Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு ரூ8,488 கோடிக்கு வளர்ச்சி திட்டம் ? பணக்காரர்களுக்கு புதிய வரி ? ஏழைகளுக்கு காப்பீட்டு வசதி ? கொசு ஒழிப்புக்கு ரூ4 கோடி ? மடிலு திட்டம் விரிவாக்கம்

Print PDF

தினகரன் 31.08.2010

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு ரூ8,488 கோடிக்கு வளர்ச்சி திட்டம் ? பணக்காரர்களுக்கு புதிய வரி ? ஏழைகளுக்கு காப்பீட்டு வசதி ? கொசு ஒழிப்புக்கு ரூ4 கோடி ? மடிலு திட்டம் விரிவாக்கம்

பெங்களூர், ஆக. 31: பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூ8ஆயிரத்து 488கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்ட பட்ஜெட்டை மாநகராட்சி வரி மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் பி.என்.சதாசிவா தாக்கல் செய்தார்.

2006 நவம்பர் மாதம் பதவி காலம் முடிந்த மாநகராட்சிக்கு 41 மாதங்ககள் கழித்து கடந்த மார்ச் 28ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 198 வார்டுகளில் 111 வார்டுகளில் பாஜ வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் முதல் முறையாக பெருநகர் மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றியது. இதன் முதல் மேயராக எஸ்.கே.நடராஜ், துணை மேயராக என்.தயானந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகம் வந்த 4 மாதங்கள் கடந்த பின் மாநகரில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த வசதியாக 2010&11ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வரி மற்றும் நிதிநிலைக்குழு தலைவர் பி.என்.சதாசிவா தாக்கல் செய்தார்.

நடப்பு நிதியாண்டில் சொத்து வரி மூலம் ரூ1,500 கோடி, விளம்பரம் மூலம் ரூ100 கோடி, அக்ரமா&சக்ரமா திட்டத்தின் மூலம் ரூ750 கோடி, வர்த்தக அனுமதி மூலம் ரூ107 கோடி, வளர்ச்சி வரி மூலம் ரூ120 கோடி, நார்ம் திட்டத்தின் மூலம் ரூ1895 கோடி, மாநில நிதி கழகத்தின் மூலம் ரூ403.69 கோடி, மாநில அரசின் சிறப்பு மானியம் மூலம்

ரூ1,300 கோடி, 13வது நிதி ஆணையத்தின் மானியம் ரூ122 கோடி என்று மொத்தம் ரூ8,497.97 கோடி வருவாய் பெற்று, இதன் மூலம் ரூ8,488.54 கோடி செலவில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த பட்ஜெட்தயாரித்துள்ளார்.

மேலும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த வசதியாக அதிகமாக சொத்து வைத்துள்ளவர்கள் மீது வளர்ச்சி வரி, பெரிய அளவில் சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள் மீது சிறப்பு வரி, வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் தொலை தொடர்பு கோபுரம், டிஷ் ஆண்டனா மீது கூடுதல் வரி மற்றும் தனியார் மின்சார டிரான்ஸ்பார்மர்களை மாநகராட்சி நிலத்தில் வைத்துள்ளவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பட்ஜெட்டில் அறிவித்தார்.

நிர்வாகத்தில் வெளிப்படையான செயல்முறை, ஆன்லைன் மூலம் சொத்துவரி செலுத்தும் திட்டம், ஆன்லைன் மூலம் கட்டிட வரைப்படத்திற்கு அனுமதி பெறுவது, ஆன்லைன் மூலம் பிறப்பு&இறப்பு சான்றிதழ் பெறுவது, வெளிப்படையான வர்த்தக கொள்கை மூலம் வரி ஈட்டுவது உள்பட பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மாநகரில் காங்கிரீட் சாலைகள் அமைத்தல், திட கழிவு அகற்ற புதிய திட்டம், மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்குதல், வறுமை கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்கள், ஆட்டோ டிரைவர்கள், அரசு நிதியுதவி பெற்று சபாய் கர்மச்சாரி (காலணி தொழிலாளர்கள்) உள்பட அமைப்புச்சாரா தொழில் பிரிவில் வருவோருக்கு ஆயுள் காப்பீட்டு திட்டம், புதிய மேம்பாலம், போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் சுரங்கப்பாலம், புதிய பூங்காக்கள், அனைத்து வார்டுகளில் வளர்ச்சி திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் நடிகர் ராஜ்குமாருக்கு சிலை, பிற்படுத்தப்பட்ட மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு வசதியாக வார்டுக்கு தலா 100 என்ற வகையில் 20 ஆயிரம் இலவச சைக்கிள் வழங்குவது உள்பட பல சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ரகளை:

பட்ஜெட் தாக்கல் செய்ய மேயர் எஸ்.கே.நடராஜ், துணைமேயர் என்.தயானந்த், ஆணையர் சித்தையா ஆகியோர் பகல் 12.20 மணிக்கு கூட்ட அரங்குக்கு வந்தனர். மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் கட்டா சத்யநாராயணா அனைவரையும் வரவேற்று வரி மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சதாசிவாவை பட்ஜெட் தாக்கல் செய்யும்படி அழைத்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் என்.நாகராஜ், மாநகராட்சி மஜத தலைவர் பத்மநாபரெட்டி ஆகியோர் எழுந்து, மாநகராட்சி பதவிக்கு வந்த 4 மாதங்கள் கடந்துவிட்டது. இது வரை முழுமையாக நிலைக்குழு அமைக்கவில்லை.

மாநகராட்சி வரலாற்றில் நிலைக்குழு அமைக்காமல் இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்ததில்லை. ஆளும் கட்சி முனிசிபால் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக புகார் கூறினார்.

இதற்கு மேயர் மறுப்பு தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்து கூச்சல் எழுப்பினர். இதற்கு பாஜ கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக 15 நிமிடம் கூச்சல் குழப்பம் நிலவியது. மேயர் செய்த சமாதானத்திற்கு பின் எதிர்க்கட்சிகள் அமைதியாகி பட்ஜெட் தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து வரி மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சதாசிவா நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.