்துரைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: 1958-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் இன்று உலகின் எல்லா மூலை முடுக்குகளில் வியாபித்து உள்ளது. இன்று மட்கும் மாசுகளின் அளவு 85 சதவிகிதத்திலிருந்து 55 ஆக குறைந்துள்ளது. ஆனால் மட்காத பிளாஸ்டிக் மாசுகள் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதில் மிக முக்கிய பங்கு வகிப்பது கைப்பைகளுக்கு பதிலாக நாம் பயன்படுத்தும் கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கப்கள் தான். இவற்றை எரிப்பதால் டையாக்சின், பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் கலந்துவிடுகிறது. இந்த வாயுக்கள் புற்று நோய்களை உருவாக்கும் தன்மையுடையவை.

குழித்துறை நகராட்சியில் தினமும் சேரும் 950 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளில் 190 கிலோ திரும்பப் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்குகளாகும்.

இவற்றைத் தனியாக சேகரித்து சிமெண்ட் ஆலைகளில் உள்ள உயர் வெப்ப எரிகலன்களில் எரித்தால் எந்த மாசும் ஏற்படாது. எனவே அதற்கான முயற்சிகளில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியின் முடிவில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

மக்களைத் தேடிவந்த ஆட்சியர்:

பின்னர் நடந்த கலந்துரையாடலில் ஆட்சியர் பல்வேறு தரப்பினரையும் நேரடியாக சந்தித்து கருத்துக் கேட்டார். குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் இருக்கைகளுக்கு சென்று அவரே மைக் பிடித்து பெண்களை பேச வைத்தார்.

அதோடு குழித்துறை நகர்மன்றத் தலைவர் பொன்.ஆசைத்தம்பி, முன்னாள் தலைவர் ஏ.எம்.வி டெல்பின், நகர்மன்ற உறுப்பனர்கள், உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன் ஆகியோரிடம் நேரடியாக சென்று கருத்துக்களை கேட்டறிந்தார். துப்புரவுத் தொழிலாளர்களை தனியாக அழைத்து அவர்களிடம் தனியாக பேசினார்.

அப்போது பிளாஸ்டிக் சேகரிப்பின் முக்கியத்துவத்தை விளக்கியதோடு ஆட்சியர் ஒரு நாள் விடுப்பில் இருந்தால் மாவட்டத்தில் யாருமே அதிகம் கவலை கொள்ளப் போவதில்லை. ஆனால் துப்புரவுத் தொழிலாளர் விடுப்பில் இருந்தால் அந்தத் தெரு ஒரே நாளில் நாற்றமெடுத்து விடும் என அவர்களின் பணியின் முக்கியத்துவதை உணர்த்தினார்.

மேலும், தொழிலாளர்களுக்கு கையுறையும் வழங்கினார். கைப்பை எடுத்துக்கொண்டு பொருள்கள் வாங்கச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கிய ஆட்சியர் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கைப்பையையும் அறிமுகப்படுத்தினார்

Last Updated on Thursday, 11 March 2010 09:44
 

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்

Print PDF

தினமணி 10.03.2010

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்

திருச்செநதூர், மார்ச் 9: சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க பொதுமக்கள் சமூக பொறுப்புணர்வுடன் முன்வர வேன்டும் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்தார்.

திருச்செந்தூர் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி மூலம் கையாளுதல் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:

திருச்செந்தூர் என்றால் இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று ஆன்மிக புகழ் பெற்ற முருகன் கோயில். மற்றொன்று குப்பைகள் நிறைந்த தூய்மைற்ற நகரம் என்பது.

இந்நகருக்கு ஆண்டுக்கு 60 முதல் 70 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இவ்வளவு சிறப்புமிக்க நகரம் பிளாஸ்டிக் குப்பைகளால் அழுக்கு நகரமாக விளங்குகிறது.

இதற்கு ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து, இந்நிலையை மாற்ற அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேரிபேக், சிறிய பிளாஸ்டிக் தம்ளர், கப் உள்ளிட்ட மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருள்களில் அதிக நச்சுத் தன்மை உள்ளது.

நாம் உணவுப் பொருள்களைப் பயன்படுத்தும்போது அதிலுள்ள பாதி நச்சுக்கள் உணவுடன் கலந்துவிடுகின்றன. இதனால் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்குரிய அபாயம் உள்ளது.

மேலும், பிளாஸ்டிக் பொருள்களை ஆங்காங்கே தூக்கி எறிவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே, கோயில் நகரான இந்நகரில் வணிக நிறுவனங்கள் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

விடுதிகள், உணவகங்கள் போன்றவற்றில் மக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேர்த்துவைத்து, பேரூராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வரும்போது அவற்றில் குப்பைகளை போட வேண்டும்.

பொதுமக்களும் படிப்படியாக பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதைத் தடுக்க சட்டம் மட்டும் போதாது. சமூக பொறுப்புடன், உள்ளார்ந்த உணர்வுடன் முன்வர வேண்டும் என்றார் அவர்.

திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் வெ..மகேந்திரன் முன்னிலை வகித்தார். கோட்டாட்சியர் இரா.பாக்கியம் தேவகிருபை, வட்டாட்சியர் இரா.இளங்கோ, காவல் துணைக் கண்காணிப்பாளர் க.நடராஜமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முருகன், மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சீனிவாசன், திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலர் துரைசிங், "நிழல்' இயக்குநர் ம.ஜெயதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.

திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மெ.வீரப்பன் வரவேற்றார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஹரிராம் நன்றி கூறினார்

Last Updated on Wednesday, 10 March 2010 09:28
 


Page 106 of 135