Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரிகள் இல்லா பற்றாக்குறை பட்ஜெட்: சென்னை மாநகராட்சியில் தாக்கல்

Print PDF

தினமணி 16.03.2010

வரிகள் இல்லா பற்றாக்குறை பட்ஜெட்: சென்னை மாநகராட்சியில் தாக்கல்

சென்னை, மார்ச் 15: சென்னை மாநகராட்சியில் திங்கள்கிழமை புதிய வரி விதிப்பு, வரி உயர்வு இல்லாத, பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கவுன்சில் சிறப்புக் கூட்டத்தில் 2010}2011}ம் ஆண்டுக்கான மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதி மற்றும் வரிவிதிப்பு நிலைக்குழுத் தலைவர் ராதா சம்பந்தன், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதன் விவரம்: பழைய வரி விகிதங்களை உயர்த்தாமலும், புதிய வரிவிதிப்பு இன்றியும், 122 அறிவிப்புகளைக் கொண்டதாக நிதி நிலை அறிக்கை இருந்தது. 2010}2011}ம் நிதியாண்டில் மொத்த வரவு ரூ. 1,787.90 கோடியாகவும், மொத்த செலவு ரூ. 1,789.03 கோடியாகவும் இருக்கும் என கணக்கிடபட்டுள்ளது. இதனால் ரூ. 1.13 கோடி பற்றாக்குறை வரும் என தெரிகிறது.

வருவாய் தலைப்பில் வரவு ரூ. 1023.25 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ. 1001.72 கோடியாகவும் இருக்கும். மூலதன வரவு ரூ. 646 கோடியாகவும், மூலதன செலவு ரூ. 632.50 கோடியாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வருவாய் முன்பணம் தலைப்பில் பிடித்தங்கள் ரூ. 65.31 கோடியாகவும், செலவினங்கள் 49.61 கோடியாகவும், மூலதன முன்பணம் தலைப்பில் பிடித்தங்கள் ரூ. 14 கோடியாகவும், செலவினங்கள் ரூ. 35 கோடியாகவும் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மூலதன வைப்புத் தொகை தலைப்பில் பிடித்தங்கள் ரூ. 38 கோடியாகவும், செலவினங்கள் ரூ. 27 கோடியாகவும் இருக்கும் என்றும் மூலதனக் கடன் திருப்பி செலுத்துதல் தலைப்பில் செலவினங்கள் ரூ. 43.20 கோடியாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இறுதியாக ரூ. 1.13 கோடி பற்றாக்குறையாகும்.

நிதி நிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம், சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளின் கீழ் 122 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிதி ஒதுக்கீடு: சாலைகள் மேம்பாடு, மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைத்தல், மிதிவண்டி பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் தொகுப்பு அமைக்கும் திட்டத்துக்காக, ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாலங்களை அகலப்படுத்துதல், பலப்படுத்தி அழகுபடுத்துதல் பணிக்காக ரூ. 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கட்டடங்களை பழுது பார்க்கும் பணி உள்ளிட்ட கல்வித் திட்டங்களுக்காக ரூ. 103.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை பணிகளுக்கென ரூ. 1 கோடியும், குடும்ப நலத் துறைக்கென ரூ. 1.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 16 March 2010 11:25