Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

புதுவையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை

Print PDF

தினமணி 19.12.2009

புதுவையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை

புதுச்சேரி, டிச. 18: புதுச்சேரியில் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை துணைநிலை ஆளுநர் இக்பால்சிங் பிறப்பித்துள்ளார்.

கடைக்காரர், வியாபாரி, மொத்த வியாபாரி, சில்லறை வியாபாரி, வர்த்தகர்கள் எவரும் பாலித்தீன், பிளாஸ்டிக் தூக்குப் பைகள் போன்றவற்றை 50 மைக்ரான் தடிமனுக்குக் குறைவாக பயன்படுத்தவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் கூடாது. 8 அங்குலம் அகலம் மற்றும் 12 அங்குலம் நீளத்துக்குக் குறைவாகவும் இது இருக்கக் கூடாது. ஒருமுறை பயன்படுத்தியப் பிறகு தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், பிளேட்டுகளின் தடிமனும் 50 மைக்ரானுக்குக் குறைவாக இருக்கக் கூடாது. இதைத் தவிர பயன்படுத்தப்படும் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளேட்டுகளை உற்பத்தி செய்தவர்களின் முகவரி, தடிமன், அளவு போன்ற விவரங்கள் அதில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பிளாஸ்டிக் தடை தொடர்பான உத்தரவை அமல்படுத்த அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்:

துணை ஆட்சியர்கள், மாஹே, யேனம் மண்டல

நிர்வாகிகள், அறிவியல் சுற்றுச்சூழல்துறை இயக்குநர், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு உறுப்பினர் செயலர், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், நகராட்சி சுகாதார அதிகாரிகள், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் இந்தத் தடை உத்தரவை அமல் செய்ய வேண்டும்.

புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுவின் உறுப்பினர் செயலர் இந்தச் சட்டத்தை அமல் செய்யும் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் மற்றும் இக் குழுவின் உறுப்பினர் செயலர் ஆகியோர் விதிமுறையை மீறியோர் மீது புகார் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களால் தள்ளிப்போன தடை உத்தரவு

புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருள்கள் ஜூன் மாதம் முதல் தடை செய்யப்படும் என்று முதல்வர் வைத்திலிங்கம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து

உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஊர்வலம் நடத்தினர். அதற்குப் பிறகு ஒன்றரை மாதம் காலஅவகாசம் கொடுப்பதாக அரசு அறிவித்தது. ஆனால் காலம் கடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையில் பல்வேறு பொது நல அமைப்புகள் அரசின் கவனத்தை பல்வேறு வகையிலும் தொடர்ந்து ஈர்த்து வந்தன. இந்நிலையில் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து துணைநிலை ஆளுநர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

Last Updated on Saturday, 19 December 2009 10:52
 

ஒகேனக்கல்லில் டிச. 15 முதல் மக்காத பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை

Print PDF

தினமணி 11.12.2009

ஒகேனக்கல்லில் டிச. 15 முதல் மக்காத பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை

தருமபுரி, டிச.10: ஒகேனக்கல்லில் டிசம்பர் 15-ம் தேதி முதல் மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் தடைவிதித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பெ.அமுதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் வெளி மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் அதிக அளவு வருகின்றனர்.

அவர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருள்களால் இப்பகுதிகளில் அதிக அளவு பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்துள்ளன. இதனால் சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டுவருகிறது.

இதைத் தடுக்கும் வகையில் வனத்துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறையினர் பென்னாகரம், ஊட்டமலை சோதனைச் சாவடிகளில் சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை செய்யவுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளிடம் மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

சுற்றுச்சூழல் பாதிப்பு,பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தல்: 100 கோடி மக்கள் இடம்பெயரும் அபாயம்

Print PDF

தினமணி 10.12.2009

சுற்றுச்சூழல் பாதிப்பு,பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தல்: 100 கோடி மக்கள் இடம்பெயரும் அபாயம்

கோபன்ஹேகன், டிச.9: பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பால் வரும் காலங்களில் மனித சமுதாயம் பெரும் பாதிப்புக்குள்ளாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் தென்கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள்தான் கடும் பாதிப்புக்குள்ளாக உள்ளதாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கான சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பருவநிலை மாறுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பால் இந்த பகுதிகளில் இருந்து அடுத்த 40 ஆண்டுகளில் 100 கோடி மக்கள் இடம்பெயர்வு மற்றும் புலம்பெயரலாம்.

கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை பேரழிவுகள் இருமடங்கு அதிகரித்துள்ளன. சமீபகாலமாக பூகம்பம், வறட்சி, வெள்ளம் ஆகியவை மனித சமுதாயத்துக்கே பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

மனிதன் உயிர்வாழ்வதற்கு அவசியமான காற்று, நீர், நிலம் ஆகிய சீர்கேடும் அதிகரித்து வருகிறது. அதேபோல, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் வெப்பநிலையும் 2 டிகிரி சென்டிகிரேட் முதல் 5 டிகிரி சென்டிகிரேட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுபோன்ற காரணங்களால் மனித சமுதாயம் அதிக இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் பருவநிலை மாறுபாட்டால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இது கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடல் மட்டம் தொடர்ந்து உயருமானால் கடலுக்கு மத்தியில் உள்ள நாடுகள் மூழ்கிப்போகும் அபாயமும் உள்ளது.

இதனால் இதுபோன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் தற்போதே எதிர்கால அபாயத்தை நினைத்து பிற நாடுகளுக்கு புலம்பெயர ஆரம்பித்துவிட்டனர். எங்கெல்லாம் சுற்றுச்சூழல் அதிகரித்துள்ளதோ அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். சில நாடுகளில் சுற்றுச்சூழல் பாதிப்புமிக்க பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிப்பில்லாத பகுதி நோக்கி இடம்பெயர்கின்றனர். இதனால் ஓரிடத்திலேயே அதிக மக்கள் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழி ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மக்கள் இடம்பெயரும் போது சில நேரங்களில் மக்களிடையே மோதலும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது எதிர்காலத்தில் பெரிய பிரச்னையாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் புலம்பெயரும் மக்களுக்கான சர்வதேச அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

 


Page 124 of 135