Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

கன்னியாகுமரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினமணி 25.02.2010

கன்னியாகுமரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

கன்னியாகுமரி, பிப். 24: கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் பிளாஸ்டிக் பொருள்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலர் ராசையா, பேரூராட்சித் தலைவர் எப். கோல்டா எழிலன், துணைத் தலைவர் பி. வின்ஸ்டன், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்தராஜன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஆட்சியர் பேசியதாவது: கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் வந்துசெல்லும் இடமாகும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துகின்றனர்.

மேலும், கன்னியாகுமரி பேரூராட்சிப் பகுதிகளில் குப்பைகளை எரிப்பதால் நச்சுப்புகை வெளியாகிறது. டயாக்ஸின், பியூரான் உள்ளிட்ட விஷத்தன்மை வாய்ந்த நச்சு வாயுக்களால் புற்றுநோய், காசநோய் பரவும் நிலை ஏற்படுகிறது.

இதனால், குப்பைகளை தெருக்களிலும், வீடுகளிலும் எரிப்பதை தடுக்க வேண்டும். மேலும், நாகர்கோவில் நகராட்சியில் இருந்து 26 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் பயன்படுத்தாத தனியார் தங்கும் விடுதிகள், கடைகளுக்கு தனி விருதுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் என்றார் அவர்.

Last Updated on Thursday, 25 February 2010 11:14
 

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: மாநகராட்சி தீர்மானம்

Print PDF

தினமணி 25.02.2010

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: மாநகராட்சி தீர்மானம்

திருநெல்வேலி, பிப். 24: திருநெல்வேலி மாநகரில் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் கா. பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் சுப. சீதாராமன்: இம் மாநகராட்சியில் ரூ. 56 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் முதல் பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. 2-வது பகுதி எப்போது நிறைவேற்றப்படும்?

மேயர்: பாதாள சாக்கடைத் திட்டத்தின் முதல் பகுதிக்கு மாநகராட்சி தன் பங்காக ரூ. 26 கோடி வழங்கியது. தற்போதுள்ள நிதிநிலைமையில், நமக்கு இது மிகப்பெரிய சுமையாக உள்ளது. ஆகையால் மாநகராட்சியின் நிதி நிலைமை ஓரளவு சீரடைந்த பின்னரும், அரசின் பங்கீடு கிடைத்த உடனும் 2-வது பகுதி திட்டத்துக்கான பணி தொடங்கப்படும்.

பிரான்சிஸ் (திமுக): 17-வது வார்டில் விதிமுறைகளுக்குப் புறம்பாக இணைப்பு பெறப்பட்டதாக 76 குடிநீர் இணைப்புகள் சில மாதங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டன. அந்த வீடுகளுக்கு மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எப்போது குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

மேயர்: மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து மாநகராட்சி முடிவு செய்ய முடியாது. அத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்.

பிரான்சிஸ்: 17-வது வார்டில் மனை வரைமுறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் மாநகராட்சி ரூ. 1.80 கோடி வசூலித்துள்ளது. இந் நிதியை அந்தந்த வார்டுகளில்தான் பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த நிதியில் எவ்வளவு அந்த வார்டு வளர்ச்சிப் பணிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது?

மாநகர பொறியாளர் ஜெய்சேவியர்: 17-வது வார்டில் தற்போது மொத்தம் ரூ. 2.72 கோடிக்கு பணிகள் நடைபெற்றுள்ளன.

ப.ரா. வெங்கடேசன் (திமுக): எனது வார்டுக்கு உள்பட்ட துப்புரவுத் தொழிலாளர் காலனியில் ஓண்டிவீரன் சிலை அமைக்க, மாநகராட்சி அனுமதியளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இருப்பினும் அங்கு சிலை வைத்தால் பிரச்னை ஏற்படும் என, உளவுத் துறை போலீஸôர், அரசுக்கு பரிந்துரைத்ததால், சிலை வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு ஓண்டிவீரன் சிலை அமைக்க மாநகராட்சி மீண்டும் பரிந்துரைக்க வேண்டும்.

மேயர்: அரசின் உத்தரவுப்படி கல்சிலை வைக்க தற்போது அனுமதி கிடையாது. எனவே, அங்கு வெண்கலச் சிலை வைக்க ஏற்பாடு செய்தால், அனுமதி பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கும்.

இதேபோல மாமன்ற உறுப்பினர்கள், தங்கள் வார்டுகளில் உள்ள அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்கக் கோரி பேசினர்.

பிளாஸ்டிக்குக்கு தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் மு. ஜெயராமன் அறிவித்தார். ஆனால் ஆட்சியரின் உத்தரவு குறித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால், அதை மாநகரில் செயல்படுத்துவதில் இடர்ப்பாடு ஏற்பட்டது.

அதேவேளையில், மறுசுழற்சிக்கு பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களை சங்கர்நகர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்க மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில், மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத 20 மைக்ரான் தடிமன் பிளாஸ்டிக் பொருள்களுக்கும், அதற்குக் குறைந்த தடிமனுடைய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்விளைவாக மாநகரில் எடை குறைந்த பிளாஸ்டிக் பொருள்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Last Updated on Thursday, 25 February 2010 11:06
 

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க திட்டம்

Print PDF

தினமணி 24.02.2010

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க திட்டம்

நாகர்கோவில், பிப். 23: நாகர்கோவில் நகரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (பிப்.26) நடைபெறவுள்ள நகர்மன்ற கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பிளாஸ்டிக்ஸ் தயாரித்தல், விற்பனை மற்றும் உபயோகப்படுத்துதல் குறித்து விதிகளை உருவாக்கி பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்கீழ் நகராட்சி திடக்கழிவுகள் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் கழிவை உருவாக்குபவர் அதை குப்பையாக வெளியே போடுவதை தவிர்க்கும் பொறுப்புடையவர் ஆவார் என்று அந்த விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை செயல்படுத்தவும், நகரில் சாக்கடை திட்டத்தை தங்கு தடையின்றி செயல்ப

டுத்தவும் விதிகளுக்கு உள்பட்டு பிளாஸ்டிக் தயாரித்தல், விற்பனை மற்றும் உபயோகப்படுத்துதல் ஆகியவற்றை நாகர்கோவிலில் வரைமுறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நகராட்சி நிர்வாகத்தின் நிபந்தனைகளை மீறி நகராட்சி எல்லைக்குள் பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் விரிப்புகள் முதலியவற்றை மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனை செய்பவருக்கும், அவற்றை உபயோகிப்பவர்களுக்கும், பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்தெடுத்து ஒப்படைக்காத தனி நபர் அல்லது வீடு அல்லது நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கவும், அந்த வியாபாரிகளிடம் உள்ள மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாக உத்தரவுப்படி இந்த விஷயத்தில் விதிகளை மீறுவோரிடமிருந்து அபராதமாக வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தொகை விவரம்:

மொத்த விற்பனையாளர்- ரூ.1000, சில்லரை வியாபாரிகள்- ரூ.500, உபயோகிóப்பவர்கள்- ரூ.100, பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒப்படைக்காத நிறுவனங்கள்- ரூ.100, பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒப்படைக்காத தனி நபர் அல்லது வீடுகள்- ரூ.25.

இவ்வாறு வசூலிக்கப்படும் அபராத தொகை நகராட்சி கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பைகள் உடனே வெட்டப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டோ நாகர்கோவில் நகராட்சியின் அலுவலகத்தில் அல்லது திடக்கழிவு மேலாண்மை கிடங்கிலோ சேமிக்கப்பட்டு இறுதியாக சிமெண்ட் ஆலைகளில் ஊடு எரிபொருளாக பயன்படுத்த அனுப்பி வைக்கப்படும்.

இந்த வகையில் நகரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கவும், அதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் நகர்மன்ற கூட்டத்தில் அனுமதி கோரப்படவுள்ளது.

நகர்மன்றம் அனுமதி அளிக்கும்பட்சத்தில் இந்த விதிகள் உடனே அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

Last Updated on Wednesday, 24 February 2010 10:34
 


Page 110 of 135