Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF

தினமணி           23.08.2012

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

காங்கயம், ஆக.22: காங்கயத்தில் உள்ள கடைகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை, பறிமுதல் செய்தனர்.

உலகம் முழுவதும் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்ய அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை தடை செய்து காங்கயம் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

நகராட்சி எல்லைக்கு உள்பட்ட மளிகை, தேநீர், பேக்கரிகள், டாஸ்மாக் பார் மற்றும் இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டு, உத்தரவு நகல் வழங்கப்பட்டிருந்தது.

தடையை மீறி விற்பவர்களுக்கு முதல் முறை எச்சரிக்கையும், 2-வது முறை அபராதமும், 3-வது முறை பயன்படுத்திய நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் எம்.தமிழரசு, சுகாதார ஆய்வாளர் எஸ்.சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் இணைந்து திருப்பூர் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் பார்களிலும் புதன்கிழமை தடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் 120 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது: 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு மண்ணில் மக்கிப் போகாது. பூமியில் போடப்படும் பிளாஸ்டிக் பைகளால், மழை நீர் பூமிக்குள் இறங்காமல் நிலத்தடி நீர் சேமிப்பைத் தடுக்கும். மேலும், இந்த பிளாஸ்டிக் பைகளை ஆடு, மாடுகள் உண்டு மரணம் அடைவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பூமியின் சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த நகராட்சி முற்றிலுமாக தடை விதித்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, முதல்முறை என்பதால் அவர்களை எச்சரித்துள்ளோம். தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

இதுகுறித்து கடைக்காரர்கள் கூறியது: 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை தடை செய்தவுடன், அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டோம். ஆனால், 41 மைக்ரான் என்று கூறி வியாபாரிகள் எங்களுக்கு அளிக்கும் பைகளையே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

அதிகாரிகளின் ஆய்வின் போது, அவைகள் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ளது என்பது தெரியவந்தது. மேலும், 40 மைக்ரான் கொண்ட பைகளை எப்படி கண்டுபிடித்து வாங்குவது என்பது குறித்து அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

 

சிங்கம்புணரியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF

தினமணி           23.08.2012

சிங்கம்புணரியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

சிங்கம்புணரி, ஆக. 22: சிங்கம்புணரியில் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் சிறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் புதன் கிழமை பறிமுதல் செய்தனர்.

சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் சஞ்சீவி தலைமையில் பேரூராட்சிப் பணியாளர்கள், ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறு கடைகளில் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது போன்ற பிளாஸ்டிக் பைகளை வருங்காலங்களில் பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களிடம் பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை செய்தனர்.

 

பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட்பை...மக்களை கவரும் பாக்கு மட்டை தட்டு, கப்

Print PDF

தினமலர்     23.08.2012

பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட்பை...மக்களை கவரும் பாக்கு மட்டை தட்டு, கப்

பிளாஸ்டிக் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அரக்கன். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி மனித உயிர்களுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தாலாக உருவெடுத்துள்ள பேரழிவு சக்தி. உலகம் முழுவதும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 105 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் ஆண்டொன்றுக்கு சராசரியாக 70 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர் என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக்கை தயாரிப்பதற்கான செலவு குறைவு மட்டுமல்ல நாம் விரும்பும் எந்த ஒரு வடிவத்திலும் எளிதாக இதை உருமாற்றி விடலாம். ஆனால் இதை அழிப்பது என்பது மட்டும் எளிதான காரியம் அல்ல. 40 மைக்ரோ தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மத்திய,மாநில அரசுகள் தடை விதித்தபோதும் உள்ளாட்சி நிர்வாகம் அவ்வப்போது பிளாஸ்டிக் தடை அறிவிப்பு வெளியிடுவதுடன் சரி தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்வது இல்லை. இன்று கடைகளில் வாங்கும் அனைத்து பொருட்களும் பிளாஸ்டிக் பைகளில் தான் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்களால் வீதிகளில் தாக்கி வீசப்படுவதன் விளைவாக பூமிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் புதைந்து நிலத்தில் பெய்யும் மழைநீர் பூமிக்குள் ஊடுருவதை தடுக்கிறது. இதனால் நிலத்தடிநீர் குறைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆறு, ஏரி,குளம் போன்ற பகுதிகளில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடலுக்குள் செல்வதால் கடலில் சுற்று சூழலும் பாதிக்கப்படுவதுமட்டுமல்லாமல் கடல் வாழ் உயிரினங்களுக்கு மலட்டுத்தன்மையையும்,உயிருக்கு உலை வைக்கும் நிகழ்ச்சிகளும் நித்தம் அரங்கேறி வருகிறது. அணுகுண்டால் ஏற்படும் பாதிப்பைவிட பிளாட்ஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் பயங்கர மானது என்று சுப்ரீம்கோர்ட் கூட சமீபத்தில் எச்சரித்துள்ளது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்கு மாற்றுப் பொருளாக பாக்கு மட்டையில் இருந்து தட்டு, கப்புகள் தயாரிக்கப்படுகிறது. இதனை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள செங்கோட்டை தொழிலதிபர் ஈஸ்வரன் அய்யரின் மகள் சுபலட்சுமி உற்பத்தி பொருள் பற்றி கூறியதாவது: ""இயற்கைக்கு உகந்த பாக்கு மட்டையில் தயாரிக்கப்பட்ட தட்டுகள், கப்புகள் ஆகியன மெல்ல..மெல்ல சந்தையில் நுழைய தொடங்கிவிட்டன.சுற்றுப்புற சூழலை பாதிக்காது இயற்கைக்கு கேடுவிளைவிக்காத இத்தகைய பொருட்களின் மேல் மக்களின் கவனம் திரும்பி உள்ளது. சமீப காலமாக இப்பாக்கு மர மட்டைகள் இயந்திரம் மூலம் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது.

அதாவது 12'',10"",8'',6'',4'' அளவில் தயாரிக்கப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

-கே.செல்லப்பெருமாள்-

 


Page 29 of 135