Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

தஞ்சை நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ

Print PDF
தினமணி        06.04.2013

தஞ்சை நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ


தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அள்ளப்படும் குப்பைகள் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக் கிடங்களில் கொட்டப்படுவது வழக்கம். இந்தக் கிடங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ மேலும் பரவியதால் அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சுற்றுப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து 5 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும், நகராட்சி மற்றும் தனியார் தண்ணீர் லாரிகளும் தீயணைப்புக்காக அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் முயற்சி மேற்கொண்டாலும், அணைக்க முடியவில்லை. இதனால், தீ தொடர்ந்து இரவிலும் எரிந்ததுடன், சுற்றுப் பகுதிகளும் புகை மண்டலமாகக் காணப்படுகின்றன. தகவலறிந்த கோட்டாட்சியர் என். காளிதாஸ், நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், நகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
 

இறைச்சி கடைகளில் இருந்து 8 கன்றுகள், ஒரு எருமை மாடு மீட்பு வேலூரில் 2வது நாள் ரெய்டு

Print PDF
தினகரன்               16.03.2013

இறைச்சி கடைகளில் இருந்து 8 கன்றுகள், ஒரு எருமை மாடு மீட்பு வேலூரில் 2வது நாள் ரெய்டு


வேலூர், :வேலூர் இறைச்சி கடைகளில் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த 8 கன்றுகள், ஒரு எருமையை மீட்டு, அதிகாரிகள் கோசாலாவில் ஒப்படைத்தனர். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண்ணின் தீவிர முயற்சியால் 2வது நாளாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் விருதம்பட்டு பாலாற்றங்கரையில் 7 மாட்டிறைச்சி கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் பீப்புள் பார் அனிமல் அமைப்பின் விருதுநகர் மாவட்ட தலைவர் சுனிதா கிறிஸ்டி, இறைச்சி வாங்குவதுபோல் சென்று, இந்த கடைகளை பார்வை யிட்டார்.

கொடூர முறையில் மாடுகள் சித்ரவதை செய்து கொல்லப்படுவதாகவும், மாநகராட்சி அனுமதியின்றி இந்த கடைகள் செயல்படுவதாகவும், சுகாதார சீர்கேடு அதிகமாக இருப்பதாகவும் வேலூர் மாவட்ட கலெக்டர் சங்கருக்கு தகவல் தெரிவித்தார்.

கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள், பிராணிகள் துயர் தடுப்பு சங்க அதிகாரி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். மாடுகளை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மணி நேரமாக தனியாளாக நின்று சுனிதா கிறிஸ்டி போராடினார்.

இதில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டதால் நீண்ட இழுபறி நிலவியது. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக போலீசாருக்கு சுனிதா விளக்கினார்.

இதுதொடர்பாக விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் இரவில் புகார் செய்தார். மாடுகளை வெட்டுவோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் பிராணிகள் கொடூரமாக கொல்லப்படுவதை தடுக்கும் பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இறைச்சிக்கு வெட்டுவதற்காக கட்டி வைக்கப்பட்டுள்ள மாடுகளை மீட்க வேண்டும் என்று கூறி நேற்று 2வது நாளாக சுனிதா வலியுறுத்தினார். இதையடுத்து நேற்று மாலை 3.30 மணியளவில் மாநகராட்சி ஊழியர்கள், சுனிதா, சென்னையில் இருந்து வந்திருந்த பீப்புள் பார் கேட்டில் இன் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் அருண், முரளி, சோம்நாத் மற்றும் போலீசார் மீண்டும் இறைச்சி வெட்டும் பகுதிக்கு சென்றனர்.

ஆனால் அங்கு குறைந்த அளவிலேயே மாடுகள் இருந்தன. ஏராளமான மாடுகளை முன்தினம் இரவோடு இரவாக அப்பகுதியில் இருந்து இறைச்சி வெட்டுவோர் அப்புறப்படுத்தி, வேறு இடங்களுக்கு கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பல மாடுகள் பாலாற்றில் முட்புதர்களுக்குள் நின்றன. மாநகராட்சி ஊழியர்களால் அவற்றை பிடிக்க செல்ல முடியவில்லை.

இதனால் 8 கன்றுகள், ஒரு எருமை, ஏற்கனவே அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த 3 மாடுகள் என 12 மாடுகளை லாரியில் ஏற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடு வெட்டுவோர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் திரண்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. வாக்குவாதத்தில் ஈடுபட்டோரை போலீசார் எச்சரித்தனர்.

பின்னர் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, லாரியில் ஏற்றும் அளவுக்கு மாடுகள் ஆரோக்கியமாக உள்ளதா? என்று பரிசோதிக்கப்பட்டது. கால்நடை மருத்துவரின் ஒப்புதலின்பேரில் மாடுகள் லாரியில் ஏற்றப்பட்டன. 8 கன்றுகள், ஒரு எருமையை அங்கிருந்து மீட்டு, வேலூர் கோசாலாவுக்கு கொண்டுசென்றனர்.
 

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 50 கிலோ பறிமுதல் கோபி வியாபாரிகளுக்கு அபராதம்

Print PDF
தினகரன்         09.03.2013

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 50 கிலோ பறிமுதல் கோபி வியாபாரிகளுக்கு அபராதம்


கோபி: கோபியில் நகராட்சி சுகாதாரத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் 40 மைக்ரானுக்கும் குறைவான தரமுடைய பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

40 மைக்ரானுக்கும் குறைவான தரமுடைய பிளாஸ்டிக் பைகளை எளிதில் அழிக்க முடியாது என்பதால் தமிழகம் முழுவதும் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. கோபி நகராட்சி பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு 100 ரூபாயும், வணிக நிறுவனங்களுக்கு 500 ரூபாயும், சில்லரை விற்பனையாளர்களுக்கு 1000 ரூபாயும், மொத்த விற்பனையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து மூன்று முறை அபராதம் செலுத்தினால் வியாபார உரிமம் ரத்து செய்யப்படுவதோடு குற்ற வழக்கு தொடரப்படும் என்றும் நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை நகராட்சி ஆணையாளர் ஜான்சன் உத்தரவின் பேரில் துப்புரவு அலுவலர் ராம்குமார் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் சையத்காதர், தமிழ்ச்செல்வன், செந்தில்குமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் விஜயன், மணி, பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கடைவீதியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை வியாபார கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அதில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 50 கிலோ, 5 ஆயிரம் டீ கப்புகள், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஜான்சன் கூறும் போது, பொதுமக்களிடம் தடை செய்யப்பட்ட பைகள் இருந்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்லும் போது துணி பைகளை எடுத்து செல்ல வேண்டும் என்றார்.
 


Page 21 of 135