Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவில்பட்டி நகராட்சியில் ரூ.11.12 கோடிக்கு பட்ஜெட் : உத்தேச திட்ட மதிப்பீடு செய்து தீர்மானம்

Print PDF

தினமலர் 01.04.2010

கோவில்பட்டி நகராட்சியில் ரூ.11.12 கோடிக்கு பட்ஜெட் : உத்தேச திட்ட மதிப்பீடு செய்து தீர்மானம்

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் சுமார் 11.12 கோடி ரூபாய் வரும் நிதியாண்டின் வரவு செலவு பட்ஜெட் தொகையாக உத்தேச திட்ட மதிப்பீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு கோவில்பட்டி நகராட்சி சேர்மன் மல்லிகா தலைமை வகித்தார். துணை சேர்மன் சந்திரமவுலி முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் சேர்மன் மல்லிகா கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அப்போது வரும் நிதியாண்டில் கோவில்பட்டி நகராட்சியின் வரவு செலவு பட்ஜெட் தொகையாக உத்தேச திட்ட மதிப்பீடு குறித்து தெரிவித்தார்.

இதில் வரும் நிதியாண்டின் பட்ஜெட் தொகையாக வருவாய் மற்றும் மூலதன நிதி வகையில் வரவாக 8 கோடியே 90 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், செலவு அதே அளவிற்கும், குடிநீர் மற்றும் வடிகால் நிதி வகையில் வரவாக 2 கோடியே 21 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயும், செலவு அதே அளவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் வரும் நிதியாண்டில் கோவில்பட்டி நகராட்சி பட்ஜெட் தொகையாக ரூ.11 கோடியே 12 லட்சத்து 32 ஆயிரம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விவாதம் நடந்தது. இதில் வழக்கம்போல் பல கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் துவங்கிய பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், குடிநீர் விநியோகம் சீராக இல்லையென்றும், வாறுகால் சுத்தம் செய்யப்படவில்லை என்றும், தெருவிளக்கு எரியவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர். முக்கியமாக கவுன்சிலர் தவமணி நகராட்சிக்கு ஜெனரேட்டர் வாங்க தீர்மானம் நிறைவேற்றி சுமார் இரண்டாண்டுகள் ஆகியும் வாங்கவில்லை என்றதற்கு, உடனடியாக ஜெனரேட்டர் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் தெரிவித்தார். அதிமுக கவுன்சிலர் ராமர் கோவில்பட்டி நகராட்சி இரண்டாவது பைப்லைன் திட்டம் குறித்து பேசும்போது, வெளியே இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்கு பல கட்சியினர் நன்றி தெரிவித்து இருப்பதால், திட்டம் உண்டா இல்லையா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு இரண்டாவது பைப்லைன் திட்டம் ஏற்கனவே வந்த கடிதத்தின் படி இல்லையென்றாகி விட்ட நிலையில், அதை நிறைவேற்ற லோனுக்காக முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் கவுன்சிலர் கனகராஜ் வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சமுதாய நலக்கூடத்திற்கு கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு பொது நிகழ்ச்சிக்கும், இலவச கலர்டிவி வைப்பதற்கும் கட்டணம் கேட்பதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் மற்றும் சேர்மன் தெரிவித்தார். தவிர கவுன்சிலர் ராஜகுரு பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ரோடுகளில் மாடுகள் திரிவதை கட்டுப்படுத்துவது குறித்தும், கவுன்சிலர் தமிழரசன் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வழங்குவது மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர் பற்றாக்குறையை நீக்குவது குறித்தும், கவுன்சிலர் கருணாநிதி நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வருவது குறித்தும் கேள்வி எழுப்பிய போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் மற்றும் சேர்மன் தெரிவித்தனர்.

கூட்டத்தில் கோவில்பட்டி நகராட்சி பொறியாளரும், (பொறுப்பு) ஆணையாளருமான செய்யது அகமது, நகர அமைப்பு அலுவலர் சேதுராஜன், வருவாய் அலுவலர் சிவராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 01 April 2010 06:42