Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் பெற மேயர் தீவிரம்

Print PDF

தினகரன் 08.09.2010

பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் பெற மேயர் தீவிரம்

பெங்களூர், செப். 8: பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மறுபட்ஜெட் தாக்கல் செய்ய கோரி வருகின்றன. இந்நிலையில் பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகளின் ஒப்புதலை பெற மேயர் தீவிரமாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

பெங்களூர் மாநகராட்சியின் 2010&11ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 29ம் தேதி வரி மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் பி.என்.சதாசிவா தாக்கல் செய்தார். ரூ8,488 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டம் கொண்ட பட்ஜெட்டாக இருந்தது. இதன் மீது மாநகராட்சியில் கடந்த 4 நாட்களாக விவாதம் நடந்து வருகிறது. மேயர் தலைமையில் நேற்று நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் எம்.நாகராஜ் பேசும்போது, மாநகராட்சிக்கு வரும் வருவாயை விட 90 மடங்கு அதிகம் திட்ட வளர்ச்சி பணி மேற்கொள்வதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி திட்டம் செயல்படுத்துவதை தவிர்த்து, மாநகராட்சி மூலம் கிடைக்கும் வருவாய், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியை கொண்டு வளர்ச்சி திட்டம் செயல்படுத்த வேண்டும். தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை ரத்து செய்து, புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். எதிர்ப்பை மீறி ஒப்புதல் பெற்றால், மாநகராட்சி கூட்டத்தை ஸ்தம்பிக்க செய்வோம் என்றார்.

மாநகராட்சி மஜத தலைவர் பத்மநாபரெட்டி பேசும்போது, மாநகராட்சியில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை அடிப்படையாக கொண்டு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற்றால், ஜனநாயகத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளை மதிக்கவில்லை என்று அர்த்தமாகும். இந்த விஷயத்தில் மேயர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட் முழுக்க முழுக்க மக்களுக்கு சுமை ஏற்படுத்தும் பட்ஜெட்டாக உள்ளது. இதை வாபஸ் பெற்று புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்றார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் ஏற்று சில மாற்றம் செய்யப்படும். ஆனால், மறு பட்ஜெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மேயர் உறுதியாக தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் சத்தம் போட்டனர். பின் கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற மேயர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.