Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

Print PDF
தினமணி 09.02.2010

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

நாகர்கோவில், பிப். 8: நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் ஆலைகளில் ஊடு எரிபொருளாகப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ திங்கள்கிழமை தொடக்கிவைத்தார். இதையொட்டி வீடுகளுக்கு கோணிப் பைகளை அவர் வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13.1.10-ம் தேதி பிளாஸ்டிக் பொருள்களை வீடுகளில் இருந்து நகராட்சிப் பணியாளர்களால் சேகரிக்கும் நடைமுறைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் ராமவர்மபுரம் வெள்ளாளர் காலனி கிழக்குத் தெரு, கோட்டார் வாகையடி தெற்குத் தெரு, கோட்டார் குலாளர் தெருக்களில் இப் பணி தினமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் பிளாஸ்டிக் கழிவுகளை வீடுகளில் இருந்து சேகரிக்க கிறிஸ்துநகர் வாட்டர்டேங்க் சாலை, வீலர்ஸ் காலனி தெரு, பெரியவிளை ராமலிங்கதெரு ஆகியவை மாதிரித் தெருக்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சிப் பணியாளர்கள் மூலம் சேகரித்த பின்னர் அவை சிமென்ட் ஆலைகளில் ஊடு எரிபொருளாகப் பயன்படுத்தகு அனுப்பப்படும். 1.4.10 முதல் கன்னியாகுமரி மாவட்டத்தை சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு பிளாஸ்டிக் பொருள்கள் குறிப்பாக கேரிபேக்ஸ் தடை செய்யப்பட்ட மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர். நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் அ. ராஜன், நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பூ. கிருபானந்த ராஜன், நாகர்கோவில் நகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 09 February 2010 07:14
 

பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுப் போட்டிகள்

Print PDF

தினமணி 08.02.2010

பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுப் போட்டிகள்

நாகர்கோவில்
, பிப். 7: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பூ. கிருபானந்த ராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைகளில் ஊடு எரிபொருளாக பயன்பாடு குறித்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சட்ட விதிகளுக்கு உள்படாத ஒருமுறை பயன்படுத்தப்பட்டு பின்னர் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்ட மாவட்டமாக வரும் 1.4.2010 முதல் குமரி மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்படவுள்ளது.

இதன் ஒருபகுதியாக பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பவர் பாயின்ட் விளக்கப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் அனைத்து மாணவர்களும் பொதுமக்களும், சங்கங்களும் பங்கேற்கலாம்.

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு தலைப்பில் 15 முதல் 20 வரையிலான நிலை படங்களும் (சிலைடுகள்), மேலும் இடையிடையே ஒவ்வொன்றும் ஏறத்தாழ 1 நிமிஷம் வரை ஓடக்கூடிய 5 காட்சிப் படங்களும் ( விடியோ) கொண்டதாக இருக்க வேண்டும். பயன்படுத்தப்படும் நிலைபடங்கள் தெளிவாகவும், சொந்த முயற்சியில் உருவானதாகவும் இருத்தல் நல்லது.

பவர் பாயின்ட் விளக்கத்தில் சொல்லப்படும் செய்தியானது, பிளாஸ்டிக் தோற்றம், பயன்பாடு, தீமைகள், சுற்றுச்சூழல் கேடுகள், தவிர்ப்பு, மாற்றுப் பொருள்கள் வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்போர் தாங்கள் தயார் செய்த பவர் பாயின்ட் மென் நகலை குறுந்தகட்டில் பதிவு செய்தும், அதன்மீது தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் எழுதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம் 2215, பார்வதவர்த்தினி தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிக்னல் அருகில், நாகர்கோவில் என்ற முகவரிக்கு வரும் 10-ம் தேதி மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும்.

இப் போட்டியில் தெரிவு செய்யப்படும் சிறந்த முதல் 3 பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பவர் பாயின்ட் விளக்கத்துக்கு மாவட்ட ஆட்சியரால் பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும் அளிக்கப்படும் என்றார் கிருபானந்த ராஜன்

Last Updated on Monday, 08 February 2010 10:12
 

மணிமுத்தாறில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தினால் அபராதம்

Print PDF

தினமணி 04.02.2010

மணிமுத்தாறில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தினால் அபராதம்

அம்பாசமுத்திரம், பிப். 3: மணிமுத்தாறு பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பயன்படுத்தினால் ரூ. 250 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுóள்ளது.

இது குறித்து மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சித் தலைவர் சு. முருகன்சுப்பிரமணியன், செயல் அலுவலர் செ.ரா. ராஜேந்திரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

இப் பேரூராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 20 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் 20-க்கு 30 செமீ அளவுக்கு குறைவாக பைகள் தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கப்புகள், பாலிதீன் பைகள் பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தடையை மீறி பயன்படுத்தினால் ரூ. 250 அபராதம் விதிக்கவும் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றனர்.

Last Updated on Thursday, 04 February 2010 11:10
 


Page 115 of 135