Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பட்ஜெட்டில் பற்றாக்குறை; சமாளிப்பது எப்படி? வருவாய் பெருக்கும் புது திட்டங்கள் பட்டியல்

Print PDF

தினமலர் 23.03.2010

மாநகராட்சி பட்ஜெட்டில் பற்றாக்குறை; சமாளிப்பது எப்படி? வருவாய் பெருக்கும் புது திட்டங்கள் பட்டியல்

கோவை: நேற்று வெளியான கோவை மாநகராட்சி பட்ஜெட்டில், ரூ.21.30 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க, பல்வேறு வருவாய் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

சொத்துவரி விடுபட்ட இனங்களை கண்டறிதல்: தற்போதைய, எதிர்கால செலவின தேவைகளை சந்திக்க, அனைத்து வருவாய் இனங்களையும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி, பிற வரியினங்கள் முழுமையாக கண்டறியப்படவுள்ளன. விடுபட்ட இனங்கள், உபயோக மாற்றங்கள், கூடுதல் கட்டடங்கள் எதுவும் விடுபடாமல் துல்லியமாக வரிவிதிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. அனைத்து சொத்து வரி விதிப்புகளையும் மறுஆய்வு செய்து, வரி விதிக்கப்பட்டுள்ளதற்கும், விதிக்கப்படாததற்கும் இடையிலான இடைவெளி கண்டறியப்பட்டு, முழுமையாக வரிவிதிப்பு செய்யப்படும்.தொலைதொடர்பு கோபுரங்களுக்கு வரி: மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள், காலியிடங்களில் வாடகை அடிப்படையில் தொலைதொடர்பு மற்றும் மொபைல் போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை கட்டடங்கள், காலியிடங்களுக்கு ஒரே மாதிரியாக அரையாண்டுக்கு 15,000 ரூபாய் சொத்து வரி நிர்ணயிக்கப்படவுள்ளது. தொலை தொடர்பு கோபுரங்களை ஒழுங்குபடுத்தவும், வருவாயை உயர்த்தவும் இது உதவும். குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு: அனைத்து குடிசைப்பகுதி குடியிருப்புகள், நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் அனைத்து குடியிருப்புக்கும், வைப்புத் தொகை இல்லாமல் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும். இதனால் இலவச பொது குடிநீர் குழாய்கள் குறைந்து, வீட்டு உபயோக குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் குடிநீர் கட்டணம் உயர வாய்ப்பு கிடைக்கும்.

பாதாள சாக்கடை இணைப்புகளின் எண்ணிக்கை உயர்வதாலும், சேவைக் கட்டணம் கூடுதலாக கிடைக்கும். தொழில் வரி: தொழில் வரி விதிக்கப்படாத தகுதி வாய்ந்த தனிநபர், மத்திய, மாநில அரசு ஊழியர், சிறு,பெரு தொழில் நிறுவனங்களை கண்டறிந்து, தொழில் வரி உயர்த்த வாய்ப்பு கிடைக்கும். திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள் ளதால், இந்த ஆண்டு முதல் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு, வருவாயை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் விற்பனை: உக்கடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை, வியாபார நிறுவனங்களுக்கு குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்கு விற்பனை செய்து, இதன் மூலமும் வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகரில் அமைக்கப்படும் நவீன பயணியர் நிழற்குடைகள், பிரதான சாலைகளில் அமைக்கப்படும் பாதசாரிகளுக்கான நடைபாதைகள், பஸ் ஸ்டாண்டுகள் பராமரிப்பு, விளம்பரம், கட்டண கழிப்பிடங்கள் ஆகியவற்றில் தனியார் விளம்பரம் மூலம் வருவாய் பெருக்கப்படவுள்ளது.

Last Updated on Tuesday, 23 March 2010 08:16