Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2 முறை ஒத்திவைக்கப்பட்டு மாநகராட்சி பட்ஜெட் 23ம் தேதி தாக்கல்

Print PDF

தினகரன் 13.08.2010

2 முறை ஒத்திவைக்கப்பட்டு மாநகராட்சி பட்ஜெட் 23ம் தேதி தாக்கல்

பெங்களூர், ஆக. 13:பெருநகர் பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் 2முறை ஒத்திவைக்கப்பட்டு இம்மாதம் 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

பெருநகர் மாநகராட்சியின் மேயராக எஸ்.கே.நடராஜ் பதவியேற்று நான்கரை மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. சதாசிவாவை நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவராக நியமனம் செய்து ஒன்றரை மாதம் கடந்துவிட்டது. இன்னும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முனிசிபல் சட்டத்தின்படி ஆண்டுக்கு ஒருமுறை சூழற்சி முறையில் மேயர், துணைமேயர் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போதைய மேயரின் பதவி காலம் இன்னும் 7 மாதங்கள் மட்டுமே பாக்கியுள்ளது.

இம்மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தாலும், அதை செயல்படுத்த சில மாதங்கள் ஆகும். தற்போதுள்ள மேயர் பதவிக்காலத்தில் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த திட்டமும் செயல்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது. கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், எந்த வளர்ச்சி திட்டம் செயல்படுத்தாமல் காலம் கடத்தப்பட்டது. தற்போது மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகம் வந்து நான்கு மாதங்கள் கடந்தும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருப்பது, நிலைக்குழு அமைப்பது உள்பட எந்த பணியும் நடக்காமல் காலம் கடத்துவது போன்ற சம்பவங்கள் மக்களிடம் கெட்ட அபிபிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சதாசிவா, கடந்த 7ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதாக அறிவித்தார். அது முடியாத பட்சத்தில் வரும் 16ம் தேதி (திங்கட்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தார். பட்ஜெட் தயாரிப்பு பணி இன்னும் முழுமை பெறாததால், வரும் 16ம் தேதி தாக்கல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரம் மூலம் தெரியவருகிறது. பட்ஜெட் நகல் தயாரித்து அதை முதல்வர் எடியூரப்பாவிடம் கொடுத்து, அவர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்பது மேயரின் முடிவாகவுள்ளது.

மாநகராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் எப்படி திட்டம் வகுக்க வேண்டும் என்பதற்கான மாதிரி பட்டியலை கடந்த 20 நாட்களுக்கு முன்பே அதிகாரிகள் தயாரித்து நிதி நிலைக்குழு தலைவர் சதாசிவாவிடம் கொடுத்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்து மாநகராட்சின் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் சதாசிவா இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக மேயர் நடராஜ், துணைமேயர் தயானந்தா, ஆணையர் சித்தையா, நிதி நிலைக்குழு தலைவர் சதாசிவா நேற்று ஆலோசனை நடத்தினர். இதனிடையில் மாநகராட்சியின் நிலைக்குழு எண்ணிக்கையை 12வரை உயர்த்தி கொள்ள ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் ஒப்புதல் வழங்கியுள்ளதை தொடர்ந்து, பட்ஜெட் தாக்கலுக்குள் நிலைக்குழு தலைவர்கள் நியமனம் செய்ய மேயர் முடிவு செய்துள்ளார்.