Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு; ஊடகங்களுக்கு வேண்டுகோள்

Print PDF

தினமலர் 20.02.2010

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு; ஊடகங்களுக்கு வேண்டுகோள்

சென்னை: "சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்,'' என சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசினார். இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர் சங்கம் மற்றும் சென்னை பல்கலையின் இதழியல் துறை சார்பில், "பருவ நிலை மாற்றம் - ஊடகங்களின் பங்கு' எனும் தலைப்பில் தேசிய மாநாடு, சென்னை சாந்தோமில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது: பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களின் அதிகமான பயன்பாடு, வாகனங்கள் வெளியேற்றும் புகை, தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழல் வேகமாக மாசுபட்டு வருகிறது. இதன் விளைவாக உலக வெப்பமயமாதலும், பருவ நிலை மாற்றமும் நிகழ்ந்து வருகிறது. பருவ காலத்தில் உணரப்படும் அளவுக்கு அதிமான வெப்பமும், குளிரும் இம்மாற்றத்திற்கான சான்றுகள்.

இம்மாற்றத்தை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கடுமையாக அமலாக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் தொழில் துவங்கும் போது, அவற்றால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தகவல் தொழில் நுட்ப புரட்சியின் விளைவாக இன்று, குக்கிராமங்களையும் ஊடகங்கள் சென்றடைகின்றன. "டிவி', பத்திரிகைகள், அரசியல், சமூக நிகழ்வுகளுக்கு தரும் முக்கியத்துவத்தை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தர வேண்டும். இவ்வாறு திருவாசகம் பேசினார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் பர்பல் பித்வால் பேசும் போது, "பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறப்பு குழுவில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கிராமப்புறங்களில் எல்.பி.ஜி., மற்றும் சூரிய மின்சக்தி பயன்பாட்டை பரவலாக்க வேண்டும்' என்றார். மாநாட்டு துவக்க விழாவில், இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர் சங்க தலைவர் அடோப் வாஷிங்டன், செயலர் நாதன், சென்னை பல்கலை இதழியல் துறை தலைவர் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 20 February 2010 06:24
 

எதிர்பார்ப்பு! குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டம் : சென்னையை பின்பற்றுமா திருப்பூர் மாநகராட்சி

Print PDF

தினமலர் 18.02.2010

எதிர்பார்ப்பு! குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டம் : சென்னையை பின்பற்றுமா திருப்பூர் மாநகராட்சி

"சென்னையில் அமல்படுத்தப் பட்டுள்ள குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டம், தொழில் நகரமான திருப்பூருக்கு மிக அவசியம்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி மற்றும் மாவட்ட அந்தஸ்துடன் திருப்பூர் செயல்பட்டு வருகிறது. பனியன் கம்பெனிகள் நிறைந்த திருப்பூரில், வேலைவாய்ப்பு காரணமாக வெளிமாவட்ட மக்களும் குடியேறுவதால், மக்கள் தொகையும், நெருக்கமும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பனியன் தொழில் சார்ந்த சாயப் பட்டறை, சலவைத்தொழில் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக் கின்றனர். மக்கள் தொகை பெருக் கத்தாலும் குப்பை மற்றும் சாக்கடை கழிவுகள் அதிகரித்துள்ளது. வாகனங்களின் அதிகரிப்பும் இயற் கையை பாதித்து வருகிறது. தொழில் வளர்ச்சியாலும், மக்கள் பெருக்கத் தாலும் சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்க முடியாததாகி விட்டது; இருப்பினும், கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் திருப்பூர் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இயற்கை மாசுபடுவதை தடுக்க, சென்னையில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி துவக்கியுள்ளது. முதல்கட்டமாக 20 குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த ஜன.,31 வரை, நகரில் பிறந்த 41,471 குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

தொடர்ந்து, அந்தந்த வார்டில் பிறக்கும் குழந்தைகள் பெயரில், கவுன்சிலர் தலைமையில் மாதம் ஒருமுறை மரக்கன்றுகள் நடவு செய்யப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான விளையாட்டு திடல்கள், கட்டட வளாகங் கள், பூங்காக்கள் மற்றும் மருத்துவ மனை வளாகங்களிலும் நாவல், புங்கை, பூவரசு மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

"தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சுற்றுசூழல் பாதிப்பில் சிக்கியுள்ள திருப்பூரிலும், சென்னையில் அமல் படுத்தப்பட்டுள்ளது போல், குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டத்தை கொண்டுவர வேண்டும். 2,720 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட திருப்பூர் மாநகராட்சியில், ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும், மக்கள் பெருக்கத்தின் சதவீதம் அதிகரித்து கொண்டுதான் உள்ளது. கடந்த 2001ல் மூன்றரை லட்சத்தை தொட்ட திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் தொகை, 2011ல் கணக்கெடுப்பு நடத்தும் போது, ஐந்து லட்சத்தை கடந்து விடும். அதற்கேற்ப குழந்தைகள் பிறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, குழந்தைகள் பெயரில் மரக்கன்று நடும் திட்டத்தை திருப்பூரில் அமல் படுத்தினால், இரண்டே ஆண்டில் திருப்பூரை பசுமை நகராக மாற்றி விடலாம்,' என்கின்றனர் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.
நடைமுறைப்படுத்துமா, மாநகராட்சி: நகராட்சியாக இருந்து மாநகராட்சி அந்தஸ்து பெற்றதை தொடர்ந்து, நகரை மேம்படுத்துவதற்கான முயற்சியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அரசின் நிதி உதவியை பெற்றும், மாநகராட்சியில் வசூலாகும் வரிப்பணத்தில் இருந்தும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நகரில் உள்ள ரோடுகளை அகலப்படுத்துவதற்காக, "சர்வே' பணிகள் நடந்துள்ளன. ரோடு விரிவாக்கத்திற்கு இடையூறாக இருக்கும் கட்டடங்களை இடிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதாள சாக்கடை திட் டத்தை முழுமையாக செயல்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

பூமி வெப்பமயமாதல் பற்றியும், அதனால் ஏற்படும் எதிர்கால பாதிப்புகள் பற்றியும் அறிவியல் வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். அத்தகைய எச்சரிக்கையை திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழில் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், வாகன நெரிசல் போன்றவற்றை கருத்தில் கொண்டு, நகரின் கட்டமைப்பு வசதியை மேம் படுத்தும் மாநகராட்சி நிர்வாகம், குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தையும் கொண்டு வர வேண்டும்; அப்போதுதான், காற்றை சுத்தமாக்கி சுகாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.

Last Updated on Thursday, 18 February 2010 07:27
 

அரசு விழாக்களில் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க ஆட்சியர் உத்தரவு

Print PDF

தினமணி 17.02.2010

அரசு விழாக்களில் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க ஆட்சியர் உத்தரவு

நாகர்கோவில், பிப்.16: குமரி மாவட்டத்தில் அரசு விழாக்கள், கூட்டங்கள், அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு குறித்தான நிகழ்வுகள் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. மேலும், இம் மாவட்டம், பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டமாக 1.4.2010 முதல் அறிவிக்கப்படவுள்ளது.

இதற்காக ஏப்ரல் வரையிலான அனைத்து அரசுத்துறை தொடர்பான விழாக்கள் மற்றும் கூட்டங்களில் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்ற அனைத்துத் துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, அனைத்து அரசு விழாக்களிலும் அல்லது கூட்டங்களிலும் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்தான மாவட்ட ஆட்சியரின் செய்திக்கு உரிய நேரத்தை தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் அல்லது துறை தொடர்பான கூட்டத்தின் தொடக்கத்தில் ஒதுக்கப்பட வேண்டும். அது உரிய கூட்டப் பொருளில் சேர்க்கப்பட வேண்டும்.

அரசுத் துறை விழாக்கள் மற்றும் கூட்டங்களில் பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களாலான துணிப் பைகள், சணல் பைகள், காகித பைகள், பேப்பர் கப்புகள் போன்றவற்றை மட்டுமே நினைவுப் பரிசுகளாக வழங்க வேண்டும். அரசுத் துறை விழாக்கள் மற்றும் கூட்ட அரங்கம், இடங்களில் பிளாஸ்டிக் தூக்குப் பைகள் மற்றும் கப்புகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.

அரசுத் துறை விழாக்கள் மற்றும் கூட்ட அரங்குகளில் "பிளாஸ்டிக் தவிர்ப்போம்' வாசகம் பொதிந்த இலச்சினை போதுமான அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் தவிர்ப்பு வாசகம் பொறித்த இலச்சினை வைக்கப்பட வேண்டும். அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இதை அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய இடங்களிலும், கணினித் திரைகளிலும் இதை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

Last Updated on Wednesday, 17 February 2010 09:36
 


Page 112 of 135