Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மின்சார செலவை கட்டுப்படுத்த ரூ.1.95 கோடியில் ஹலாய்டு விளக்குகள் அமைப்பு

Print PDF

தினமணி 22.07.2009

மின்சார செலவை கட்டுப்படுத்த ரூ.1.95 கோடியில் ஹலாய்டு விளக்குகள் அமைப்பு

திருப்பூர், ஜூலை 21: மின்சார செலவை கட்டுப்படுத்த திருப்பூர் மாநகர் முழுவதும் ரூ.1.95 கோடியில் ஹலாய்டு விளக்குகள் பொருத்தும் பணி மாநகராட்சி சார்பில் வேகமாக நடந்து வருகிறது.

நகராட்சியாக இருந்த திருப்பூர் கடந்த 2008 ஜனவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து மாநகர வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் மாநகராட்சி மின்சார செலவை குறைக்க மாநகரம் முழுவதும் ஹலாய்டு விளக்குகளை அமைக்க திட்டமிடப்பட்டது. இவ்விளக்குகள் சாதாரண விளக்குகளைக் காட்டிலும் 50 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கக் கூடியது.

அதன்படி, அவிநாசி சாலை, பல்லடம் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை, தாராபுரம்-காங்கயம் சாலைகளை இணைக்கும் ரிங் ரோடு என மாநகர் முழுவதும் ரூ.1.95 கோடியில் 694 ஹலாய்டு விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஊத்துக்குளி சாலை, அவிநாசி சாலை, தாராபுரம்-காங்கயம் சாலைகளை இணைக்கும் ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 160 விளக்குகள் பொருத்தப்பட்டு கடந்த 6 மாதங்களாக பயன்பாட்டில் உள்ளன. தற்போது பல்லடம் சாலையில் ரூ.39.15 லட்சத்தில் 148 விளக்குகளும், காங்கயம் சாலையில் ரூ.38.45 லட்சத்தில் 90 விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பயன்பாடு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடந்தது. மேயர் க.செல்வராஜ் தொடங்கி வைத்தார். துணைமேயர் கே.செந்தில்குமார், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, பொறியாளர் கௌதமன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

உஷா தியேட்டர்-காங்கயம் சாலை வரையும், உஷா தியேட்டர்-அரசு பஸ் பணிமனை வரையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளதால் அப்பகுதியில் ஹலாய்டு விளக்குகள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவிநாசி சாலையில் எஸ்ஏபி தியேட்டர் முதல் காந்தி நகர் வரையில் 86 விளக்குகளும், ஊத்துக்குளி சாலையில் கருமாரம்பாளையம் முதல் மண்ணரை வரை 40 விளக்குகளும் பொருத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ஒரு வாரத்துக்குள் பணி முடித்து அவ்விளக்குகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாநகராட்சி மின்சார பிரிவு கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.