Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பட்ஜெட் துளிகள்...

Print PDF

தினமணி 26.03.2010

மாநகராட்சி பட்ஜெட் துளிகள்...

சேலம் புதிய பஸ் நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் பஸ்கள் வந்து செல்லும் நேரம் மற்றும் வழித்தடம் குறித்து தெரிவிக்கும் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்படும்.

புதிய பஸ் நிலையம், 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையைக் கடக்க வசதியாக தலா ரூ.25 லட்சம் செலவில் உயர் நிலை நடைபாதை அமைக்கப்படும்.

நேரு கலையரங்கம் ரூ.25 லட்சம் செலவில் கூடுதல் வசதிகளுடன் நவீனப்படுத்தப்படும். மாநகராட்சியில் செயல்படும் நகர் நல மையங்கள், மருந்தகங்கள், தாய் சேய் நல விடுதிகளுக்கு மருந்துகள் வாங்க, இரும்பு பீரோ மற்றும் உபகரணங்கள் வாங்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்படும். மருத்துவ முகாம்களுக்கு மருந்து மற்றும் உபகரணங்களை கொண்டு செல்வதற்காக ரூ.10 லட்சம் செலவில் புதிய வாகனம் வாங்கப்படும்.

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு கூடுதல் அறைகள் கட்டுதல், மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், பிரசவ அறைகளுக்கு சலவைக் கல் பதித்தல் போன்ற பணிகளுக்காக ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகரில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புகார் பெட்டி

குப்பைகளை சேகரிக்கும் டம்பர் தொட்டிகள் 40-ம், நவீன காம்பாக்டர் எந்திரம் வாங்கவும் ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிறப்பு இறப்பு சான்று வழங்கும் மண்டல அலுவலகங்களுக்கு 10 கம்ப்யூட்டர், பிரிண்டர் வாங்க ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் மண்டல அலுவலகங்களில் புகார் பெட்டி வைக்கப்படும். நெரிசலைக் குறைக்கும் வகையில் செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட் வேறு பகுதிக்கு மாற்றப்படும். நான்கு மண்டலங்களிலும் தலா ஒரு நூலகம் அமைக்கப்படும். மாநகராட்சியின் நான்கு மண்டல எல்லைகளிலும் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்படும். பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி ரயில் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் பிரி-பெய்டு ஆட்டோ ஏற்படுத்தப்படும்.

தனியார் பூங்கா

மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள், பூங்காக்கள், சமுதாய நலக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை கட்ட முன் வரும் தனியாருக்கு மாநகராட்சி உதவி செய்யும். தனியார் சொந்த நிதியில் கட்டிக் கொடுத்து பராமரிக்கும் அந்த கட்டுமானங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு மாநகராட்சி வசம் வரும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்.

Last Updated on Friday, 26 March 2010 06:45