Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் பற்றாக்குறை ரூ.61 லட்சம்

Print PDF

தினமணி 01.04.2010

வேலூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் பற்றாக்குறை ரூ.61 லட்சம்

வேலூர், மார்ச் 31: வேலூர் மாநகராட்சியில் 2010-2011ம் ஆண்டுக்கான பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. புதிய பட்ஜெட்டில் ரூ.61 லட்சம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ப.கார்த்திகேயன் தலைமை வகித்து, நடப்பாண்டுக்கான புதிய நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் குடிசைவாழ் மக்கள், நலிவடைந்தோர் என அனைத்து தரப்பு மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

2010-2011ம் ஆண்டில் மொத்த மூலதன வரவு ரூ.72.03 கோடி. மூலதனச் செலவு ரூ.72.64 கோடி. நிகர பற்றாக்குறை ரூ.61 லட்சம்.

மாநகராட்சி பகுதியில் விடுபட்ட தொழில்துறையினரைக் கண்டறிந்து, தொழில் வரி விதிப்பதன் மூலமும், புதிதாக வரன்முறைப்படுத்தப்பட்ட மனைப்பிரிவுகளில் காலிமனைகளுக்கு வரிவிதிப்பதன் மூலமும், அரசின் கூடுதல் நிதியுதவி மூலமும் இந்த பற்றாக்குறை நிதி சரி செய்யப்படும்.

கடந்த 2009-2010ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், வேலூர் மாநகராட்சியில் வருவாய் இனங்களும், செலவினங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு ரூ.28.33 கோடியாக இருந்த மொத்த வருவாய், இந்த ஆண்டு ரூ.72.03 கோடியாக அதிகரித்திருக்கிறது. அதேபோல, கடந்த ஆண்டு ரூ.24.29 கோடியாக இருந்த செலவினங்கள், ரூ.72.64 கோடியாக அதிகரித்திருக்கிறது.

புதைசாக்கடைக்கு பெரும்பங்கு செலவு

மாநகராட்சி வருவாய் ரூ.72.64 கோடியில் புதைசாக்கடைத் திட்டப் பணிகளுக்கு மட்டும் ரூ.30 கோடி செலவிடப்படுகிறது. இத்திட்டம் ரூ.55 கோடியில் தயாரிக்கப்பட்டு, முதல்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பொதுமக்களின் பங்களிப்புத் தொகை ரூ.8.93 கோடி. எனவே, மாநகராட்சியின் வளர்ச்சி கருதி, பொதுமக்கள் தாங்களாக முன்வந்து இந்த பங்களிப்புத் தொகையை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர, ஆரம்பக்கல்விக்காக ரூ.55 லட்சம், சாலைகள், தெருவிளக்குகள், பாலங்கள், வடிகால்கள், கட்டடங்கள், மருத்துவமனைகளுக்காக ரூ.12.17 கோடி செலவிடப்படுகிறது.

சொத்துவரி, தொழில்வரி

2010-2011ம் ஆண்டில் சொத்துவரி ரூ.80 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துவரி வசூலைத் தீவிரப்படுத்த மாநகராட்சி சார்பில் நகரில் 4 இடங்களில் கணினி வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாள்களிலும் இங்கு வரி வசூல் மேற்கொள்ளப்படுகிறது.

நகரில் விடுபட்ட 1,200 இடங்களுக்கு தொழில்வரி விதிக்கப்படும். திருந்திய தொழில் வரி விகிதம் மற்றும் கூடுதல் வரி விதிப்புகள் மூலம் கூடுதலாக ரூ.18 லட்சம் வருவாய் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க..:

வறட்சி காலத்தில் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்க, புதிய கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க ரூ.1.20 கோடிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ரூ.55 லட்சத்தில் 50 மின்விசை பம்புகளுடன் கூடிய ஆழ்குழாய்க் கிணறுகள், ரூ.20 லட்சத்தில் 4 கி.மீ. தூரத்துக்கு பகிர்மான குழாய்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள் மேம்பாடு

நகர பேருந்து நிலையத்தை ரூ.40 லட்சத்தில் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கான இருக்கைகள், மின்சார வசதிகள், உயர்மின் கோபுரங்கள், தரைகள், சுவர்களுக்கு டைல்ஸ் பொருத்துதல், நவீன கழிப்பிடங்கள், குடிநீர் வசதி ஆகியவை செய்து தரப்படும்.

புறநகர்ப் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தி, அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்து நிலையமாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அரசின் நிதியுதவி பெற்று வரும் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என புதிய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 01 April 2010 10:23