Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பட்ஜெட் மணக்கும் மல்லிகைப் பூ

Print PDF

தினமணி 10.03.2010

மாநகராட்சி பட்ஜெட் மணக்கும் மல்லிகைப் பூ

திருச்சி, மார்ச் 9: மாநகராட்சி பட்ஜெட் மணக்கும் மல்லிகைப்பூ என்றார் மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி.

திருச்சி மாமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து பேசிய அவர் இதைக் குறிப்பிட்டார். நடைபெற்ற விவாதம்:

மூக்கன் (திமுக) : யானைக்குளம் வணிக வளாகத்தை விரைவில் கட்டி முடித்தால் இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும். பஞ்சப்பூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். வணிக வளாகங்கள் கட்டும்போது வாகன நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்க அறிவுறுத்த வேண்டும். இடம் ஒதுக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ் (காங். குழுத் தலைவர்): புனித சிலுவைக் கல்லூரி அருகே இரு சக்கர வாகனங்களை நிறுத்த இடம் அமைத்துக் கொடுத்தால், அதன்மூலம் ஆண்டுதோறும் வருமானம் கிடைக்கும். சுகாதாரப் பணியாளர்கள் இல்லாமல் எந்தத் திட்டமும் செயல்படுத்த முடியாது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தொடர்பாக தீர்க்கமான முடிவை மாநகராட்சி எடுக்க வேண்டும்.

அ. ஜோசப் ஜெரால்டு

(தேமுதிக) : கடந்த பட்ஜெட்டுகளில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்றவில்லை. இப்போது போடப்பட்டுள்ள பட்ஜெட்டில், கடன் தொகையும், மத்திய அரசின் நிதியும்தான் அதிகமாக இருக்கிறது. மாநில அரசின் நிதியும், மாநகராட்சியின் நிதியும் குறைவாகவே உள்ளன. மாநகராட்சி நிதி நிலையை உயர்த்தாமல் நமக்கென புதிய திட்டங்களை உருவாக்க முடியாது.

ரெ. அறிவுடைநம்பி ( திமுக கோட்டத் தலைவர்) : வார்டு குழுவுக்கான தொகையை ரூ. 60 லட்சத்திலிருந்து ரூ. ஒரு கோடியாக உயர்த்த வேண்டும். நிதிக்குழுவில் இதுதொடர்பாக தீர்மானம் அளித்தும், பட்ஜெட்டில் குறிப்பிடாதது வருத்தத்தைத் தருகிறது.

என். மரியம்பிச்சை (அதிமுக) : எனது உறவினரின் சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார். காய்ச்சலுக்கு மருந்தே இல்லை என்கிறார்கள். அப்படியென்ன காய்ச்சல். விஐபிக்களுக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்?

இவற்றுக்குப் பதிலளித்து ஆணையர் த.தி. பால்சாமி பேசியது:

வார்டு குழுக்களுக்கு நிதி ஒதுக்குவது முதலீட்டு நிதியைவிட அதிகமாகிவிடும். நிர்வாக ரீதியாக இது சாத்தியமில்லை.

பல்வேறு திட்டங்கள் திருச்சிக்கு வரவுள்ளன. இப்போது குறை சொல்பவர்கள் அடுத்த ஆண்டு குறைகளைத் தேட வேண்டிவரும். இது காகிதப் பூ அல்ல, உண்மையில் மணக்கும் மல்லிகைப் பூ. நிதி வரவுக்குத் தகுந்தாற்போல, புதிய திட்டங்களை நிறைவேற்றலாம். வரியில்லாத பட்ஜெட் இதுதான்.

உரிய நேரத்தில் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஊதியம் அளிக்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் முடிந்தவுடன் பணம் வழங்கப்படுகிறது. வேறெந்த உள்ளாட்சியிலும் இதுபோன்ற நடைமுறை இல்லை என்றார்.

மேயர் எஸ். சுஜாதா: அதிமுக உறுப்பினர் என். மரியம்பிச்சையின் உறவினரான சிறுவன் இறந்தது டெங்கு காய்ச்சலால் அல்ல. 4 கோட்டங்களுக்கும் பூங்காக்களை மேம்படுத்த உள்ளோம். யானைக்குளம் வணிக வளாகம் கட்டும் பிரச்னையில் வழக்கு முடிந்து இந்த ஆண்டே பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது என்றார்.

Last Updated on Wednesday, 10 March 2010 09:23