Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சி ரூ.10.43 கோடி பற்றாக்குறை பட்ஜெட் : வரவு ரூ. 91.29 கோடி; செலவு ரூ. 101.72 கோடி : புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை

Print PDF

தினமலர் 25.03.2010

நெல்லை மாநகராட்சி ரூ.10.43 கோடி பற்றாக்குறை பட்ஜெட் : வரவு ரூ. 91.29 கோடி; செலவு ரூ. 101.72 கோடி : புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் நேற்று 10.43 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் 2010-2011ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் ஏ.எல் சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். இதில் வரவை பொறுத்தவரை வருவாய் மற்றும் மூலதன நிதி 61.43 கோடி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி 25.38 கோடி, கல்வி நிதி 4.47 கோடி உட்பட மொத்தம் 91.29 கோடியாகும்.
செலவை பொறுத்தவரை வருவாய் மற்றும் மூலதன நிதி 74.05 கோடி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி 26.43 கோடி, கல்வி நிதி 1.23 கோடி உட்பட உட்பட மொத்தம் 101.72 கோடியாகும். இதனால் பற்றாக்குறை 10.43 கோடியாகும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதி ஆண்டின் முக்கிய திட்டங்கள்: குடிநீர் வினியோகத்தை கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கும் 3.15 கோடியில் 'ஸ்கேடா' திட்டம், இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியின் கீழ் குறுக்குத்துறை தலைமை நீரேற்று நிலையத்தில் 3.25 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு அலகுகள், 32 லட்சத்தில் 4 கழிவு மண் அகற்றும் வாகனங்கள் கொள்முதல், 5 கோடியில் மாநகராட்சி அலுவலகத்திற்கான புதிய கட்டடம், மேலப்பாளையம் பகுதியில் 2 கோடியில் குடிநீர் வினியோக நீரேற்று பிரதான குழாய் மாற்றியமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலப்பாளையம் பகுதியில் 69 லட்சத்தில் மழை நீர் வடிகால்கள், கொண்டாநகரம் குடிநீரேற்று நிலையம் அருகில் ஆற்றுபடுகையில் 55 லட்சத்தில் 3 நீர் உறிஞ்சுகள் அமைக்கப்படுகிறது. எம்.பி தொகுதி உள்ளூர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் 11.50 லட்சத்தில் குடிநீர் வாகனம் கொள்முதல், ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழை மக்களுக்கு புதிய வீடுகள் கட்டவும், குடியிருப்புகளை மேம்படுத்தவும் 8.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிசை பகுதிகளில் 3.20 கோடியில் சாலைகள், கழிவு நீர் வடிகால், தெருவிளக்குகள், 8 பல்நோக்கு கலையரங்குகள், பகுதி 2 திட்டத்தின் கீழ் 65.30 லட்சத்தில் 3.25 கி.மீ நீள மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றி அமைத்தல், தேசிய நிதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 கோடியில் திடக் கழிவு மேலாண்மைக்கான இயந்திரங்கள் கொள்முதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாத பகுதிகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்துதல், மேலப்பாளையம் வார்டுகள் 30, 31 மற்றும் 32க்கு உட்பட்ட பகுதிகளில் 28 லட்சத்தில் குடிநீர் பகிர்மான குழாய்கள் மாற்றி அமைத்தல், 30 லட்சத்தில் 500 புதிய தெரு விளக்குகள், கல்வி நிதியின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் 1.25 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாபநாசம் நீர்த்தேக்கத்தில் இருந்து நெல்லை மாநகராட்சிக்கு தனியாக குழாய் அமைத்து நீர் கொண்டு வரும் புதிய திட்டம், பாளை இலந்தைகுளத்தில் மன மகிழ் பூங்கா, நெல்லை, பாளையில் தலா ஒரு ஆட்டிறைச்சி கூடம், மேலப்பாளையத்தில் ஒரு மாட்டிறைச்சி கூடம், சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையையும் (பார்வதி தியேட்டர் அருகில் இருந்து) குறுக்குத்துறை சாலையையும் இணைக்கும் சாலை, வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் இருந்து (பி.எஸ்.என்.எல் எதிரே) திருவனந்தபுரம் சாலை வரை (தமிழ் மையம் அருகில்) ஒரு இணைப்பு சாலை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நேரு சிறுவர் பூங்காவில் பல்நோக்கு கலையரங்கம் மற்றும் வணிக வளாகம், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் நகர்ப்புற சாலைகள் போன்றவை அமைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. புதிய திட்டங்கள், புதிய அறிவிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை. இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஏ.எல் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது, ''ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தொடர்ச்சியாக பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. மாநகராட்சியால் இவ்வளவுதான் செய்ய முடியும்'' என்று 'டென்ஷனாக' தெரிவித்தார்.

Last Updated on Thursday, 25 March 2010 09:50