Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்

Print PDF

தினமணி 26.02.2010

திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்

திருப்பூர், பிப்.25: திருப்பூர் மாநகராட்சியில் 2010-11 ஆண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.8.77 கோடி பற்றாக்குறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டை மேயர் க.செல்வராஜ் தாக்கல் செய்தார். மொத்தம் ரூ.127.04 கோடி வரவும், ரூ.135.81 கோடி செலவும் இருக்கும் என்று, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவு அதிகரிப்பதால் சுமார் ரூ.8.77 கோடி பற்றாக்குறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சியில் மொத்தமுள்ள 83 ஆயிரத்து 126 வரிவிதிப்புகள் மூலம் சொத்துவரியாக ரூ.13.75 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொழில்வரி மூலம் ரூ.13.11 கோடி வருவாய் கிடைக்கும்.

பத்திரப்பதிவுத் துறையால் மாநகராட்சி எல்லைக்குள் வசூலிக்கப்படும் முத்திரைத் தீர்வை மீதான மிகுவரியில் 95 சதவீதம் மாநகராட்சிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. வணிகவரித் துறை வசூலிக்கும் கேளிக்கை வரியில் 90 சதவீதம் மாநகராட்சிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.3.70 கோடி வருவாய் கிடைக்கும்.

குத்தகை இனங்கள் மூலம் ரூ.4.38 கோடி கிடைக்கும். மாநில நிதிக்குழு பரிந்துரைப்படி ரூ.13.08 கோடியும், 12-வது நிதிக்குழு மானியம் மூலம் ரூ.2.18 கோடியும் கிடைக்கும். சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.75 லட்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் பணியாளர் ஊதியத்துக்காக ரூ.95 லட்சம் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி வாங்கிய கடனை திருப்பி செலுத்த ரூ.7.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சாலைகள், சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் கட்டுதல், தெருவிளக்கு அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட மூலதனப் பணிகளுக்காக ரூ.68.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 26 February 2010 09:03