Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2010&11ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் அரசு ஒப்புதல் நிலைக்குழு தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 13.10.2010

2010&11ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் அரசு ஒப்புதல் நிலைக்குழு தலைவர் தகவல்

பெங்களூர், அக். 13: பெங்களூர் மாநகராட்சியின் 2010&2011 பட்ஜெட்டுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ரூ. 8 ஆயிரத்து 848 கோடி மதிப்பிலான நலத்திட் டங்கள் தொடங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த 2006 நவம்பர் மாதம் மாநகராட்சியின் பதவி காலம் முடிந்தது. கடந்த மே மாதம் வரை 41 மாதங்கள் மக்களாட்சி இல்லாமல் இருந்த மாநகராட்சிக்கு தேர்தல் நடந்ததின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகம் வந்துள்ளது. இழுப்பறிக்கு பின் கடந்த மாதம் ரூ.8 ஆயிரத்து 848 கோடி மதிப்பில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மாநகராட்சி நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவர் சதாசிவா தாக்கல் செய்தார். இதற்கு மாநகராட்சி கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டது. இதை மாநில அரசின் ஒப்புதலுக்காக மாநகராட்சி அனுப்பியுள்ளது.

இதனிடையில் மாநில அரசில் கடந்த ஒருவாரமாக நிகழ்ந்த சம்பவங்கள் மாநகராட்சி பட்ஜெட் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் பேரவையில் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மாநகராட்சி நிலைக் குழு தலைவர் சதாசிவா தலைமையில் குழு ஒன்று மாநில நகர வளர்ச்சிதுறை முதன்மை செயலாளரை சந்தித்து பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கும்படி கேட்டனர். இதை ஏற்று உடனடியாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது குறித்து நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவர் சதாசிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டில் 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் மீதியுள்ள 6 மாதத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.8 ஆயிரத்து 848 கோடி மதிப்பிலான திட்டங்கள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருமாதமாக மாநில அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்த பட்ஜெட்டிற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளதால், உடனடியாக வார்டு வாரியாக என்னென்ன பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து திட்டம் தயாரிக்கப்படும். இதை தொடர்ந்து வளர்ச்சி பணி மேற்கொள்ள டெண்டர் கோரப்படும். டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் குறித்த காலத்திற்குள் பணி முடிக்கும் வகையில் நிபந்தனை விதிக்கப்படும்.

மாநகராட்சியில் அதிகாரிகள் நிர்வாகம் இருந்த போது டெண்டர் மூலம் செயல்படுத்தப்பட்ட பல பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதை தவிர்க்க தற்போது பார்கோட்என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன் கையில் எடுத்துள்ள திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டுப்பிடிப்பதுடன், புதியதாக தொடங்கப்படும் திட்டங்களில் முறைகேடு நடக்காமல் தவிர்க்கப்படும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் குறைவில்லாமல் செயல்படுத்த போதிய கவனம் செலுத்தப்படும். கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பணி விரைந்து முடிக்க வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.