Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பட்ஜெட்டில் வழக்கம்போல பற்றாக்குறைதான்: கல்விக்கும், கட்டமைப்புக்கும் முக்கியத்துவம்

Print PDF

தினமலர் 23.03.2010

மாநகராட்சி பட்ஜெட்டில் வழக்கம்போல பற்றாக்குறைதான்: கல்விக்கும், கட்டமைப்புக்கும் முக்கியத்துவம்

கோவை: கோவை மாநகராட்சியின் 2010-2011ம் ஆண்டுக்கான பட்ஜெட், ரூ.21.30 கோடி பற்றாக்குறையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வி, கட்டமைப்பு வசதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் 2010-2011ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பட்ஜெட்) நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் முன்னிலையில் மேயர் வெங்கடாசலம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிதிக்குழுத் தலைவர் நந்தகுமார் நிதிநிலை அறிக்கையை படித்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2010-2011 நிதியாண்டின் மொத்த வருவாய் வரவு மற்றும் மூலதன வரவு ரூ.359.83 கோடி என்றும், மூலதன செலவுகள் ரூ.381.13 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. நிகரப் பற்றாக்குறை ரூ.21.30 கோடியாக இருக்கும். பற்றாக்குறையை சமாளிக்க, பல்வேறு வருவாய் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டை வெளியிட்டு மேயர் வெங்கடாசலம் பேசியதாவது: கோவை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 33.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, உள்ளூர் திட்டக்குழும நிதியை பயன்படுத்தி மூன்று திட்ட சாலைகளை ரூ.13.25 கோடி செலவில் நிறைவேற்ற அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி பெற்றவுடன் பணிகள் துவக்கப்பட்டு, மாநாட்டுக்கு முன் பூர்த்தி செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் மிக்க மேட்டுப்பாளையம் பிரதான ரோடு, பாரதி பார்க் பிரதான ரோடு சந்திப்பு, அரசு மருத்துவமனை முன்புறம் உள்ள சாலை ஆகியவற்றை எளிதாக கடக்க, பாதசாரிகளின் வசதிக்காக உயர்மட்ட நடைபாதை அமைக்கப்படவுள்ளது. தியாகி குமரன் மார்க்கெட், மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா மார்க்கெட் ஆகியவை நவீனமயமாக்கப்படும். மாநகராட்சியில், கட்டட வரைபட தயாரிப்பு பிரிவு துவங்கப்படும். மாநகராட்சிப் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் உடல், மன நலம் காக்க மருத்துவ பரிசோதனை, யோகா பயிற்சிகள் அளிக்கப்படும். பணியாளர்களின் குழந்தைகளுக்கு வங்கி உதவியுடன் கல்விக்கடன் வசதியும் செய்யப்படும்.

மாநகர பகுதிகளை 112 மண்டலங்களாக பிரித்து, 31 மண்டலங்களில் முதல் கட்டமாக சாலையோர மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு, ரூ.180 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் கோரப்படும். நடப்பு ஆண்டு முதல் ஒரு மண்டல பகுதிக்கு ஒரு திட்டசாலை வீதம், ஆண்டுதோறும் நான்கு திட்ட சாலைகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லையில் உள்ள எட்டு நீர்நிலைகள் தனியார் பங்களிப்புடன் புனரமைப்பு செய்து மேம்படுத்தப்படும். இருபத்து நான்கு மணி நேர குடிநீர் வினியோகம், ரோடு மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து கவுன்சிலர்களின் உதவியுடன், புகையில்லா பசுமைமிக்க மாநகராட்சியாக மாற்றியமைக்கப்படும். இவ்வாறு, மேயர் வெங்கடாசலம் பேசினார். முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலையில் பள்ளியில் சிற்றுண்டி வழங்குவது, தரமான மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ஐ.எஸ்.., தரச்சான்றிதழ் பெறுவது ஆகிய திட்டங்கள் அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளன. பட்ஜெட்டின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

போலீஸ் பாதுகாப்பு: மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் வேல்முருகன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நேற்றைய பட்ஜெட் கூட்டத்தில் வேல்முருகன் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் நடந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தையடுத்து, நேற்று பட்ஜெட் கூட்டத்தின்போது, மாமன்ற அரங்கத்தின் வெளியே போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Last Updated on Tuesday, 23 March 2010 07:54